Monday, January 4, 2021

வெளிநாடுகளில் நிர்க்கதியாக நிற்கும் இடம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு மீட்டு வர கோரிக்கை

 


கொவிட்-19 பரவலை அடுத்த வெளிநாடுகளில் நிர்க்கதியாக நிற்கும் இலங்கையைச் சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய பகிரங்க கடித்தை விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அக்கறை மிக்க பிரஜைகள் ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இலங்கைக்கு மீண்டும் திரும்பிவருதற்கு  விமானப் பயணச் சீட்டைக் கொள்வனவு செய்வதற்காக  பணம் திரட்டுவதற்காக மத்தியகிழக்கில் நிர்க்கதியாக நிற்கும் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பரிதாப நிலைக்குள்ளாகி இருப்பதாக அண்மையில் கண்ணீர்மல்ல இலங்கைப் பெண்மணியொருவர் பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. 

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நாட்டின் அந்நியச் செலாவணிக்கு முக்கிய பங்காற்றும் இடம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு மீள அழைத்துவருவதற்கு அரசாங்கம் தயக்கம் காண்பிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இந்த பகிரங்க கடிதம் முக்கியம் பெறுகின்றது. 


1. அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர் தொழிலாளர்கள் வருமானம் இன்றி முடக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தாயகம் திரும்புவதற்கான விமான வசதிகளை ஒழுங்கமைப்பதை அதிகரித்தல்- ஐக்கிய அரபு ராச்சியம், சவூதி அரேபியா, கத்தார், ஓமான், குவைத், லெபனான், ஜோர்தான் மற்றும் பிற நாடுகள்.

2. கொவிட் தடுப்பு நிதியத்தைப் பயன்படுத்தி தாயகம் மீளும் தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்குதல்.

3. இலவச அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்களுக்கு வசதியளித்தல்.

4. தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக செலவளிக்க முடியாத தொழிலாளர்கள் புறந்தள்ளப்படுவதை தடுத்தல்.

ஆகியன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அக்கறைமிக்க இலங்கை பிரஜைகளது பகிரங்க கடிதத்தில்  முக்கியமான கோரிக்கைகளாக அமைந்துள்ளன. 




 அந்தக்கடிதம் பின்வருமாறு  

ஜனவரி 4, 2021

கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தலைவர்.

மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர்.
பியங்கர ஜயரத்ன, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்.

தினேஷ் குணவர்தன, வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்.
நிமல் சிரிபால டீ சில்வா, ஊழியம், தொழிலாளர் சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சர்.

ஜெனரல் ஷவேந்திர டீ சில்வா, கொவிட்19, தடுப்பதற்கான தேசிய நிலையத்தின் தலைவர்.

இலங்கை அரசே, இடம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு மீட்டு வா.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தின் மிக உயர்ந்த பங்காளர்களாக இருக்கும் இடம்பெயர் தொழிலாளர்கள், 2018ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்களிப்பை வழங்கியுள்ளனர் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

இருப்பினும் கோவிட்19ன் தாக்கத்துக்குப் பின்னர் அரசாங்கத்தினால் முதலில் கைவிடப்பட்டவர்களாகவும் அவர்களே காணப்படுகின்றனர். பல மாதங்களாக இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் வெளிநாட்டு அமைச்சின் தாயகத்துக்கு திருப்பி அழைப்பதற்கான முன்னுரிமைப்பட்டியலில் அவர்கள் இடம்பெறவில்லை. அரசாங்கத்தின் கையிருப்பில் கோவிட்19இனை தடுப்பதற்கான நிதியில் 1.6 பில்லியன்கள் இருக்கும் போதும் இன்றுவரை திருப்பி அனுப்பும் விமானங்களுக்காக அரசாங்கத்தின் எவ்வித பங்களிப்பும் வழங்கப்படவில்லை.

பல மாதங்களாக தொழிலற்ற நிலையில் இடம்பெயர் தொழிலாளர்கள் உயிர்பிழைப்பதற்காக கடினமான வழிகளை நாடியுள்ளனர்.பொது இடங்களில் உறங்கும் அவர்கள், தாயகம் திரும்புவதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட நாடுகளிலிருந்து, நலன்புரி அமைப்புகளிலிருந்து மற்றும் தனிப்பட்ட கொடையாளிகளிடமிருந்து இலங்கை தூதரகங்களுக்கு குறிப்பிட்ட தன்முனைப்பான உதவிகள் வழங்கப்படுகின்றன. இருந்தும் பலர் கைவிடப்பட்ட நிலையில் இவ்வாறானவர்கள் தாம் திரும்பி அனுப்பபடுவது தொடர்பான முறைப்பாடுகள் தகவல்களுக்காக தூதரகங்களை நாடும் போது திருப்பி அனுப்பப்படுகின்றனர்.



இலங்கை அரசாங்கத்தின் இந்த பொடுபோக்கினால் இத்தொழிலாளர்களில் பலர் பட்டய விமானங்களுக்காக அளவு கடந்து செலவளிக்க தள்ளப்பட்டுள்ளனர். அழுத்தத்துக்குட்பட்ட இடம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து வரும் காணொளிகள் மூலம் இவ்வாறானவர்களில் பெண்கள் தாயகம் திரும்பும் நோக்கில் பணத்தினைப் பெற பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதும் தெரியவந்துள்ளது. இத்தொழிலாளர்களின் பயணத்தை ஈடு செய்ய அவர்களின் குடும்பத்தினர் நிலங்களை விற்பதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் நாடு திரும்பிய பின்னர், கிடைத்த சொற்ப வருமானம் சில வாரங்களில் தீர்ந்ததும் மீண்டும் கடன்களாலும் நிலையற்ற தொழில்வாய்ப்புகளாலும் அவதியுறுகின்றனர். 

ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு செலவளிக்க முடியாதவர்கள் தூதரகங்களின் தாயகம் திரும்புவதற்கான முன்னுரிமைப்பட்டியலில் இடம் பிடிக்கத் தவறுவதாகவும் கூறப்படுகின்றது. விமானப்பயணத்துக்கு செலவளிக்க முடியுமானவர்கள் அரசாங்கத்தின் இலவச தனிமைப்படுத்தல் நிலையங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் போது அவர்கள் ஓரங்கட்டப்பட்டு செலவளிக்க முடியுமானவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கை விமானசேவைகளினால்
துபாயிலிருந்து நான்கும் அபுதாபியிலிருந்து ஒரு விமானமும் செயற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விமானங்களிலும் அறுபது தொழிலாளர்களை ஏற்றிச்செலக்கூடிய இயலுமை இருப்பினும் அபுதாபி விமானம் இருபத்தைந்து தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளது. அதுவும்கூடஇ தனிப்பட்ட கொடையாளர்களின் உதவியுடன் அவர்கள் பயண டிக்கட்டுகளுக்கு செலவளித்தமையால் சாத்தியமானதே ஒழிய இலங்கை அரசாங்கம் இதில் எவ்வித பங்களிப்பும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சராசரி டிக்கட்டின் பெறுமதியாக 1200 திர்ஹம்களை, அதாவது இலங்கை ரூபாவில் 62,000இனை வைத்து கணிக்கும்போதுஇ மொத்தமாக 15 மில்லியன் ரூபாய்கள் தனிப்பட்ட கொடையாளிகளினால் துபாயிலிருந்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்காக செலவளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில், 'இடுகம' கோவிட்19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தில் தனியார் மற்றும் நிறுவன அமைப்புகளின் நிதியிடல் மூலம் 1,659,015,132 (ஒரு பில்லியன், அறுநூற்று ஐம்பத்தொன்பது மில்லியன் பதினைந்தாயிரத்து நூற்று முப்பத்திரண்டு) ரூபா இருப்பு காணப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது. ஒரு மாதத்தின் பின்னர், அவ்விருப்பில் 400 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டதாக அரசாங்கத்தின் ஊடகப்பிரிவு அறிவித்தது. இவ்விருப்பு ஏன் கைவிடப்பட்ட இடம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் தனிமைப்படுத்தல் வசதிகளுக்காகவும் பயன்படுத்தப்படவில்லை என நாம் கேட்கின்றோம்.

இத்தொழிலாளர்கள் நோய்த்தொற்று காலத்தின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தினால் கைவிடப்பட்டதோடு வெளிநாட்டு அமைச்சின் முன்னுரிமைப்பட்டியலில் இறுதியாக இடம்பெற்றுள்ளதோடு மீளழைக்கும் நிகழ்ச்சி நிரலில் இலங்கை மாணவர்களுக்குப் பின்னரே இடம்பெற்றுள்ளனர். இலங்கை சுற்றுலாப்பிரயாணிகளை வரவேற்கும் முன்னோடித்திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில் இடம்பெயர் தொழிலாளர்கள் கைவிடப்பட்டிருப்பது அனுமதிக்க முடியாத விடயமாகும்.

நாம் இலங்கை அரசாங்கத்திடம் கோருவதாவது:
1. அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர் தொழிலாளர்கள் வருமானம் இன்றி முடக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தாயகம் திரும்புவதற்கான விமான வசதிகளை ஒழுங்கமைப்பதை அதிகரித்தல்- ஐக்கிய அரபு ராச்சியம், சவூதி அரேபியா, கத்தார், ஓமான், குவைத், லெபனான், ஜோர்தான் மற்றும் பிற நாடுகள்.
2. கொவிட் தடுப்பு நிதியத்தைப் பயன்படுத்தி தாயகம் மீளும் தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்குதல்.
3. இலவச அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்களுக்கு வசதியளித்தல்.
4. தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக செலவளிக்க முடியாத தொழிலாளர்கள் புறந்தள்ளப்படுவதை தடுத்தல்.
ஒப்பமிட்டோர்:
 
மரிசா டீ சில்வா
அமாலினீ டீ செய்ரா
மெகாரா டெகல்
ஸ்வஸ்திகா அருளிங்கம்
கீதிகா தர்மசிங்க
லக்மாலி ஹேமசந்திர
ரஸ்மா ரஸ்மி
சாரா ஆறுமுகம்
விமுக்தி டீ சில்வா

- விடுதலை இயக்கத்துக்காக

No comments:

Post a Comment