யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 8ம் திகதி இரவோடு இரவாக தகர்க்கப்பட்ட செய்தியறிந்த இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அதுதொடர்பாக கடுமையான கரிசனையை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் முன்னணி ஆங்கிலப்பத்திரிகை சண்டே டைம்ஸ் அதன் அரசியல்பத்தியில் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற மறுதினமான 9ம்திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தொடர்புகொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்தியத்தூதரகம் பகிரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. அப்போது பிரதமர் தனது தேர்தல் தொகுதியான குருணாகலையில் இருந்ததாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு திரும்பியதையடுத்து விஜேராமயிலுள்ள அவரது வாசஸ்தலத்திற்கு விரைந்த இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே, யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டிருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவடைந்த மறுதினம் நிகழ்ந்த இந்தச்சம்பவம் ,தமிழ் நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெடுவதற்கு வழிகோலும் எனவும் பிரதமரிடம் இந்தியத்தூதுவர் கூறியிருந்ததாக அறியமுடிவதாக அப்பத்திரிகையின் பத்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியத்தூதுவரின் கரிசனையை அடுத்து பிரதமர் உடனடியாக செயலில் இறங்கியிருந்தார். பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜாவும் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வரையில் ஒருவரொருவருடன் தொடர்பாடலில் இருந்து பதற்றநிலையை தணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே மாணவர்கள் குழுவினர் மற்றுமொரு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகர்க்கப்பட்ட நினைவுத்தூபியில் இருந்த கற்களைக்கொண்டு திங்களன்று அடையாள அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டதுடன் கடந்த வெள்ளியன்று நினைவுத்தூபியை முறைப்படி அமைப்பதற்கான அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பமாகி தற்போது நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஆங்கிலப்பத்திரிகையின் பத்தியின் படி ஜனாதிபதி செயலகம் தூபி தகர்ப்பு தொடர்பாக அறிந்திருக்கவில்லை எனவும் யார் தூபியை தகர்ப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியது என வினவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொடர் அதிர்வலைகளுக்கு வழிகோலிய தூபி தகர்ப்பு தொடர்பாக குறித்த பத்திரிகைக்கு கருத்துவெளியிட்டுள்ள துணைவேந்தர் 'தாம் அனைத்து விடயங்களையும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு விலாவாரியாக விபரித்துவிட்டேன்.'என்று குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் தூபி தகர்க்கப்பட்டமை முதற்கொண்டு புதிய தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டமை வரையான 60 மணி நேரத்தில் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் கணிசமான அளவிற்கு கேடு நடந்துமுடிந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள முன்னணி ஆங்கிலப்பத்திரிகை இதுதேசிய பாதுகாப்பிலுள்ள பாரதூரமான பலவீனங்களை காண்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிவைத்திருந்த இரகசிய அறிக்கையே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பிற்கான காரணம் என தாம் அறிந்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த இரகசிய அறிக்கையானது புலனாய்வு முகவர் அமைப்புக்களின் அறிக்கைகளையும் உள்ளடக்கியதாகும். இதில் சில ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சிற்கும் சென்றுள்ளன. அதிலே இராணுவ புலனாய்வு பணியகத்தின் அறிக்கையானது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியுடன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்புபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. துணைவேந்தர் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத காரணத்தால் அந்த அறிக்கையானது பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அந்தப்பத்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவுத்தூபி இருக்கின்றமையை விரும்பாத மாணவர்களும் உள்ளதால் நினைவுத்தூபியானது அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நினைவுதினங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளின்போது பல்வேறு நிகழ்ச்சியை நடத்தும் இடமாக இருப்பதால் அதனை நிர்மூலமாக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதனைத்தவிர யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பல்வேறு கருத்தரங்குகளில் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்திக்கும் போதும் அவர்கள் எழுப்பிய முதலாவது விடயமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விடயமே இருந்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment