Friday, November 13, 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் மௌனம் கலைத்தது சீனா : ஜோ பைடன் , கமலாவிற்கு வாழ்த்து !

 


நவம்பர் 3ம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்ற கணிப்பு கடந்த 7ம்திகதி வெளியான  பின் பல்வேறு நாட்டின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இத்தனை நாட்களுக்குப் பிறகு சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

'அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்,' எனச் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க - சீன உறவு என்பது உலக நாடுகளுக்கு முக்கியமான ஒன்று.

சமீப நாட்களில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகம், கொரோனா பெருந்தொற்று, உளவு பார்த்தல் என பல்வேறு காரணங்களால் பதற்றங்கள் அதிகரித்திருந்தன.

சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மெளனம் கலைத்திருந்தாலும், ரஷ்யா இதுவரை பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு முதல் ஆளாக ரஷ்ய ஜனாதிபதி     விளாடிமீர் புடின் வாழ்த்து சொல்லியிருந்தார்.

ஆனால் இந்த முறை ஒரு தொலைப்பேசி அழைப்போ, ட்விட்டர் பதிவோ அல்லது டெலிகிராமோ என எதுவும் இல்லை.

'தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வந்த பிறகு வாழ்த்து தெரிவிப்பதே சரியாக இருக்கும்,' என ரஷ்ய தரப்பில் கூறப்பட்டிருந்தது.

ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், சீனாவின் தலைவர்கள், குறிப்பாக நாட்டின் அதிகாரமிக்க ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்க தேர்தல் முடிவுகளையும், டிரம்பின் தேர்தல் பிரசாரக் குழு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தாலும் ஜனவரியில் பைடன் ஜனாதிபதியாக பதவியேற்று கொள்வதையும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

2016 ஆண்டு தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தல் முடிந்து மறுதினமான நவம்பர் 9ம்திகதியே  சீன ஜனாதிபதி  வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இதேவேளை அமெரிக்க தேர்தலில் பெருமளவில் வாக்குப்பதிவில் மோசடி நடந்ததாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அந்நாட்டின் மத்திய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு சார்பாக விழுந்த 2.7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் ஆதாரமின்றி குற்றம்சாட்டியிருந்தார். இந்த தேர்தலில் ஏற்கெனவே அதிபர் பதவிக்குத் தகுதி பெற தேவைப்படும் 270 தேர்தல் சபை வாக்குகளை விட அதிகமான இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முன்னிலை நிலவரம் கூறுகிறது. இருப்பினும் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் முழுமையாக வெளி வரவில்லை.

இதனால், தேர்தலில் தான் தோல்வி அடைந்ததாக ஜனாதிபதி டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். இருப்பினும், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அங்கீகரித்து பல நாடுகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் 1996ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஜனநாயக கட்சிக்கு சாதகமாக அதிக வாக்குகள் கிடைத்துள்ளதால் அந்த மாநிலத்தின் 11 தேர்தல் சபை வாக்குகளும் பைடனுக்கு சாதகமாக கிடைக்கும் என பிபிசி கணித்துள்ளது.

இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு மோசடி தொடர்பான ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அந்நாட்டின் உள்துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பான சிஐஎஸ்ஏ குழு தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment