ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் Edward Ned Price-இன் ட்விட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் கொண்டுள்ள கரிசனைகள் மற்றும் கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மீதே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் அண்மையில் வௌியிட்டிருந்தார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.
அனைத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் உடனடியாக, விரிவான பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் தனது வருடாந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட கால வழக்குகளுக்கு பொறுப்புக்கூறும் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறலை பலப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு விடயத்தில் மறுசீரமைப்புகளை அமுல்படுத்துமாறும் மிச்செல் பெச்சலட் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.
No comments:
Post a Comment