ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் அம்பாறையில் ஹரின் பெர்ணான்டோவிற்கு விடுத்த 'அச்சுறுத்தல்' ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுவினர் அனைவருக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதுவதாக எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்ணான்டோவிற்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் அரசாங்கமுமே ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹரின் பெர்ணான்டோ அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதியை கடுமையாக விமர்ச்சித்திருந்ததுடன் 'சேர் பெயில்' ஜனாதிபதி தோல்விகண்டுவிட்டார் என அடிக்கடிஉச்சரித்து காரணங்களையும் அடுக்கியிருந்தார்.
ஹரினின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி அம்பாறையில் கருத்துவெளியிட்டிருந்தார்.
தனக்கு இரண்டு விதமான குணவியல்புகள் உள்ளதாக கூறியிருந்த ஜனாதிபதி தாம் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது தமக்கு சவால்விட்ட பிரபாகரனை தயவுதாட்சணியமின்றிக் கொன்று நாய்போல இழுத்துவந்தாக குறிப்பிட்டிருந்தார்.
"எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி. ஹரின் பெர்னாண்டோ இந்த நாட்டின் இளம் தலைவர், இந்த நாட்டின் ஜனநாயக சட்டத்திற்குள் அச்சமின்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் "என சஜித் கூறினார்.
பிரபாகரனுடன் ஹிரினை ஒப்பிடக்கூடாது ஹரின் இளம் தலைவர் அவர் பாராளுமன்றத்தில் ஜனநாயக கட்டமைப்பின் கீழே அச்சமின்றி கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார் என எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஜனாதிபதியின் இந்த 'வலுவான' பதிலை ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒரு பாரதூரமான அறிக்கையாக தான் பார்க்கிறேன் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.
அச்சத்தில் பொலிஸ் மா அதிபருக்கு ஹரின் எழுதிய கடிதம்
இதேவேளை ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்து அடங்கிய காணொளி மற்றும் பிரதியை இணைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தேசத்துரோகம், இனப்படுகொலை, பயங்கரவாத, கொடூரமான செயல்களில் ஈடுபட்டவருக்கும் பாராளுமன்றத்தில் கருத்து சுதந்திரத்திற்காக தமது அடிப்படை உரிமையை நடைமுறைப்படுத்தும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையிலான வேறுபாட்டினை அடையாளம் காண்பதில் ஜனாதிபதி தோல்வி கண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவர் தமது சேவையில் தொடர்ச்சியாக தோல்வியடையும் வரை தமது உயிருக்கு எவ்வாறான ஆபத்து ஏற்பட்டாலும், அவர் விரும்பாவிட்டாலும் உண்மையை உரைக்கும் பொறுப்பை தாம் நிறைவேற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடவில்லை என்பதை நினைவுபடுத்த வேண்டும். தமிழ் மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்கு நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கவில்லை. இதுவரை எவரைவிடவும் அதிகளவிலான பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்த கருணா அம்மானை கட்டியணைக்கவில்லை. அனைத்தையும் விட நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை பிரஜையே தவிர வேறொரு நாட்டின் பிரஜையல்ல. வேறொரு நாட்டின் பிரஜையல்ல. நான் அவருக்குப் பிடிக்காத விடயங்களை பற்றி பேசினால் என்னை 'நாயை போன்று கொலை செய்வதற்கு' அவரால் முடியும் என ஜனாதிபதி தௌிவாக கூறினார். பாதுகாப்புப் படைகளின் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸவினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் பாரதூர தன்மையை கருத்திற்கொண்டு அவரால் எனக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது உணர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் மேலும் சந்தேகம் கொள்வதற்கு எனக்கு காரணம் இல்லை. அது உறுதியானது. நான் அவருடைய முதற்பெயரை குறிப்பிட்டதால் மாத்திரம் ஜனாதிபதி இந்தளவு குழப்பமடைந்தமை தொடர்பில் நான் ஆச்சரியமடைகிறேன்' என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் ஜனாதிபதிகள் நீண்ட காலமாக அவர்களின் பெயர் அல்லது முதற்பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையை ஹரீன் பெர்ணான்டோ தனது கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
ஜே.ஆர், பிரேமதாஸ, டீ.பீ. சந்திரிக்கா, மஹிந்த சிறிசேன ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டமையால் அவர்கள் எவருக்கும் ஒருபோதும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் ஹரீன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி உறுதியாக நிரூபிக்காவிட்டால் வன்முறையில் ஈடுபடுமாறு அவருக்கு மகாசங்கத்தினர் ஆலோசனை வழங்கினார்கள் என்பதை நம்புவது கடினமானது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அவரை விமர்சித்த பெரும்பாலான ஊடகவியலாளர்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணாமலாக்கப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள் என்பது தமக்கு தெரியுமெனவும் அந்த தாக்குதல்களுக்கு முன்னர் அரசியல்வாதிகளினால் போலியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் பயனற்ற வகையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட செய்யப்பட்டதாகவும் ஹரீன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
பயங்கரவாதியைப் போன்று கொலை செய்யப்படலாம் என்ற அச்சமின்றி தாம் விரும்புவதை கூறுவது அடிப்படை உரிமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர்இ பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபரே, நீங்கள் இலங்கை குடியரசின் பொலிஸ் மா அதிபரே அன்றி ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸவின் தனிப்பட்ட சேவகர் அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு நான் உங்களிடம் கோருவது தனிப்பட்ட உதவியல்ல. நீங்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள குடியரசின் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு உங்களுக்கு பொறுப்புள்ளதன் காரணமாகவே நான் இதனை கோருகின்றேன் என ஹரீன் பெர்னாண்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மௌனமாக இருப்பதை நிராகரிப்பதால் தாம் உயிரிழந்தால் இதுவரையான காலத்தில் அத்தகைய அச்சுறுத்தலை விடுத்த ஒரே ஒருவரின் அபிப்பிராயத்திற்கு அமைய அது இடம்பெறும் என நினைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ் மா திபருக்கு அறிவித்துள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதிகளை சபாநாயகர், சட்ட மா அதிபர், கொழும்பிலுள்ள வௌிநாட்டு தூதரக அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நந்தசேனவுக்கு இரண்டு பக்கங்கள்...
பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்ததாகவும் பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை அம்பாறை உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது இதனைக் குறிப்பிட்டார் கோட்டாபய.
தான் எதற்கும் தயாரானவர் என்றும், ஆனால் மக்களுக்கு சேவை செய்வதே தனது தேவையாக உள்ளது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார்.
தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் - அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்று இதன்போது தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, சட்டத்துக்கு முரணாக நடந்திருந்தால் சட்ட ரீதியாகவே அந்த விடயம் அணுகப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த ஆட்சியின்போது பரந்த அளவில் அரசியல் பழிவாங்கல்கள் நடந்தன எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
அண்மையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோஇ அரசாங்கத்தை விமர்சித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதுஇ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடும் வகையில் 'நந்தசேன' எனக் கூறியதை நினைவுபடுத்திய ஜனாதிபதிஇ தாம் அதனை எதிர்பார்க்கவில்லை என்றார்.
'நந்தசேன... ஆம் நந்தசேன கோட்டாபய நல்ல பெயர். நந்தசேன கோட்டாபயவுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. தங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்றும் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவே தமக்கு வேண்டும் எனவும் சில பௌத்த பிக்குகள் என்னிடம் கூறுகின்றனர், அதனைச் செய்ய முடியும். அவ்வாறு வந்தால் அதே வகையில் செயற்பட முடியும்' என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்தப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் என்று சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் கோட்டாபய. அத்துடன்இ அந்தப் போரின்போது கடுமையான அணுகுமுறையைக் கையாண்டதாகவும்இ மோசமான போர்க்குற்றங்களுக்குக் காரணமாக இருந்ததாகவும் பெரிதும் தமிழ் மக்களால் விமர்சிக்கப்படுகிறவர் அவர்.
2009ம் ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் நடந்ததும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் அப்பகுதியில் கிடைத்ததாக இலங்கை அரசு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment