வீரகேசரி பத்திரிகைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கர் வழங்கிய செவ்வி
செவ்வி செய்தவர்: வீரசேகரியின் உதவி செய்தி ஆசிரியர் ஆர். ராம்
•நல்லிணக்க விடயத்தில் பிரதமர் மஹிந்த நம்பிக்கை அளித்துள்ளார்
•வட, கிழக்கு மலையகத்துக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடரும்
•தெற்காசியப்பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் சக்தி மையமாக இருப்பது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்
•கிழக்கு முனையத்தின் உரிமம் இலங்கைக்கே: ஜப்பான், இந்தியா இணையில் வளர்ச்சி கண்டால் மகிழ்ச்சி
(ஆர்.ராம்)
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை அது காப்பாற்ற வேண்டும் என்று அரசாங்கத்திடத்தில் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது நல்லிணக்கத்தை அடைவதன் மூலம் தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்ந்து இலங்கை செயல்படும் என்று வாக்கினையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைத்தின் மூன்றிலிரண்டு பங்கு கொள்கலன் போக்குவரத்து வணிகம் இந்தியாவுடனே இருப்பதன் காரணமாக அதன் பங்காளராக இந்தியா இருப்பதன் நன்மைகள் வெளிப்படையானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும்,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினுடைய உரிமம் இலங்கையிடமே இருப்பதோடு இந்தியா மற்றும் ஜப்பானின் முதலீடுகள் ஊடாக அபிவிருத்தியைக் காண்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு கடந்த ஐந்தாம் திகதி உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் டக்ளஸ், இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களுடன் தனித்தனியான சந்திப்புக்களை நடத்தியிருந்தார். அவருடைய வியாழக்கிழமை தனது பயணத்தினை முடித்துக்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
இந்நிலையில் நெருக்கடியான நிகழ்ச்சி நிரலைக் கொண்ட இந்த உத்தியோக பூர்வ விஜயகாலத்தில் வீரகேசரிக்கு எழுத்து மூலமாக வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு மேலதிகமாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான எவ்வாறான திட்ட முன்மொழிவுகள் இந்தியா நடைமுறைப்படுத்த உள்ளது?
பதில்:- இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா பற்றுறுதி கொண்ட பங்காளியாக தொடர்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வசிக்கும் குடும்பங்களுக்காக 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்தியாவின் பிரத்தியேக வீடமைப்புத்திட்டம் இலங்கைத் தீவின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் வடக்கில் யாழ்ப்பாண கலாசார மையம் மற்றும் ஹட்டன் டிக்கோயாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவமனை ஆகியவை இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் நிதிக்கடன் திட்டத்தினூடாக வடக்கு மாகாணத்திற்கான தொடரூந்து பாதைகள் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் இந்திய நிதியைக்கொண்டு நடைபெற்றுவருகின்றன. அத்துடன் மலையகத்திற்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மேலதிகமாக அறிவிக்கப்பட்டுள்ள 10ஆயிரம் வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் அடுத்த நான்காண்டுகளில்; பூர்த்தியாகவுள்ளன.
பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்பு, ஆம்புலன்ஸ் சேவைகள், பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கல்வியை மேம்படுத்துதல் போன்ற எமது கடந்தகால கருத்திட்டங்களிலிருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் முழு இலங்கையிலும் கொரோனாவிற்குப் பின்னரான பிராந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சமூகத்தையும் மனித வளங்களையும் கட்டியெழுப்புவதற்காக நாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவோம்.
அதனைக் கருத்திற் கொண்டு, எங்கள் வளர்ச்சி கூட்டாண்மைக்கான எதிர்கால செயற்றிட்டம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். உள்நாட்டு தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் ஆராய்ந்து எமது உiராயடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.
நாம் கல்வி, திறன் விருத்தி, தொழிற்பயிற்சி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் எமது அதிகூடிய கவனத்தைச் செலுத்துவதற்கு எண்ணியுள்ளோம்.
கேள்வி:- இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மீதும் மாகாண சபை முறைமை மற்றும் தோற்றத்தின் மீதும் இலங்கையின் புதிய பிரதிபலிப்பை இந்தியா எப்படிப் பார்க்கிறது?
பதில்:- இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நீண்டகால நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்தும் இருக்கிறது.
எனது சந்திப்புகளில், இலங்கையின் ஐக்கியமும் உறுதியும் பேணப்படுவதில் இந்தியா தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படுகிறது என்பதையும் அதே நேரத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவையும் பேணப்படவேண்டும் என்றும் கூறி வந்துள்ளேன்.
நல்லிணக்கச் செயற்பாடுகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதோடு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை அது காப்பாற்ற வேண்டும் என்பதையும் நான் தெரிவித்துள்ளேன்.
நல்லிணக்கத்தை அடைவதன் மூலம் தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்ந்து இலங்கை செயல்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020 செப்டம்பர் 26 அன்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டின் போது நம்பிக்கை தெரிவித்தமை உங்களுக்கு நினைவிருக்கும்.
கேள்வி:- கொழும்பு கிழக்குத் துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு இலங்கை அரசு ஏன் தாமதிக்கின்றது என்று நினைக்கிறீர்கள்? அந்தத் துறைமுகம் இந்தியாவிற்கு எந்த விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது?
பதில்:- கொழும்பு துறைமுகத்தின் சுமார் மூன்றிலிரண்டு பங்கு கொள்கலன் போக்குவரத்து வணிகம் இந்தியவுடனேயே இருக்கின்றது என்ற வகையில் கிழக்கு கொள்கலன் முனையத்தின் பங்காளராக இந்தியா இருப்பதன் நன்மைகள் வெளிப்படையானவை.
இந்த திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன் தற்போதைய இலங்கை அரசாங்கத்தினால் விரும்பப்படுவதைப் போன்று இந்தியா மற்றும் ஜப்பானில் இருந்தான முதலீடுகள் ஊடாக கிழக்கு முனையத்தின் அபிவிருத்தியைக் காண்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்த முனையத்தின் உரிமை மாற்றம் தொடர்பில் எந்த கேள்வியும் கிடையாது என்பதையும் அதன் உரிமையானது தொடர்ந்தும் இலங்கையுடனேயே இருக்கும்.
கொழும்பு துறைமுகத்தின் கொள்திறன் விரிவாக்கம் மற்றும் உள்ளுர் ரீதியிலான தொழில்வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கான அவசர தேவையை தீர்ப்பதற்கு அப்பால் கிழக்கு முனைத்தில் இந்தியாவின் பங்கேற்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பற்துறை மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
இலங்கையின் மீட்சிக்கு அவசியமான, இந்தியா மற்றும் உலகில் இருந்தான அதிகளவான முதலீடுகளை கவருவதற்கு இந்த திட்டமானது சிறந்தவொரு சமிக்ஞையாக இருந்து செயற்பட முடியும்.
இந்த பிராந்தியத்திற்கான இணைப்பு மற்றும் சக்தி மையம் என்ற வகையில் இலங்கையின் ஈர்ப்புத்தன்மையை மேம்படுத்தவதில் இந்த திட்டம் உதவும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
அத்துடன் இதுதொடர்பில் எம்மால் மிகவும் சாதகமான வகிபகிபாகத்திதை வகிக்கமுடியும்
No comments:
Post a Comment