Tuesday, February 16, 2021

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களுக்கு மத்தியிலும் ஏன் இலங்கையில் Lockdown நடைமுறைப்படுத்தப்படவில்லை?

 


இலங்கையில் கடந்த சில தினங்களாக அதனையும் தாண்டி கடந்த சில வாரங்களாக சடுதியாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு மத்தியிலும்  வேகமாக பரவக்கூடிய உருமாறிய கொரோனா இலங்கையில் பரவிவருகின்ற நிலையிலும் நாட்டை மீண்டும் முடக்கப்போகிறார்களா ?  முடக்கநிலையை ஏன் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை?  எப்போது மீண்டும் முடக்கம் வரும்? போன்ற கேள்விகளுக்கு  இன்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில அளித்த பதில் விடையளித்திருக்கின்றது. 

இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட   நாடு தழுவிய Lockdown முடக்க நிலை மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஜுன் 28ம் திகதி  நீக்கப்பட்டது.

அண்மைக்காலமாக  நாள்தோறும் ஆயிரத்தை நெருங்கும் அளவிற்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாலும் நாடுதழுவிய ரீதியில் மீண்டும் முடக்க நிலை வருமா ? வராதா? என்ற வாதப்பிரதிவாதங்கள்  சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும்  பேசுபொருளாகியிருகின்ற நிலையிலேயே உதய கம்மன்பிலவின் கருத்துக்கள்  வெளியாகியுள்ளன.



நாட்டில் மீண்டும் முடக்கநிலையை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இலங்கையின் பொருளாதார நிலை  காணப்படவில்லை என்பதே அவரது கருத்துக்களின் சாரமாக இருந்தது. இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய கம்மன்பில 13 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அவுஸ்திரேலிய நகரான மெல்பேர்ணில் 4வது தடவையாக முடக்க நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில்  நாடுதழுவிய முடக்கநிலை  நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த  காலப்பகுதியில் பொருளாதாரம் நீர்மூலமாகியதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் தொழில்களை இழந்திருந்தனர். ' எனவே இலங்கைபோன்ற கடனில் நிறைந்துள்ள நாட்டில் நாம் முடக்கநிலையை நடைமுறைப்படுத்த விரும்பினாலும் கூட அதனைச் செய்யும் இயலுமை கிடையாது' என அவர் கூறினார். 

' கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதே எமக்கு முன்பாக இருக்கும் சவாலாகும். ஐடிஎச் என்ற வைத்தியசாலை 100 வீதம் கொரோனா தொற்றாளர்களால் நிறைந்திருக்கும் . ஆனால் அங்கு பணிபுரியும் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஏனையவர்களில் எவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை'  இருப்பினும் இரத்தினபுரி கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் முதல் நிலைப்பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கிலக்காகியுள்ளனர். இது எதனைக் காண்பிக்கின்றதென்றால் மக்கள் அவதானமாக இருந்தால் கொரோனா தொற்றாளர்கள் இருக்கும் இடத்தில்  இருந்தாலும் கூட தொற்றுக்குள்ளாகாமல் பாதுகாத்துக்கொள்ளலாம் ' என அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதன் காரணமாகவே அரசாங்கம் அதிகரிக்கும் கொரோனாவிற்கு மத்தியிலும் கூட நாட்டில் முடக்கநிலையை அரசாங்கம் அறிவிக்கவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. 

இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு கடந்தகாண்டு டிசம்பர் மாதம் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து  இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment