Monday, September 21, 2020

பிரதமர் மஹிந்தவுடன் செப்.-26ல் இந்தியப் பிரதமர் மோடி 'வீடியோ கொன்ஃபரன்ஸ்' ஊடாக பேச்சுவார்த்தை !

 


 பிரதமர் மகிந்த ராஜபக் ஷவுடன்  செப்டம்பர் 26-ந் திகதி இந்தியப்பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கொன்ஃபரன்ஸ் (Video Conference) மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக என இலங்கை பிரதமர் ஊடகப்பிரிவின் முக்கியஸ்தரொருவரிடம் வினவியபோது , "இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதிலும் கூட ,பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான வாய்ப்பு அனேகமாக உள்ளது .தற்போது ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம்"எனத் தெரிவித்தார். 


இந்தியாவின் பிரபலமான இணைய ஊடகமான https://tamil.oneindia.com/ல் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:

நாட்டின் அண்டை நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் முதல் கட்டமாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி வரும் 26-ந் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடுகிறார்.

இலங்கை ராஜபக்சே சகோதரர்கள் 

இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நாடு. இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் உள்ளனர்.

சீனா- இந்தியா 

இருவருமே சீனா சார்பு கொள்கை உடையவர்கள். இருந்த போதும் இம்முறை இலங்கையில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், இந்தியாவுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னொரு பக்கம் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதில் ராஜபக்சே சகோதரர்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

மகிந்தவுடன் மோடி பேச்சுவார்த்தை இதற்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி வரும் 26-ந் தேதி இந்த வீடியோ கான்ஃபரன்ஸ் உரையாடலை மேற்கொள்கிறார். வங்கதேசத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதேபோல் மியான்மருக்கு வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்கலா, ராணுவ தளபதி நரவனே இருவரும் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

மியான்மருக்கு ராணுவ தளபதி பயணம்

 மியான்மர் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதியின் மியான்மர் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மாலத்தீவுக்கு 250 மில்லியன் அமெரிக்கா டாலர் நிதி உதவியை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வழங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாலத்தீவு பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

நேபாளத்துடன் பேச்சு இல்லை 

ஆனால் நேபாளத்துடன் எந்தவித பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை. இந்திய பகுதிகளை நேபாளம் தமது வரைபடத்தில் சேர்த்திருக்கிறது. அத்துடன் புதிய வரைபடத்தை நாணயங்கள் உள்ளிட்டவற்றிலும் நேபாளம் இணைத்துள்ளது. சீனாவின் தூண்டுதலால் நேபாளம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நேபாளம் மீது மத்திய அரசு அதிருப்தியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment