Friday, January 8, 2021

லசந்தவின் படுகொலையை வழக்கை விசாரிக்கவேண்டும் என ஐநாவிடம் வேண்டுகோள்

 




இலங்கையின் துணிகரமான சிறந்த ஊடகவியலாளராக திகழ்ந்த லசந்த விக்கிரமதுங்க படுகொலைசெய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன. 

லசந்தவின் படுகொலை வழக்கு தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் முடக்கநிலையில் உள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என லசந்தவின் புதல்வி அஹிம்சா விக்கிரமதுங்க ஐநாவிற்கு கடிதம் வரைந்துள்ளார். லசந்தவின் படுகொலை விடயத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான  சர்வதேச சமவாயமான ICCPR  இலங்கை மீது பிரயோகிக்குமாறு  லசந்தவின் குடும்பம் சார்பாக இவ்வாறாக ஐநாவிடம் வேண்டுகோள் விடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.



சண்டே லீடர்  பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தமது உயிரையும் துச்சமென எண்ணி சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளையும் மோசடிகளையும் மக்களுக்கு துணிச்சலாக பகிரங்கப்படுத்தினார்.

எவராலும் நெருங்க முடியாத தகவல்களை மிக சாதுரியமாக அண்மிக்கும் ஆளுமையும் திறனும் கொண்ட அவர் அதிசிறந்த ஆய்வுக்கட்டுரை ஆசியராக பல மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பல தடவைகள் உயிர் அச்சறுத்தலை அவர் எதிர்கொண்டார்.



இறுதியாக 2009 ஜனவரி 8 ஆம் திகதி முற்பகல் 10.25 அளவில் லசந்தவின் உயிர் குழுவொன்றினால் பறிக்கப்பட்டது.

லசந்த விக்ரமதுங்கவின் தொழிற்தளத்திற்கு பயணிக்கும் வழியில் இரத்மலானை – அத்திட்டிய வீதியில் வழிமறித்த ஆயுதக் குழுவொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது லசந்தவிடம் பேனாவும்,குறிப்பேடும் மாத்திரமே இருந்தன.



சர்வதேச ரீதியில் பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்க அச்சமின்றி முன்னெடுத்த பயணத்தால் அவர் கொல்லப்பட்ட பின்னரும்  International Press Institute World Press Freedom Heroes  விருதினால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை மௌனிக்க செய்த கொலைக் கும்பல் சுதந்திரமாக நடமாடும் நிலையில் அவரது மரணத்தின் ஊடாக அரசாங்கத்தை மாற்றி ஆட்சிக்கு வந்த தரப்பினரும் காலம் கடத்தும் செயற்பாட்டையே பின்பற்றினர்.

நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்தவின் புகழுடல் 2016 செப்டம்பர் 27 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக் குற்றத்திற்கு நீதி கிடைக்கவில்லை.


குறிப்பு: இந்தச் செய்தியிலுள்ள சில தகவல்கள் நியுஸ் பெஸ்டிலிருந்து உள்வாங்கப்பட்டவை



No comments:

Post a Comment