Tuesday, September 22, 2020

உயர் மட்டத்தின் அலட்சியத்தால் பலியான உயிர்கள்; ஈஸ்டர் தாக்குதல் குறித்த சாட்சியங்கள் புலப்படுத்துவது என்ன?

 


கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதில் 300 வரையான அப்பாவி உயிர்கள் ஆலயங்களில் பலியானமைக்கு அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியமும் பொறுப்பற்ற செயற்பாடுமே முக்கியமான காரணம் என்பதை தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக அளிக்கப்படும் சாட்சியங்கள் மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. 

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்த எச்சரிக்கைகள் பாரதூரமானவை என அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன முக்கியமாக அறிவித்திருக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று மீண்டும் சாட்சியமளித்தபோது அவர் இதனைக் கூறினார்.



வௌிநாட்டு புலனாய்வுப் பிரிவின் எச்சரிக்கை ஊடாகஇ நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்பட்டது எனவும்இ தாக்குதல் நடத்தப்படும் என உறுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நேற்று ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கைகளின் பாரதூரத்தன்மை தொடர்பில் ஆராய்ந்து உறுதியான தகவல்களை வழங்காது எச்சரிக்கை உள்ளதென மாத்திரம் குறிப்பிட்டமை அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் செய்த தவறென ஹேமசிறி பெர்ணான்டோ கூறினார்.

சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவின் தலைவர் அதன் பாரதூரத்தன்மை தொடர்பில் அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதெனக் கூறப்படும் தகவல் தாம் பதவி வகித்த காலப்பகுதியில் உள்நாட்டு புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்து கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவனெல்லவில் புத்தல் சிலை சேதமாக்கப்பட்டமை வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் காத்தான்குடி மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து தாம் கண்காணிக்கவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே வெடிபொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை இந்த சம்பவங்களின் மூலம், தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது நாட்டிற்கே ஆபத்தான நிலைமை எனவும் ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்டார்.

ஏப்பர் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளங் காணப்பட்ட சஹரான் ஹாஷிம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப் பேரவை, எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும், அந்தக் கூட்டங்களின்போது வௌிநாட்டு எச்சரிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் தயக்கம் காட்டியதாகவும் ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியமளித்தார்.

இதேவேளை, தாம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நேற்று  குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்த கருத்தை நிராகரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தார்.

அந்த அறிக்கை மூலம் தமது சேவை பெறுநர் அச்சமடைந்துள்ளதாக ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் சாட்சியாளரிடம் குறுக்குக் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பத்தைக் கோராமல்இ அறிக்கை மூலம் குற்றச்சாட்டை நிராகரிப்பது ஆணைக்குழுவின் அதிகாரத்தைப் பொருட்படுத்தாத நிலைமையாகும் என ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி கூறினார்.

அறிக்கையை வௌியிட்டஇ முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரை ஆணைக்குழுவிற்கு அழைத்து நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடவில்லை என்பதை தௌிவுபடுத்துவதற்கான காரணத்தை வினவுமாறு சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய கோரிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கை தொடர்பில் தாம் அறியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சரித் குணரத்ன தெரிவித்தார்.

தமது சேவை பெறுநரால் அது குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிக்கு ஆணைக்குழு  நேற்று உத்தரவிட்டது.

ஹரினின் கூற்றுக்கு மெல்கம் ரஞ்சித் கண்டனம்

இதேவேளை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ வழங்கிய வாக்கு மூலத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை உட்பட அனைத்து ஆயர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஹரின் பெர்னாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியம் தொடர்பான செய்தி ஊடகங்கள் மூலம் அறிய வந்தபோது தாமும் ஆயர் பேரவையின் அனைத்து ஆயர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக பேராயர் மெல்கம் ரஞ்சித்ஆண்டகை தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற ஈஸ்டர் தினத்தன்று காலையில் முக்கியமான ஆலயங்களில் திருப்பலி பூஜைகள் நடத்தப்படவில்லை என்றும் அதற்கு காரணம் ஏற்கனவே மேற்படி தாக்குதல் தொடர்பில் பேராயர் அறிந்திருந்தமையே என்றும் ஹரின் பெர்னாண்டோ தன்னிச்சையாக விசாரணைக் குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்த வாக்குமூலமானது பேராயர் மீது சுமத்தப்படும் அநீதியான குற்றச்சாட்டு என்றும் கொழும்பு உயர்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழமைபோன்று ஈஸ்டர் இரவு அதாவதுஇ ஏப்ரல் இருபதாம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டதாகவும் அந்த திருப்பலி பூசை விடியற்காலை 2 மணி வரையும் தொடர்ந்ததாகவும் அதனையடுத்து மறுநாள் காலை பேராயர் இல்லத்தில் அவரால் திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும் கொழும்பு உயர் மறைமாவட்டம் தெரிவிக்கின்றது.

அந்த வகையில்ஹரின் பெர்னாண்டோ எம்பி வழங்கியுள்ள வாக்கு மூலம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பேராயரோ அல்லது எந்த ஒரு கத்தோலிக்க குழுக்களோ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எந்த விதத்திலும் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றும் கொழும்பு உயர்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment