Tuesday, January 26, 2021

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை உறுதிசெய்ய இந்தியா கையாண்ட 'கடும் பேரம்': வெளியாகின தகவல்கள்

 



கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் தமக்குரிய பங்குகளை உறுதிசெய்துகொள்ளும் விடயத்தில் இந்தியா கடுமையான பேரம்பேச்சை முன்னெடுத்ததான தகவலை நிக்கே ஏசியா என்ற சர்வதேச சஞ்சீகைக்காக  எழுதியுள்ள கட்டுரையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் மார்வன் மாக்கன் மார்க்கார் வெளிக்கொண்டுவந்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் தமக்குரிய பங்குகளுக்கு உரிமைகோரி இந்தியா பிரயோகித்த அழுத்தத்திற்கு இலங்கையின் கடும்போக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அடிபணிந்தார் என அந்தக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது  திட்டவட்டமான முறையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வதற்கான விதிமுறைகளை  வெளிப்படுத்திய நிலையிலேயே ஜனாதிபதி ராஜபக் ஷ தனது இறுக்கமான முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரென  மார்க்கார் மேலும்  தெரிவித்துள்ளார். 

பிராந்திய பூகோள அரசியல் கரிசனைகளை கருத்தில் கொண்டே  இந்தத்திட்டத்தினை முன்னெடுக்க  இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதாக  ராஜபக்ஷ அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மார்க்கார் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளார். 



இந்தியாவினால் பிரயோகிக்கப்பட்ட கடும் அழுத்தங்களையடுத்து தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதற்கு அமைய கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 51% மான பங்குகளை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அதேவேளை 49% மான பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனம் கொண்டிருக்கும்.  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுக்கும் இந்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமான  உறவுகளைப் பேணிவருபவர் என அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. 

இந்த துறைமுக உடன்படிக்கை இந்தியாவிற்கு கிடைப்பதை உறுதிசெய்துகொள்வதற்கு  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் காண்பித்த கடும் அழுத்த இராஜதந்திரமானது பிராந்திய வல்லரசு என்ற தனது ஆதிக்க வலுவை இந்தியா தேவையான நேரத்தில்  தேர்ந்து பிரயோகிக்கும் என்பதை கோடிட்டுக்காண்பிப்பதாக அமைந்திருக்கின்ற என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்பதை கொழும்பை தளமாக கொண்டிருக்கும் இராஜதந்திர சமூகத்தினர் புரிந்துள்ளதாகவும் மார்க்கார் தனது கட்டுரையில் விபரித்துள்ளார். 

ஏனைய தரப்பினரை விட இந்தியாவின் நலன்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்பதை  இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதற்கு இந்தியாவிடம் போதுமான காரணிகள் இருப்பதாக நிக்கே ஏசியா சஞ்சீகைக்கு இராஜந்திர வட்டாரமொன்று உறுதிசெய்துள்ளது.  '  'இந்திய -இலங்கை உறவு எதிர்காலத்தில்  எவ்வாறு அளவிடப்படும் என்பதற்கான புதிய கேந்திர அளவுகோலாக கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் மாறியுள்ளது' எனவும் இராஜதந்திர தரப்பு கூறியுள்ளது. 

இலங்கை விடயத்தில் இந்தியா தற்போது கையாளத்தொடங்கியிருக்கும் கடும் அழுத்த இராஜதந்திரமானது தனது கொல்லைப்புறத்திலுள்ள கேந்திர முக்கியத்தும் மிக்க தீவில் தனது ஆசிய பேரெதிரியான சீனாவிடம் இழந்துவிட்ட பாகங்களை மீட்டெடுக்கும் பெரும் திட்டத்தின் கீழ் அமைந்துள்ளதென வெளிவிவகார அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இந்தியா தெற்காசியாவில் பெரும் ஆதிக்க சக்தியாகவுள்ளது. சீனா போன்ற நாடுகள் தமது செல்வாக்கை முன்னிறுத்துவதற்கு அது இடமளிக்க மாட்டாது என  புது டில்லியைத் தளமாகக் கொண்ட ஓ.பி. ஜிந்தால் குளோபல்  பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் கேந்திரக் கற்கைகளுக்கான பேராசிரியர் பங்காஜ் குமார்  ஜா தெரிவிக்கின்றார். 

மாலைதீவு இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் அவற்றின் மற்றவர்களின் கருத்துக்களையும் விருப்பங்களையும் உள்வாங்குகின்ற வகையில் இந்தியா காண்பித்த நிலைப்பாடு காரணமாக அளவுக்கதிகமான கேந்திர நிலப்பகுதி சீனாவிற்கு சென்றுவிட்டதாக இந்தியா கருதுகின்றது. இதன்காரணமாக சீனா தளங்களை நிர்மாணித்துவருகின்றது. சில தருணங்களில் இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள துறைமுகங்களில் அதிகமான நேரம் சீனாவின் கடற்படைக் கப்பல்கள் தரித்துநிற்கின்ற வழிகோலியுள்ளது. எனவேதான் தற்போது தனது நலன்களை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா கடும் அழுத்த ஆதிக்க நிலைப்பாட்டை முன்னெடுக்கின்றது என பேராசிரியரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. 




கொழும்பு துறைமுகம் ஏற்கனவே கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தை கொண்டுள்ளது.  சீனாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலதனத்தில் இது நிர்மாணிக்கப்பட்டது. 2013ம் ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த முனையத்தின் 85 சதவீதமான பங்கு சீனாவிற்கு சொந்தமாக உள்ள அதேவேளை கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு 15 சதவீதமான பங்குகளே உள்ளன.இந்த முனையத்திற்கு 2014ம் ஆண்டில் சீனாவின் நீர்மூழ்கி முன்னறிவித்தல் ஏதுமின்றி வந்துசென்றமை இலங்கை அரசாங்கம் சீனா பக்கம் சாய்ந்துள்ளதை அம்பலப்படுத்தியிருந்தது. 





No comments:

Post a Comment