உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையின் படி இலங்கை தற்போது சிங்கப்பூரை விட அதிக தொற்றாளர்கள் கொண்ட நாடாக மாறியுள்ளது.
ஜனவரி 28ம்திகதி தரவுகளின் அடிப்படையில் 59,425 ஒட்டுமொத்த தொற்றாளர்களுடன் உலக அளவில் சிங்கப்பூர் 93வது இடத்திலுள்ள அதேவேளை இலங்கை 61,045 தொற்றாளர்களுடன் 91வது இடத்திலுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகத்தொடங்கியது முதலாக ஒரு நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய நாளாக நேற்றைய தினம் அமைந்தது. நேற்று மாத்திரம் 892 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஒட்டுமொத்த தொற்றாளர்கள் 61,045பேரில் இதுவரை 54 ,435 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்தும் 6,854 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
இலங்கையில் ஏற்கனவே 290 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், நேற்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 297 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் இவ்வாறு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்திவரும் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் கொவிட-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள், பரிசோதனை சதவிகிதங்களை அடிப்படையாக கொண்டு அவுஸ்ரேலியாவின் Australian think tank the Lowy Institute நிறுவனம் நடத்திய ஆராய்வுகளின் பிரகாரமே இலங்கைக்கு 10ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்திவரும் நாடுகளில் நியூசிலாந்துக்கு முதலிடம்.
100 நாடுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த பகுப்பாய்வில் வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த விடயத்தில் ஆஸ்திரேலியா 08ஆவது இடத்திலும் இலங்கை 10ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான தொற்றாளர்கள் கண்டறிப்படும் அமெரிக்கா 94ஆவது இடத்தில் உள்ளது. இந்தோனேசியாவும் இந்தியாவும் முறையே 85 மற்றும் 86ஆவது இடங்களில் உள்ளன.
இந்தப் பட்டியலில் Australian think tank the Lowy Institute நிறுவனம் சீனாவை தரப்படுத்தவில்லை. சீனாவின் உண்மையான தரவுகளை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல் நிலைமையால் இவ்வாறு தரப்படுத்தப்படவில்லை.
பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட்-19 வைரஸை மிகவும் திறம்பட கையாண்டுள்ளதாக Australian think tank the Lowy Institute நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment