Saturday, January 16, 2021

கொரோனாவிற்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் ஆரம்பம்

 


கொரோனா வைரஸிற்கு எதிரான உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஜனவரி 16, சனிக்கிழமை) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

'எப்போது கொரோனா தடுப்பூசி வரும் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. இந்த நேரத்தில் இந்திய மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்' என கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோதி.

'பொதுவாக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தியா இரு கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை மிக குறுகிய காலகட்டத்தில் தயாரித்திருக்கிறது. மேலும்இ சில கொரோனா தடுப்பு மருந்துகளும் பரிசோதனையில் இருக்கின்றன. இரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து அவசியம். இரு டோஸ்களுக்கிடையில் ஒரு மாத கால இடைவெளி அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.'

'முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்ட உடன்,யாரும் முகக்கவசத்தை பயன்படுத்தாமல் இருக்கும் தவறையோ அல்லது சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கும் தவறையோ செய்ய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் இரண்டாவது டோஸ் மருந்து செலுத்திக் கொண்ட பிறகு தான் போதுமான நோய் எதிர்ப்புத் திறன் உடலில் மேம்படும்' என்றார் பிரதமர் மோதி.

இந்தியா தன் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டத்திலேயே 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தவிருக்கிறது. இரண்டாவது கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவின் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் சந்தித்த சவால்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோதி அப்போது உணர்ச்சிவசப்பட்டதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து இந்தியாவின் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்களை காப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.


கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் லட்சக்கணக்கான டோஸ் மருந்துகள் ஏற்கனவே இந்தியாவின் பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

முதலில் இந்தியாவில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்கள் மற்றும் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு இந்தியாவில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின்படிஇ இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும். அவர்களைத் தொடர்ந்து காவல் துறையினர் ராணுவ வீரர்கள் நகராட்சிப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment