Thursday, November 19, 2020

25 ஆண்டுகளுக்கு முன்னர் இளவரசி டயானா வழங்கிய நேர்காணல் தொடர்பான வழக்கு விசாரணை ஏன்?

 


ஊடகங்கள் தமக்கு பிரபல்யத்தை தேடுவதற்கு ஊடக விழுமியங்களை மீறிச் செயற்படுவது இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாக தொடர்ந்தவண்ணமுள்ளது. இந்தநிலையில் இளவரசி டயானாவிடம் நேர்காணலொன்றைப் பெறுவதற்காக பிபிசி நிருபர் ஒருவர் கையாண்ட வழிமுறைகள் ஊடக தர்மத்திற்கு முரணாக அமைந்துள்ளதென  எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 

1995 இல் பிரித்தானிய இளவரசி டயனாவுடன் இடம்பெற்ற நேர்காணல் தொடர்பில் BBC துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இளவரசர் சார்ள்ஸூடனான திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் தொடர்பில் இளவரசி டயானா இந்த பேட்டியில் வௌிக்கொணர்ந்திருந்தார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோன் டைசன் தலைமையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக BBC அறிவித்துள்ளது.

காலஞ்சென்ற இளவரசி டயானாவின் சகோதரர் சார்ள்ஸ் ஸ்பென்சரின் வேண்டுகோளுக்கேற்ப இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமது சகோதரியை இந்த நேர்காணலில் பங்கேற்க இணங்க வைப்பதற்காக குறித்த நேர்காணலை நடத்திய ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் போலியான ஆவணங்களைத் தம்மிடம் காண்பித்துள்ளதாக டயானாவின் சகோதரர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர், இளவரசி டயானாவை நேர்காணலுக்கு அழைப்பதற்காக முறையற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தியதாக புதிதாக வௌியாகியுள்ள அறிக்கைகளும் குற்றஞ்சாட்டுகின்றன.

1995 இல் BBC-இல் ஔிபரப்பாகிய இந்த நேர்காணலை 22.8 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர்.

தன்னுடைய திருமண வாழ்க்கையில் தான் உட்பட இளவரசர் சார்ள்ஸ், அவருடைய நீண்டநாள் காதலி கமீலா பார்க்கர் ஆகிய மூவர் சம்மந்தப்பட்டிருப்பதாக இளவரசி டயானா தெரிவித்திருந்தமை அந்நாட்களில் பிரபலமாகப் பேசப்பட்டது.

அத்துடன், தான் இளவரசர் சார்ள்ஸ் மீது நம்பிக்கையற்றிருப்பதாகவும் அவர் இந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு இளவரசர் சார்ள்ஸூம் இளவரசி டயானாவும் விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்து பெற்ற அடுத்த வருடம் பாரிஸில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி இளவரசி டயானா உயிரிழந்தார்.

No comments:

Post a Comment