Saturday, February 20, 2021

ஜெனிவா இலங்கையில் நிகழ்த்தும் ஆச்சரியங்கள்!

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ( பெப்ரவரி 22ம் திகதி)  ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை அமர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்ற கேள்விகள் மக்கள் முன்பாக காணப்படுகின்றன. 

மனித உரிமைப் பேரவையினூடாக எதனையும் செய்யமுடியாது என நம்பிக்கையிழக்க வைக்கும் கருத்துக்களை கடந்த காலத்தில் கூறியவர்களே தற்போது புருவங்களை உயர்த்தும் அளவிற்கு  46வது அமர்விற்கு முன்பாக இலங்கையில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

                                  உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச் .எம்.டி. நவாஸ்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பாச்லேட் அம்மையார் இலங்கை தொடர்பான அறிக்கையை இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக அனுப்பிவைத்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில் நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச் .எம்.டி. நவாஸ் தலைமையில் மூவரடங்கிய ஆணைக்குழுவை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தார். மனித உரிமைப்பேரவையின் 46வது அமர்வு ஆரம்பமாவதற்கு ஒரு மாத காலப்பகுதியிருந்த நிலையில் இந்த நியமனம் அமைந்திருந்தது. மைத்திரி-ரணில் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போதும் போர்க்குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்து வந்த அரசாங்கம் பொறுப்புக்கூறலைப்பற்றியோ நல்லிணக்கத்தைப் பற்றியோ துளிகூட கவலைப்படாத தற்போதைய அரசாங்கம், திடுதிடுப்பென ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தமை எதிர்வரும் அமர்வு தொடர்பாகவும் கடந்த ஜனவரி மாதம் 27ம்திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளாரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் கொண்டுள்ள கவலைகளை புலப்படுத்துகின்றன. 


                                               சக்திக சத்குமார

சில வாரங்களுக்கு முன்பாக புனைக்கதை  எழுத்தாளர் சக்திக சத்குமார விடுதலை செய்யப்பட்டிருந்தார்.  சத்குமார எழுதிய புனைக்கதையானது புத்தமத்திற்கு இழுக்கையும் அபகீர்த்தியையும் கொண்டுவருவதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதுசெய்யப்டிருந்த சத்குமார பலமாதங்களாக சிறையில் வாடியிருந்தார். 



ஜெனிவா அமர்வுகளுக்கு சில நாட்கள் இருகைiயில் அவர்  விடுவிக்கப்பட்டாரென்றால்  கடந்த பத்துமாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாதிருந்த வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். இதற்குப் பின்னாலும் எதிர்வரும் ஜெனிவா அமர்வுதான் காரணம் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.



போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மீது பயணத்தடை , சொத்துக்கள் முடக்கம் ,வெளிநாடுகளில் வழக்குத்தொடரல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் அரசாங்கம் ஜெனிவாவில் புதிய தீர்மானத்தை தடுப்பதற்கும் இல்லாவிடின் நீர்த்துப் போகச் செய்யகடுமையான முயற்சிகளை எடுத்துவருகின்றது.  ஏற்கனவே தமிழ்க்கட்சிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கண்துடைப்பு ஏமாற்று முயற்சி காலத்தை இழுத்தடிக்கும் செயல் என வர்ணிக்கப்பட்ட நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு போன்றோ சக்திக சத்குமார, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோ இன்னமும் எத்தனை  நகர்வுகள்  நடாத்தப்படவுள்ளதோ?

No comments:

Post a Comment