Saturday, February 13, 2021

நீதிக்காக ஐநாவை நம்பியிருந்தால் இலங்கை மக்கள் ஏமாற்றமடைய நேரிடும்- முன்னாள் ஐநா உயர் அதிகாரி

 




இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நீதிக்காக  மக்கள், ஐக்கிய நாடுகள் சபையை தங்கியிருந்தால் அவர்கள் ஏமாற்றமடைய நேரிடும்  என ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

எனவே மக்கள் நீதிக்காக ஐநாவில் நம்பியிருக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  



இலங்கை விடயத்தில் தீர்மானமாக நடவடிக்கை எடுப்பதற்காக துணிவை ஐநா கொண்டிருக்கவில்லை எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி  செயலாளர் நாயகமாக திகழ்ந்தவரும் போர்க்காலத்தில் ஐநாவால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் தலைவராக செயற்பட்டவருமான சாள்ஸ் பெற்றி Charles Petrie என்பவரே இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

உலக தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை, நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் மனித  உரிமைகளுக்கும் சர்வதேச நீதிக்குமான நிலையம் சமாதானத்திற்கும் நீதிக்குமான இலங்கை செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றினால் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.




சரியான விடயத்தை செய்யவேண்டும் என்ற எண்ணமுள்ள அதிகாரிகள் கொழும்பிலும் வேறிடங்களிலும் உள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் இருந்த போதிலும் தீர்மானமாக செயற்படுவதற்கான தைரியத்தை ஐநா கொண்டிருக்கவில்லை ஆதலால் இலங்கை மக்கள் ஐநாவில் தங்கியிருக்கக்கூடாது என சுட்டிக்காட்டினார். 
.
ஐநாவில் மக்கள் நீதிக்காக தங்கியிருந்தால் அவர்கள் ஏமாற்றமடைய நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.மாறாக, மக்கள் தமது சொந்த உறுதிப்பாட்டில் முன்நகர்கின்றபோது ஐநாவும் தனது பணியை ஆற்றுமாக இருந்தால் அது எதிர்பாராக வெற்றியாக அமையக்கூடும். 


போர்க்காலத்தின் போதும் அதன் பின்னரும் இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் கட்டமைப்பானது எவ்வாறு செயற்பட்டது என விரிவாக ஆராய்வதற்காக ஐநாவின் செயலாளர் நாயகமாக பான் கீ மூன் இருந்தபோது அவரால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு சாள்ஸ் பெற்றி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.




அந்தக் குழுவினர் தமது விசாரணைகளின் இறுதியில் சமர்பித்த அறிக்கையில் ஐநா அதன் பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றத்தவறிவிட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 





No comments:

Post a Comment