Tuesday, September 29, 2020

உலகளவில் பத்து லட்சத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்

 




உலகில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் வேகமாக பரவிவருவதான அதிர்ச்சிகரமான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏழு மில்லியனுக்கு அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அமெரிக்காவில் 205,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த நிலையில் பிரேஸிலில் 141,700 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக பரவிவரும் இந்தியாவில் இதுவரை 6 மில்லியனுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் 95,000 பேர் இதுவரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளுக்கு அமைய அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த எண்ணிக்கை ஏறத்தாழ அரைவாசியாகும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது ஒரு மிகவும் துன்பகரமான மைல்கல் என  ஒரு மில்லியனைத் தாண்டிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ பூட்டரஸ் வர்ணித்துள்ளார்..



சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா தொற்று நோய் குறித்த தகவல் முதலில் வெளியாகிய கடந்த டிசம்பர் மாதம்  முதல் ஏறத்தாழ பத்துமாத காலப்பகுதியில் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது உலகிலுள்ள 188 நாடுகளைச் சேர்ந்த 32 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment