இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில்,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வௌிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலாகஇ பாராளுமன்றத்தில் இன்று (06) பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் அரச தலைவர்களுடனான சந்திப்பின் போது முக்கியமாக எடுத்தாளவிருந்த விடயங்களிலொன்றாக கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை இந்தியாவிடம் தாரைவார்க்கக்கூடாது என தொழிற்சங்க அமைப்புக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவந்துள்ளதுடன் தேசிய அமைப்புக்களும் கடும் எதிர்ப்புக்களைப் பதிவுசெய்துவருகின்றன. இந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று காலை இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பாக அறிக்கை ஒன்றை நேற்று விடுத்திருந்தது
அரசாங்கம் சார்பாக தீர்மானங்களை எடுப்போர் தமது பொறுப்பில் உள்ள பொது உடைமைகளை அதன் உண்மையான உரிமையாளர்களான நாட்டின் பிரஜைகளிடம் கேட்டறியாமல் வேறு தரப்பினருக்கு வழங்குவது அரசியலமைப்பை மீறும் செயல் என தேசிய ஒன்றிணைந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டம் தொடர்பில் அதிருப்தியை வௌியிட்டு அந்தக் குழு விடுத்துள்ள அறிக்கையில் அரசியலமைப்பின் 28 D சரத்திற்கமையஇ பொது உடைமைகளை பாதுகாக்க வேண்டியது நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர்களான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கே.எம்.பீ.கொட்டகதெனிய மற்றும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேர்ணல் அனில் அமரசேகர ஆகியோரது கையொப்பங்களுடன் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறுகின்ற இடையீட்டு பொருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை அகற்றும் நிலையான நோக்கத்துடன் குறித்த இந்திய நிறுவனம் இந்த கொடுக்கல் வாங்கலில் தலையீடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் ஏற்கனவே கேரளாவின் விழிஞம் துறைமுகம் உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியத்தின் போட்டித் தன்மைமிக்க பல துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகின்ற நிலையில்இ கொழும்பு துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக செயற்படும் என எதிர்பார்க்க முடியாது என தேசிய ஒன்றிணைந்த குழு வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கடந்த ஆட்சிக்காலத்தில் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் இருந்து ஏற்கனவே ஜப்பான் விலகிக்கொண்டுள்ளதாகவும் அது தொடர்ந்தும் செல்லுபடியாகும் ஆவணம் அல்லவெனவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, குறித்த ஆவணத்தில் உள்ள பிணைப்புக்கள் காரணமாக இந்திய நிறுவனத்துடன் இணைந்து கிழக்கு முனைய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் அடிப்படையற்றவை என தேசிய ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment