Sunday, January 24, 2021

ஜெனிவாவில் புதிய தீர்மானத்தை மறுதலித்தால் ஆட்சியாளர்களுக்கு சர்வதேச நெருக்கடி !-கலாநிதி பாக்கியசோதி



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வில் நிறைவேற்றப்படும் புதிய தீர்மானத்தினை இலங்கை ஏற்பதற்கு மறுத்தால் சர்வதேச நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்படும் என்று மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் எவ்வாறு அமையும், தமிழ்த் தரப்பின் கூட்டுக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படுமா, அரசாங்கம் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்தால் அதுதொடர்பிலான பிரதிபலிப்புக்கள் எவ்வாறு இருக்கும் உள்ளிட்ட விடயப்பரப்புக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு,

கேள்வி:- எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பாக புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதா?

பதில்:- கடந்த தடவை இலங்கை விடயத்தில் மனித உரிமைகள் பேரவையில் உள்ள இணை அனுசரணை வழங்கும் நாடுகள் கூட்டிணைவிலேயே இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. 

தற்போது அந்த தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த அமர்வில் அறிவித்துவிட்டது. ஆகவே ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தினை செயற்படுத்த வேண்டும் என்ற வகையில் சிந்தித்து நகர்வது பொருத்தமற்றதாகவே இருக்கும். 

அந்த அடிப்படையில்  புதிய பிரேரணையொன்றே தேவையாகவே உள்ளது. அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது. எனினும், அந்த பிரேரணை,  பிரித்தானியா தலைமையிலா அல்லது இணை அனுசரணை நாடுகள் கூட்டிணைந்தா சமர்ப்பிக்கப்படப்போகின்றன என்பது தொடர்பில் உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகியிருக்கவில்லை.

எனது கணிப்பின் பிரகாரம், இலங்கை விடயத்தில் நிச்சயமாக புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதற்கே அதிகளவான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

கேள்வி:- புதிதாகவொரு தீர்மானம் கொண்டுவரப்படுமிடத்து, அது எவ்வாறான உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன?

பதில்:- இலங்கை விடயத்தினை தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையிலும் அதாவது, சர்வதேச அரங்கில் இலங்கை விடயம் தொடர்ந்தும் இருக்கும் வகையிலும், இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் மனித உரிமை விடயங்களை அமுலாக்குவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பரிந்துரைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும். 

அத்துடன் நிறைவேற்றப்படும் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் முன்னெடுத்துள்ள விடயங்கள் சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டு மீளாய்வு அறிக்கை வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் நடைமுறையும் தொடரும். அதற்கு மேல் மனித உரிமைகள் பேரவையில் எதனையும் எதிர்பார்க்க முடியாது. 

கேள்வி:-அப்படியென்றால் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறலுக்கு என்னவாகும்?

பதில்:- இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியிலேயே முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினுள் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களையும் பரிந்துரைகளையும் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு பிறிதொரு நாட்டின் மீது பொறுப்புக்கூறச் செய்வதற்கான காட்டாயப்படுத்தல்களை மேற்கொள்ள முடியாது. 

ஆகவே, இலங்கை விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது, சர்வதேச விசேட தீர்ப்பாயத்திற்கோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்வதன் மூலமாகவே பொறுப்புக்கூறச் செய்ய முடியும். 

கேள்வி:- நீங்கள் குறிப்பிடும் கட்டமைப்புக்களுக்கு இலங்கை விடயத்தினை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

பதில்:- நியூயோர்க்கில்  உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையிடம் இலங்கை விடயம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்புச் சபை ஊடாக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது பரிந்துரைக்கப்படும் விசேட தீர்ப்பாயத்திற்கோ அனுப்பப்பட வேண்டும். இல்லையேல் சர்வதேச நாடுகளின் உதவியுடன் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்காக இலங்கையை முன்னிலைப்படுத்த முடியும். 

கேள்வி:- பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இருக்கின்ற அதேநேரம் ரோம் சாசனத்திலும் இலங்கை கையொப்பமிடாத நிலையில் பொறுப்புக்கூறச் செய்வதற்காக நீங்கள் கூறும் பொறிமுறைகள் சாத்தியமாகுமா?

பதில்:- இது மிகவும் சிரமமான பணியொன்றுதான். சர்வதேச நாடுகளிடத்தில் இந்த விடயங்கள் தொடர்பான முறையான சமர்ப்பணங்களைச் செய்வதன் மூலமாக உரிய புரிதலை ஏற்படுத்துவதன் ஊடாகவே சாத்தியமாகும். இது மிகவும் சவால் நிறைந்த நீண்ட பயணம். உடனடியாகச் சாத்தியமாகாது. ஆகவே தொடர்ச்சியாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். 

கேள்வி:- பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல், சிவில் அமைப்புக்கள் இம்முறை, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றை அதாவது, சிரியா மற்றும் மியன்மார் நாடுகளில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் பொறிமுறை பற்றி அதிகளவில் கவனம் செலுத்துகின்ற நிலையில் அது இலங்கை விடயத்தில் பொருத்தமானதாக இருக்குமா?

பதில்:- அவ்வாறான கோரிக்கையை முன்வைக்க முடியாது என்று கூறுவதற்கில்லை. அவ்வாறான கோரிக்கையை சர்வதேச தரப்புக்களிடத்தில் முன்வைக்கும் போது, அவற்றின் ஏகோபித்த ஆதரவினைப் பெறுவதுதான் சவாலான விடயம். விசேடமாக, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதையே தமது கொள்கையாக கொண்டிருக்கின்றன. அவ்வாறான நிலையில் இந்த பொறிமுறைகள் பற்றிய பரிந்துரைகளைச் செய்து அவற்றின் ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் பெறுவது மிகவும் கடினமானது. அந்த சவாலான பணியையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. நான் ஏற்கனவே கூறியதைப் போன்று கால தாமதமாகலாம். அதற்காக முயற்சிகளை எடுக்காது இருந்துவிட முடியாது. 

கேள்வி:- பொறுப்புக்கூறலை பெற்றெடுக்க முடியாதுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தினை தொடர்ந்தும் வைத்திருப்பதால் நன்மைகள் உண்டா?

பதில்:- நிச்சயமாக, சர்வதேச தளங்களை பார்க்கின்றபோது, இலங்கை விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் மட்டுமே தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. ஆகவே அந்த விடயத்தினை சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் தொடர்ந்தும் வைத்திருப்பது அவசியமானதாகும்.  

மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் வருடாந்தம் மீளாய்வு அறிக்கையொன்று தயாரிக்கப்படும். அதில் மனித உரிமைகள், ஜனநாயக விடயங்கள் பற்றிய ஆழமான கரிசனைகள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்படும். 

அதேபோன்று மனித உரிமைகள் ஆணையாளரும் இலங்கை விடயம் தொடர்பில் கரிசனை கொள்வார். அதன்மூலம் இலங்கையின் பொறுப்புக்கூறலை தொடர்ச்சியாக சர்வதேச தளத்தில் நினைவுபடுத்தியும், கவனத்தில் கொள்ளவைத்துக்  கொண்டும் இருக்க முடியும். 

ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயத்தினை நீடித்திருக்கும் வகையில் வைத்துக் கொண்டே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அடுத்துவரும் ஜெனிவா கூட்டத்தொடர் சம்பந்தமாக காத்திரமான கலந்துரையாடலொன்றை செய்திருப்பதாக அறியமுடிகின்றது அதுபற்றிக் கூற முடியுமா?

பதில்:- தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நான் உள்ளிட்டவர்கள் சந்தித்து கலந்துரையாடினோம். இம்முறை ஜெனிவாக் கூட்டத்தொடரின்போது, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பலமான கட்டமைப்பாக செயற்பட வேண்டியதில் உள்ள தடைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஏற்கனவே இதுபற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஜெனிவாகூட்டத்தொடரில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் விடயங்கள் பகிரப்பட்டன. 

அதன் பயனாக, அத்தரப்புக்களிடத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டு, எதிர்வரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் புதிதாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கான முன்மொழிவு ஆவணத்தினை கூட்டிணைந்து தயாரித்து வழங்குதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

இதுவொரு ஆரோக்கியமானதும் நன்மை பயக்கும் விடயமாகவே காணப்படுகின்றது. இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் கொண்டுவரப்படும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மொத்தமுள்ள 47 உறுப்பு நாடுகளில் 24இன் ஆதரவினைப் பெற வேண்டும். 

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன் ஊடாக, அவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிணந்து ஒருமித்த குரலில் சர்வதேச நாடுகளின் முன்னால் தமது சமர்ப்பணங்களை செய்து ஆதரவினைப் பெறுவதற்கு ஏதுவான நிலைமைகளை ஏற்படுத்துவதாக இருக்கும். 

கேள்வி:- பூகோள அரசியல், பொருளாதார சமூகச் சூழலைப் பார்க்கின்றபோது பாதிக்கப்பட்ட தரப்பினரின் முன்மொழிவுகளை ஏற்று கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:-ஆம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிகளவில் ஆதரவினை வெளியிடும். அதேபோன்று ஆபிரிக்க நாடுகளுடனான கலந்துரையாடல்களும் ஆதரவுத்தளத்தினை மேம்படுத்தும். அதுமட்டுமன்றி வழமைக்கு மாறாக இம்முறை முஸ்லிம்களும் உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். 

ஆகவே அந்த விடயங்களையும் முறையாக எடுத்துரைக்கும் போது, சில முஸ்லிம் நாடுகளின் ஆதரவினையும் பெற முடியும். மேலும் நடுநிலை வகிக்கும் இந்தியா உள்ளிட்ட தரப்புக்களின் மனோநிலையை மாற்றுவதற்கான உரிய சமர்ப்பணங்கள் அவசியமாகின்றன. 

கேள்வி:-தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம், ஏற்கனவே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்து விட்ட நிலையில் புதிய பிரேரணையின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தினையும் மறுதலிக்குமானால் என்னவாகும்?

பதில்:- முதலாவது, சர்வதேச நாடுகளின் மத்தியில் அதன் கௌரவத்திற்கு பாதகமான தோற்றப்பாடு வலுவாக எழும். அடுத்ததாக, பிரேரணையை கொண்டு வந்த நாடுகள், அந்தப் பிரேரணை தீர்மானமாக நிறைவேறுவதற்கு ஆதரவளித்த நாடுகள் என்பன ஒன்றிணைந்து சில நடவடிக்கைகளை நிச்சயமாக முன்னெடுக்கும். அது இலங்கைக்கு எதிர்மறையான நிலைமைகளையே சர்வதேச அரங்கில் ஏற்படுத்தும். 

கேள்வி:- இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் போர்க்குற்ற விடயங்களை மையப்படுத்தி படையினர் தண்டனைக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுகின்றது, நாட்டின் இறைமையில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்யப்படுகின்றன போன்ற காரணங்களை  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிலைப்படுத்த பிரயத்தனம் செய்யுமல்லவா?

பதில்:- ஆம். தமது அரசியல் இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவ்விதமான கருத்துக்களை அதிகளவில் வெளிப்படுத்தப்படும். அதேநேரம் இறைமை விடயத்தினை மையப்படுத்தி தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் சர்வதேச ரீதியாக தம்மை நியாயப்படுத்தவும் முயற்சிப்பார்கள். 

ஆனால் நாட்டின் ஜனநாயகம், மனித உரிமைகள் விடயங்களின் உண்மையான நிலைமைகளும் அம்பலமாகும். அதுமட்டுமன்றி உள்நாட்டில் பதற்றமான நிலைமையொன்றும் நீடிப்பதற்கு இடமுண்டு. இலங்கை பற்றிய புரிதல் சர்வதேச நாடுகளுக்கு காணப்பட்டாலும்  இந்த விடயத்தினை மிக கவனமாக கையாள வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- தற்போதைய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பினை தயாரிக்கின்றோம் என்பது உள்ளிட்ட விடயங்களை சர்வதேச அரங்கில் முன்வைத்து காலங்கடத்தும் உத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளதல்லவா?

பதில்:- அரசாங்கம் பல விடயங்களை வெவ்வேறு முறைமைகளில் கையாள்வதற்கு முயற்சிகளை எடுக்கும். ஆனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் மீளாய்வு அறிக்கை, அவருடைய இலங்கை தொடர்பான பார்வை,பாதிக்கப்பட்ட தரப்பினது சான்றாதாரங்களுடனான சமர்ப்பணங்கள் என்பன பெருமளவில் தாக்கங்களைச்  செலுத்தும். 

அதுமட்டுமன்றி, தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் மனித உரிமைகள் விடயம், ஜனநாயகச் சூழல் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பிலும் ஏனைய சர்வதேச நாடுகளும் அதிகூடிய கவனம் செலுத்தும். ஆகவே அரசாங்கம் கூறும் விடயங்கள் உள்நாட்டு விடயங்களாகவே அதிகளவில் பார்க்கப்படும்.

கேள்வி:- சிவில் அமைப்புக்களின் வினைத்திறனான செயற்பாடுகள் அண்மைக்காலமாக குறைவடைந்துள்ளதை உணர்கின்றீர்களா?

பதில்:- ஆம், 2019 ஆட்சிமாற்றத்தின் பின்னர் குறைவடைந்துள்ளது.

கேள்வி:- அதற்கு என்ன காரணமென்று கருதுகின்றீர்கள்?

பதில்:- இந்த அரசாங்கத்தின் கடந்த கால முகத்தினை சிவில் செயற்பாட்டாளர்கள் நன்கறிந்தவர்கள். வெள்ளைவான் கலாசாரம் முதல் பல்வேறு அனுபவங்கள் காணப்படுகின்றன. ஆகவே தான் அச்சமான மனநிலையினால் சிவில் அமைப்புக்களும், பிரதிநிதிகளும் சற்று அமைதியாகி விட்டனர். 

இதனைவிடவும், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் புதிய சட்டங்களை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது. நிதி, நிர்வாகம் தொடர்பில் அவை இறுக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 

இவ்விதமான காரணங்களால் அமைப்புக்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் அமைதிகாக்கின்றனர். அதற்காக பூரணமாக மௌனித்துவிட்டனர் என்று கூற முடியாது. ஏனென்றால் 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது சிவில் அமைப்புக்கள் உயர் நீதிமன்றை நாடியிருந்தன. 

முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்திற்காக வீதியிலிறங்கி போராடிவருகின்றன. ஆகவே நெருக்கடியான நிலைமை நீடிக்கும் என்று நான் கருதவில்லை. ஒருவேளை அனைத்து தரப்புக்களும் மௌனமாக்கப்படலாம் இல்லையென்றால் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்காக போராடும் நிலைமை ஏற்படலாம்.


இந்த நேர்காணலை வீரகேசரி வார இதழின் கடந்த வார பதிப்பிற்காக  17/01/2021 வீரகேசரி உதவி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் மேற்கொண்டிருந்தார். 



 இவர் 2019ம் ஆண்டின் இலங்கையின் மிகச்சிறந்த செய்தியாளருக்கான விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 




No comments:

Post a Comment