கொரோனா தொற்றினால் இலங்கையில் 46 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் கொரோனாவால் இறந்த இலங்கையர்கள் என்று பார்த்தால் உண்மையான எண்ணிக்கை இதனைவிடவும் அதிகமாகும். கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் படி இலங்கையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆகும்
இலங்கையில் மாத்திரம் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 46ஆகும் என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்ற போதிலும் இறந்தவர்கள் உண்மையான எண்ணிக்கை என்ன என்பது தொடர்பான முரண்பட்ட தகவல்களும் இருக்கவே செய்கின்றன. மோதரை பகுதியில் கடந்த மே மாதத்தில் இறந்த பாத்திமா ரினோஷா கொரோனா காரணமாக இறக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தொடர்ச்சியாக பதிவுகளை இட்டுவருவதுடன் அந்தப்பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு அடுத்து சவுதி அரேபியாவிலேயே அதிகமான இலங்கையர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அங்கு 30 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்து கட்டாரில் 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இலங்கையின் குடியுரிமையை தற்போதும் கொண்டிருப்பவர்கள். ஆனால் இலங்கையில் பிறந்து ஐரோப்பிய மற்றும் மேலைத்தேய நாடுகளில் குடியேறியவர்களையும் சேர்த்தும் பார்த்தால் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும்.
No comments:
Post a Comment