Wednesday, February 10, 2021

"இது முஸ்லிம் சமூகத்திற்கு உரிமைகளை வழங்கவேண்டும் என்பதற்காக வழங்கப்படவில்லை"-

 


ஜெனிவா நடைமுறைகளில் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக சீனா மற்றும் பாகிஸ்தான் துணையுடன் இலங்கை அரசாங்கம்  மேற்கொண்டுவரும் காய்நகர்த்தல்களின் ஒரு பகுதியாகவே கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக விடுத்துள்ள அறிவிப்பை கருதவேண்டுமே தவிர முஸ்லிம்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட விடயமாக நோக்கமுடியாது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷீரின் ஷரூர் தெரிவிக்கின்றார். 

கொவிட்-19 அன்றேல் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் ( புதைப்பதற்கு ) அனுமதி வழங்குமாறு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாக இலங்கையிலுள்ள மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துவருகின்றபோதும் தொடர்ச்சியாக பலதடவைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பற்றியும் அதற்கான பின்னணிக்காரணம் பற்றியும் அறிந்துகொள்வதற்காக இலங்கையிலுள்ள முக்கியஸ்தர்களிடம் குளோப் தமிழ் வினவியது .

பிரதமரின் இன்றைய அறிவிப்பு தொடர்பாக சர்வதேச விருதைகளை வென்ற மனித உரிமைகள் செயற்பட்டாளர் ஷிரீன் ஷரூர் கருத்துவெளியிடுகையில்  ' இது முஸ்லிம் சமூகத்திற்கு உரிமைகளை வழங்கவேண்டும் என்பதற்காக வழங்கப்படவில்லை. உண்மையில் இது ராஜபக்ஸ அரசாங்கம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா நடைமுறைகளில் அடுத்துவரும் இரண்டுவாரங்களும் அவர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கப்போகின்றது.  ராஜபக்ஸ அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் துணையுடன்  வழிதேடிக்கொண்டிருக்கின்றனர்.ஒரு தீர்மான வரைபை தயாரித்து  சீனாவின் உதவியுடன் ஜெனிவாவில் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு வெளியே வருவதற்கும் தற்போது இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் செயற்படும் பிரதான குழு தயாரித்துக்கொண்டிருக்கின்ற தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள்  குறிப்பாக ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் உதவியைத் தேடிக்கொள்வதற்காகத் தான் இதனைத் திட்டமிட்டிருக்கின்றனர். நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி தருவதாக கூறினாலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனைவரையும் தகனம் ( எரிக்கவேண்டும்) செய்யவேண்டும் என்று கடந்த  ஆண்டு ஏப்ரல் 11ம் திகதி கொண்டுவரப்பட்ட  அதிவிசேட வர்த்தமானியை மாற்றி அமைக்காமல் முஸ்லிம்களுக்கு நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது . "

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுக்களை கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே தாக்கதல் செய்து முன்னின்று செயற்பட்டவரான ஷீரின் ஷரூர் மேலும் தெரிவிக்கையில் 

"இதனை முஸ்லிம்களுக்கு தற்காலிகமாக கிடைத்த ஓர் ஆறுதலாக பார்க்கின்றேனே தவிர  நீண்ட காலத்தில் ராஜபக்ஸ அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு செய்த அநியாயங்களில் இருந்து ஜெனிவாவில் இருந்து தப்பிச் செல்லுமாயின் இது சிறுபான்மை மக்களுக்கு நீண்டகாலத்தில் சாவுமணி அடிக்கும் ஒரு செயற்பாடாக நான் இதனைப் பார்க்கின்றேன்.  இது நீண்டகாலப்பகுதியில் சிறுபான்மையினருக்கு எவ்வித பலாபலனையும் தரப்போவதில்லை. ஏனெனில் உலகைப் பொறுத்தவரையிலோ இலங்கையைப் பொறுத்தவரையிலோ கொவிட் உலகளாவிய தொற்றுநோய் என்பது ஒரு தற்காலிகமான சூழ்நிலை. குறிப்பிட்ட காலத்திற்கு சுகாதாரப்பிரச்சனையாலே வந்தது. அந்த சுகாதாரப் பிரச்சனையில் இவர்கள் செய்த பாரிய மனித உரிமை மீறல்களில் ஒன்றுதான் நல்லடக்கத்திற்கு அனுமதியளிக்காமல் செய்தவிடயமாகும்.  அது ஒரு அரசியல்  காய்நகர்த்தல் என்பது அனைவருக்குமே வெட்டவெளிச்சமானது. சிறுபான்மை முஸ்லிம் மக்களைத் தண்டிப்பதற்காகவே ராஜபக்ஸ அரசாங்கம் கொண்டுவந்தது. ஆனால் ராஜபக்ஸ அரசாங்கம் பல தசாப்ங்களாக தமிழ் மக்களுக்கு எதிராகவும் 2009ம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அநியாயங்கள், பாரபட்சங்கள், மனித உரிமை மீறல்கள் எல்லாம் இதனால் மாறப்போவதில்லை.  ஒருவிதத்தில் அரசாங்கத்தை கேள்வி கேட்கக்கூடிய ஒரே தகமையில் இருப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையாகும். அதிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிப் பிழைத்தால்  இலங்கை மியன்மார் போன்று முன்நகர்ந்து  இராணுவமயப்படுத்தப்பட்டு சர்வாதிகார நாடாக மாறுவோம். அதில் ஒருபகுதியாகவே நான் இதனைப் பார்க்கின்றேன் . இதனைக் கொண்டாடுவதற்கு எனக்கேதும் இல்லை. 'எனத் தெரிவித்தார். 

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் இடைவிடாது போராட்டங்களை நடத்திவரும் காணாமல் போனவர்களின் தமிழ்த் தாய்மார் மற்றும் உறவினர்கள் ,  சந்தியா எக்னெலிகொட போன்ற சிங்கள சகோதரிகள்,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமது உறவுகளுக்காக போராடிவருகின்ற பெண்கள் உட்பட உறவுகள் நில அபகரிப்பிற்கு எதிராக சளைக்காது போராடுகின்றவர்களின் துணிகரமான போராட்டங்களின் விளைவாக ஜெனிவாவில்  ஏற்பட்ட அழுத்தங்களின் பிரதிபலிப்பாகவே தற்போது  கொரோனாவால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக அடையாள அறிவிப்பை அரசாங்கம் விடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இதற்காக  தொடர்ச்சியாக போராடியவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக கடந்த மாதம் 27ம்திகதி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து குளோப் தமிழ்  நடத்திய விசேட கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய மனித  உரிமைகள் செயற்பாட்டாளர் ஷீரின் ஷரூர் அவர்கள் ஜனாஸா எரிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அந்தக் காணொளி இதோ:


No comments:

Post a Comment