Saturday, January 9, 2021

ட்ரம்பின் ஆட்டத்தை முற்றாக அடக்கிய டுவிட்டர்




அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக இராஜினாமாச் செய்யவில்லை என்றால் கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் அத்துமீறியைமைக்காக அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோசி எச்சரித்துள்ளார். 

"கிளர்ச்சியைத் தூண்டியமை" என்ற குற்றச்சாட்டு எதிர்வரும் திங்களன்று நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையிலுள்ள ஜனநாயகக்கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மீது வன்முறைக்கு கிளர்ச்சியாளர்களைத் தூண்டியதாகவே அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வன்முறைகளில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டது. 



இதனிடையே தொடர்ந்தும் வன்முறைகளைத் தூண்டிவிடும் அச்சம் உள்ள காரணத்தால் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி ட்ரம்பின்  பிரதானமான பிரசார ஊடகமாக டுவிட்டர்  சமூக வலைத்தளம் காணப்பட்டது. அதில் அவரை 89 மில்லியன்  பேர் பின்தொடர்ந்துவந்தனர். இப்போது அந்த கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.





கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணிநேரம் முடக்கப்பட்டது. இப்போது அது முற்றுமாக முடக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது. 

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது. இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில் தற்போதைய  உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமையில் ஜோ பைடனை ஜனாதிபதியாக  அறிவிக்கும் நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்துக் கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர். ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஜோ பைடனை ஜனாதிபதியாக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, உப ஜனாதிபதி  மைக் பென்ஸ் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதர உறுப்பினர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் நாடாளுமன்ற அவையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு பூட்டப்பட்டது.

இதனிடையே டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டரில் 'இத்தேர்தல் தங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேர்தல். இது ஒரு மகத்தான தேர்தல் என்பதை அனைவரும் அறிவர். நமக்கு அமைதி வேண்டும். நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

வன்முறைக்கு மத்தியில், பதவி விலகும் ட்ரம்ப் தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியது என்றும் ஆகவே அவரது வீடியோவை கட்டுப்படுத்துவது எனவும் ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்தே கடந்த புதன்கிழமை அவரது டுவிட்டையும் கணக்கையும் முடக்கியது. ட்ரம்ப்பின் இந்தப் பதிவு வன்முறைக்கு வித்திடும் எனவும், அதற்கு பதிலளிக்கவோ அல்லது மீள் பதிவிடவோ முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment