இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லே அம்மையார் பிரசுரித்துள்ள அறிக்கை முன்னெப்போதுமில்லாத வகையில் மிகவும் பாரதூரமானதாக அமைந்துள்ளதாக ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்ட சிரேஷ்ட இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். குளோப் தமிழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
மனித உரிமைகள் ஆணையாளர் இரண்டு விடயங்களை முக்கியமாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் அவர் அதில் ஒன்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டுவருகின்ற போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறலாக உள்ளது என குறிப்பிட்டார். மற்றைய விடயம் முக்கியமானது என குறிப்பிட்ட அவர் போர்க்காலத்தில் கூட யாருமே கூறாத விடயமாக உள்ளது. அதுதான் இலங்கை அரசின் கட்டமைப்பு மாற்றம் பற்றியதாகும். அதாவது ஜனநாயக அரசு என்பது இராணுவமயப்படுகின்றது என்ற விடயம் முக்கியமானது என அவர் கூறினார்.
தற்போது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் என உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரைத்துள்ள விடயங்களில் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் வெளிநாடுகளின் இலங்கையில் போர்க்குற்றம் இழைத்ததாக நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தல் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் அவர்களது சொத்துக்களை முடக்குதல் ஆகியன இலங்கைக்கு பாரிய சவாலாக மாறும் அபாயமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தற்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சிலி நாட்டின் ஜனாதிபதியாக இருமுறை இருந்தவர் என்ற வகையில் உலகெங்கும் பெரு மரியாதைக்குரியவராக கருதப்படுகின்றார். அவரது தந்தை சிலியின் இராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர். ஜனநாயக வாதியான அவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். தனிப்பட்ட ரீதியில் அவர் இந்த விடயங்களை நன்கறிந்தவர். ஆணையாளரது பரிந்துரைகளை உலகிலுள்ள பாராளுமன்றங்கள் செனற் மேலவைகள் ஆராயத் தொடங்கினால் இலங்கையிலுள்ள ஆட்சியாளர்களும் இராணுவத்தினரும் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறினார்.
No comments:
Post a Comment