Sunday, January 24, 2021

இலங்கையின் கபினற் தர தூதுவர் நியமனத்திற்கு 'No' சொன்ன இந்தியா; கனடா, சவுதி தூதுவர் நியமனங்களிலும் இழுபறி

 

                                             மிலிந்த மொரகொட

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம்  முக்கியமான வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக பரிந்துரைத்தவர்களில்  மூன்று முக்கிய நாடுகளுக்கான நியமனங்கள் தற்போது சிக்கலாக மாறியுள்ளன.  இதில் முக்கியமாக அண்டைநாடான இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக பிரேரிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் பாத் பைன்டர் நிறுவனத்தின் தலைவருமான மிலிந்த மொரகொட விடயம் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. 

மிலிந்த மொரகொடவை இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கும் ஜனாதிபதி கோட்டாபயவின் யோசனைக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு செப்டம்பர் 25ம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்தது. 

வெளியுறவு அமைச்சின் வரலாற்றில் முதற்தடவையாக கபினற் அமைச்சர் தரத்திலான பதவியாக இந்தப்பதவி அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைவாக கபினற் அமைச்சருக்கு நிகரான தரத்திலான பதவியுடைய தூதுவர் ஒருவரை நியமிக்க முடியாது என இந்தியா அறிவித்துள்ள என அறியமுடிவதாக முன்னணி ஆங்கிலப்பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்னான இலங்கைத்தூதுவராக பொறுப்பேற்பதில் தனக்கு நாட்டமில்லை என மிலிந்த மொரகொடவும் தற்போது அறிவித்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் இந்தியாவிற்கான தூதுவர் பதவிக்கு தகுதியானவர்களை  இலங்கைத்தரப்பு தேடிக்கொண்டிருப்பதாக அறியமுடிகின்றது.  அண்மையில் இலங்கைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்தபோது ஜனாதிபதி கோட்டாபய உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்தபோது அந்தச்சந்திப்புக்களில் மிலிந்த மொரகொட பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

                                                     சுமங்கல டயஸ் 


இதேவேளை கனடாவும் புதிய தூதுவர் நியமனத்திற்கு அங்கீகாரமளிக்க தாமதம் காண்பித்துவருவதாக அறியமுடிகின்றது. ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் சுமங்கல டயஸை கனடாவிற்கான தூதுவராக இலங்கை அரசாங்கம் நவம்பர் 9ம்திகதி அறிவித்திருந்தது. எனினும் கனடா இன்னமும் இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.  இலங்கை தொடர்பான ஜெனிவா தீர்மானத்தின் முக்கிய நாடுகள் குழுவின் அங்கத்தவரான  கனடா இலங்கையில் பாதுகாப்புத்துறை சீர்திருத்தம் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

                                                     அஹமட் ஏ. ஜவாத்


இதேபோன்று சவுதி அரேபியாவிற்கான தூதுவராக இலங்கை அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் 9ம் திகதி நியமிக்கப்பட்ட அஹமட் ஏ. ஜவாத்தின் நியமனத்தை இன்னமும் சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை.  சவுதி அரேபியாவிற்கான இலங்கைத்தூதுவராக  இலங்கைத்தூதுவராக முன்னரும் ஜவாத் பதவிவகித்திருந்தார்.   இலங்கைப்பணிப்பெண் ரிஸானா நவீக் விடயத்தில் சவுதிக்கும் இலங்கைக்கு இடையே நிலவிய இராஜதந்திர  பதற்ற நிலையின் போது ஜவாத்  முக்கிய பங்காற்றியிருந்தார். 

நான்கு மாத வயதுடைய நயிவ் அல் குதுபாய் என்ற குழந்தையை கொலைசெய்ய குற்றச்சாட்டில் 2013ம்ஆண்டு ஜனவரி 9ம் திகதி தலை துண்டிக்கப்பட்டு ரிஸானா நவீக் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போது சவுதிக்கான தூதுவராக இருந்த ஜவாத் நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment