Sunday, January 10, 2021

இலங்கையில் இந்தியத்திட்டங்கள் மீது சீனாவின் "செல்வாக்கு" : கடும் கரிசனையை வெளிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய முன்முயற்சிகள் மீதான எதிர்ப்புக்களை சீனாவின் புலனாய்வு முகவர்களே முன்னெடுப்பதாக இந்தியா கவலைகொண்டுள்ளது. 




கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் உள்ளடங்கலாக இந்தியாவின் விருப்பிற்குரிய திட்டங்கள் தொடர்பான  எதிர்வினைகளை சீனா கையாள்வதாக இந்தியா கொண்டுள்ள ஆழ்ந்த கரிசனைகளின் காரணமாகவே இலங்கைக்கான இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய விஜயம் இடம்பெற்றதாக முன்னணி ஆங்கிலப்பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வெகுநாட்களுக்கு முன்னர் விடுத்த அழைப்பின் பிரகாரமே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடக சந்திப்பில் கூறப்பட்டபோதும் வெறுமனே ஐந்து நாட்கள் கால அவகாசத்திலேயே இந்த அவசர விஜயம் முன்னெடுக்கப்பட்டதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று அதன் தலைப்புச்செய்தியில் தெரிவித்துள்ளது. 




கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அண்மைய விஜயத்தின் முக்கிய பேசுபொருளாக இருந்தபோதும் அதனைத்தாண்டியும் திருகோணமலையிலுள்ள எண்ணெய்க்குதங்கள் அபிவிருத்தி உட்பட மேலும் பல திட்டங்களை தாமதித்தல் அன்றேல் தடுத்து நிறுத்துவதில் சீனாவின் கரங்கள் நீண்டிருப்பதாகவும் இந்தியா கரிசனைகொண்டுள்ளது.

அரசியல்யாப்பின் 13வது திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது இலங்கையின் சொந்த நலன்களுக்கு முக்கியமானது என இந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தலைவர்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியிருந்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.  13வது திருத்தத்துடன் மாகாண சபை தேர்தல்களும் நடைபெறவேண்டும் என்பதையும் அவர் அவதானத்திற்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment