அண்மைக்கால வரலாற்றில் இல்லாதவாறு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் யார் ஜனாதிபதியாக தெரிவானார் என்ற விடயம் இன்றைய தினம் வெளியாகாமையானது அமெரிக்கர்களை மட்டுமன்றி உலக மக்களையும் கேள்விகளுக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. அமெரிக்கத் தேர்தல்களில் முடிவுகள் உடனடியாகத் தெரியத் தொடங்கிவிடும். இதற்கு மாறாக, வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பா இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஏன் இப்படி?
தேர்தல் நாளன்று இரவே முடிவுகள் தெரியாமல் போவது எப்போதும் சாத்தியம்தான்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அஞ்சல் வழியாக தங்கள் வாக்குகளை செலுத்திவருகின்றனர். எனவே, எல்லா வாக்குகளையும் எண்ணி முடிப்பதற்கு தாமதமாவது எதிர்பார்க்கப்பட்டதுதான்.
வழக்கமாக அமெரிக்க தேர்தல் முடிவு எவ்வளவு சீக்கிரம் வரும்?
வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதிதேர்தல் முடிவு வாக்குப்பதிவு நாளன்று இரவே தெரிந்துவிடும்.
வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் வாக்குப்பதிவு முடிவுக்கு வரும். அத்திலாந்திக் சமுத்திரத்தை ஒட்டியதாக அமைந்துள்ள கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் முதலில் வாக்குப் பதிவு முடிவுக்கு வரும். உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
எல்லா வாக்குகளும் தேர்தல் நாளன்று இரவே எப்போதும் எண்ணி முடிக்கப்பட்டதில்லை. ஆனால், வெற்றி பெற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் அன்று இரவே எண்ணி முடிக்கப்பட்டிருக்கும்.
ஒரு வேட்பாளர் இனி தோற்கடிக்கப்படவே முடியாத அளவுக்கு முன்னிலை பெற்றவுடன் அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகைகள் அவர் வெற்றி பெற்றதாக முன்முடிவு செய்வார்கள். இதை புரொஜக்ஷன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இப்படி ஒரு வேட்பாளர் புரொஜெக்ட் செய்யப்படுவது அதிகாரபூர்வமான இறுதி முடிவு அல்ல. ஆனால், கிட்டத்தட்ட எப்போதும் இது சரியாகத்தான் இருக்கும்.
தேசிய அளவில் பெறும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக போதிய அளவு மாகாணங்களை வெல்வதன் மூலமாகவே அவர்கள் ஜனாதிபதியாகவெற்றி பெறுகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்தல் சபை உறுப்பினர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும். ஒரு மாநிலத்தில் வெற்றி பெறுகிற ஜனாதிபதி வேட்பாளருக்கு அந்த மாநிலத்துக்குரிய தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கை சேரும்.
270 தேர்தல் சபை வாக்குகளைப் பெறுகிற வேட்பாளர் ஜனாதிபதி ஆவார்.
2016 தேர்தலில் கிழக்குத் திட்ட நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு விஸ்கான்சின் மாநிலத்தில் டிரம்ப் வெற்றி பெற்றவுடன், அவரது தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கை 270ஐக் கடந்தது. அதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மட்டும் தாமதம் ஏன்?
கொரோனா வைரஸ் பிரச்சனையால் அஞ்சல் வழியாகவோ, நேரிலோ வழக்கத்தைவிட நிறைய பேர் சீக்கிரமாகவே வாக்களித்துவிட்டனர்.
அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு கையெழுத்தும், முகவரியும் சரிபார்க்கப்படவேண்டும். இதனால் அஞ்சல் வாக்குகளை எண்ணுவது இயல்பாகவே தாமதமாகும்.
ஃப்ளோரிடா போன்ற சில மாகாணங்கள் இந்த நடைமுறையை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே தொடங்க அனுமதித்தன. எனவே, வாக்குகள் எண்ணப்படுவதற்குத் தயாராக இருந்தன. அதனால்தான் அந்த மாநில முடிவுகள் முன்னதாகவே வெளியாயின.
அரிசோனாவும் முன்னதாகவே எண்ணிக்கையைத் தொடங்கிய மாநிலம்தான். எனவே அங்கும் விரைவில் முடிவுகள் வெளியாகும்.
எந்த மாநிலங்களில் தாமதம்?
பென்சில்வேனியா, விஸ்கான்சின் போன்ற மாநிலங்களில் தேர்தல் நாளுக்கு முன்பே அஞ்சல் வாக்கு நடைமுறையைத் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் என்ன முடிவு வரப்போகிறது என்பது தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால்இ இந்த மாநிலங்களில் முடிவு தெரிய சில நாள்கள்கூட ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோர்ஜியா, மிஷிகன் வட கரோலினா போன்ற முக்கிய மாநிலங்களும் இன்னும் தொங்கலில்தான் உள்ளன.
தாமதத்துக்கு வேறு என்ன காரணம்?
பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களில் தேர்தல் நாளுக்குப் பிறகு வரும் அஞ்சல் வாக்குகளும் கணக்கில் கொள்ளப்படும். நவம்பர் 3-ம் திகதி அஞ்சல் முத்திரையோடு அவை இருக்கவேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை. எனவே குறிப்பிட்ட அளவு வாக்குகள் வாக்குப் பதிவு முடிந்து சில நாள்கள் கழித்துகூட வந்து சேரும். பிறகு எண்ணப்படும்.
சில பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க கோரிக்கை விடுத்திருப்பார்கள். ஆனால்இ பிறகு நேரிலேயே வாக்களிக்க முடிவு செய்திருப்பார்கள். இந்த வாக்குகள் புரொவிஷனல் பேலட் எனப்படும். இவற்றின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் இந்த புரொவிஷனல் பேலட் வாக்குகள் சேர்க்கப்படாது. ஏனெனில் இந்த வாக்காளர்கள் நேரிலும் வாக்களித்துவிட்டு அஞ்சலிலும் வாக்கை அனுப்பிவிட்டார்களா என்பதை சரிபார்க்க நேரம் தேவைப்படும்.
வாக்குகள் எப்படி எண்ணப்படும்?
பேப்பர் வாக்குச் சீட்டுகளோ, டிஜிட்டல் வாக்குச் சீட்டுகளோ பெரும்பாலானவை இயந்திரங்களால் எண்ணப்படும்.
ஆனால், இயந்திரங்களால் எண்ணமுடியாத வாக்குகளை தேர்தல் பணியாளர்கள் சரிபார்த்து எண்ணிச் சேர்ப்பார்கள்.
வாக்குப் பதிவு முடிந்தவுடன், ஒரு மத்திய தேர்தல் தலைமையகத்துக்கு வாக்குப் பதிவுத் தரவுகள் அனுப்பிவைக்கப்படும். இந்த மத்திய தலைமையகம் என்பது ஒரு சிட்டி ஹால் அல்லது அது போன்ற ஓர் இடமாக இருக்கும்.
சில நேரங்களில் இந்த தரவுகள் மின்னணு முறையில் அனுப்பிவைக்கப்படும்.
பிற இடங்களில் வாக்குப் பதிவு தரவுகளை உள்ளடக்கிய நினைவக கருவிகள் நேரடியாக அனுப்பிவைக்கப்படும். அல்லது அந்த இயந்திரத்தின் முடிவுகள் தொலைபேசி வாயிலாக வாசிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கைகள் வந்தடைந்தவுடன், அவை அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரியும். அல்லது, தேர்தல் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் இத்தகைய எண்ணிக்கைகள் மூலம் தோற்கடிக்கப்படமுடியாத முன்னிலையை ஓர் அதிபர் வேட்பாளர் பெறும்போது அந்த மாநிலத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் பெயரை செய்தி நிறுவனங்கள் அறிவிக்கும்.
இந்த அதிகாரபூர்வமற்ற முடிவுகள், மாநில அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு, ஒரு வாரம் கழித்தே அதிகாரபூர்வமாக வெளியாகும்.
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் முதலில் ஓர் ஜனாதிபதி வேட்பாளர் பெற்றதாக அறிவிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் கடைசியாக வரும் அதிகாரபூர்வ எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் குறிப்பிடும்படியாக பெரிய வேறுபாடு இருக்காது.
தேர்தல் முடிவுகளில் குழப்பம் என்றால் என்னவாகும்?
பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 44 மாநிலங்களில் 300-க்கும் மேற்பட்ட தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டான்ஃபோர்ட் - எம்.ஐ.டி. ஹெல்தி எலக்ஷன்ஸ் பிராஜக்ட் குறிப்பிடுகிறது.
அடையாள சரிபார்ப்பு விதிகள், அஞ்சல் வாக்குகள், கோவிட்-19 காரணமாக வாக்களிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் என பலவிஷயங்கள் தொடர்பாக வழக்குகள் தொடரமுடியும்.
தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சொல்கிறார்.
2,000ம் ஆண்டு தேர்தலில் சுமார் 60 லட்சம் வாக்குள் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் 537 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் ஜனநாயக கட்சி வேட்பாளர் அல் கோர். ஜனாதிபதி தேர்தலிலும் அவர் தோற்றார்.
ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த மறு எண்ணிக்கை நடைமுறையின் முடிவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ்ஷுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தல் முடிவுகள் வருவதற்கு சில நாட்களல்ல சில வாரங்கள் கூட ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நன்றி-பிபிசி உலக செய்திச் சேவை
No comments:
Post a Comment