Friday, January 22, 2021

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய மூவர் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

 


இலங்கையில்   மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய விசாரணைக் குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.இதனையடுத்து கருத்துவெளியிட்ட அவர் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வெற்றிகொள்வதற்காகவும் மனித வள அபிவிருத்தியை பூர்த்தி செய்வதற்காகவும் ஐக்கிய நாடுகளுடனும் அதன் பிரதிநிதிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசின் கொள்கை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயத்திலான முன்னேற்றம் ஆகியன தொடர்பான 30/1 பிரேரணை மற்றும் அதனுடன் தொடர்புடை மேலும் இரண்டு பிரேரணைகளுக்கு அப்போதைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது.

எனினும், இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக தற்போதைய அரசாங்கம்இ பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் போது அறிவித்தது.

மனித உரிமைகள் மற்றும் மானிட சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களும் ஏனைய குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு பல பரிந்துரைகளையும், அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் மீள விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மூவரடங்கிய புதிய ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர்  A.H.M.D.நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளரான நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

No comments:

Post a Comment