Thursday, January 28, 2021

28 இராணுவ அதிகாரிகளுக்கு கோட்டா முக்கிய பதவிகளை வழங்கியுள்ளதாக ஐநா அறிக்கையில் சுட்டிக்காட்டு- ரொய்ட்டர்ஸ்

 



போரின் இறுதி ஆண்டுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்  ஆகியவற்றில் ஈடுபட்டதாக  ஐநா அறிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் உட்பட  இராணுவத்தைச் சேர்ந்த 28 அதிகாரிகளை (2020)கடந்தாண்டில் முக்கியமான நிர்வாகசேவை பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதை தனது அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லேட் சுட்டிக்காட்டியுள்ளார்.  

 எனினும், இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளதாகவும் அது தவறானதெனவும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றையதினம் மிகவும் காட்டமான அறிக்கையை  வெளியிட்டிருந்தார்.

'பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீது    நாடுகள் பயணத்தடைகள் மற்றும் சொத்துக்களை முடக்குதல் போன்ற இலக்குவைக்கப்பட்ட தடைகளை பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்க முடியும்' என்று தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதுடன் என்று தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதுடன்  உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் தமது சொந்த நாடுகளிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத்தொடரமுடியும்' என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐநா ஆணையாளரின் அறிக்கையில்  கண்டறிதல்களை இலங்கை அரசாங்கத்தரப்பினர் உடனடியாக நிராகரித்துள்ளனர். அதில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் இந்த அறிக்கையில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே 58வது மற்றும் 53வது  படையணிகளுக்கு தலைமை தாங்கியிருந்தனர். இந்த இரு படையணிகளும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களின் கீழேபாரதூரமான குற்றச்செயல்களை ஆயுத மோதல்களின் போது இழைத்துள்ளனர் எனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019ம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால  இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டபோது சர்வதேச நாடுகள் சில கரிசனைகளை முன்வைத்த நிலையில் அவை வருந்தத்தக்கது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்ததுடன் அந்த தீர்மானம் இறையாண்மை கொண்ட நாட்டின் தனிப்பட்ட  நடவடிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தது. 

இந்த அறிக்கைதொடர்பாக இலங்கை அரசாங்கம் வழமையான மறுப்பை வெளியிட்டுள்ளபோதிலும் மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஜோன் பிஸர் இந்த அறிக்கை இலங்கை சர்வதேச சட்டங்களின் கீழ் இழைத்த குற்றங்கள் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்கூறலுமின்றி முற்றுமுழுதாக தண்டனை விலக்குபான்மையில் நடந்துகொண்டிருப்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment