Wednesday, November 25, 2020

டியேகோ மரடோனாவை ஏன் விளையாட்டுலகம் கொண்டாடுகின்றது?

 



கால்ப்பந்தாட்ட விளையாட்டு  வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் டியேகோ மரடோனாவின் திடீர் மறைவு கால்ப்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்புடையவர்களை மட்டுமன்றி பல்வேறு விளையாட்டுக்களைச் சேர்ந்தவர்கள் அரசியற் பிரமுகர்கள்  வர்த்தக உலகத்தினர் என பல்வேறு தரப்பினரையும் கவலைகொள்ளவைத்துள்ளமைக்கு காரணம் என்ன? 

இன்று சமூக வலைத்தளங்கள் கேபிள் தொலைக்காட்சிகள் என தொடர்பாடல் அதி உச்சம் பெற்றுள்ள நிலையில் உலகின் எந்த மூலையில் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தாலும் அதனை நேரிலே பார்த்துவிடமுடியும். ஆனால் சமூக ஊடகங்களின் வருகைக்கு முன்பான காலகட்டத்தில் உலகில் தொடர்பாடல் வசதிகள் அதிகம் இல்லாத ஆசியா மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் கூட ரசிகர்களைக் சம்பாதித்த வீரர் என்றால் டியேகோ மரடோனாவிற்கு நிகர் யாரும் இருக்க முடியாது. 



மரடோனாவிற்கு என்ன நடந்தது?

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.

பிறகு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர்,  தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அதன் துணை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தபோதும் நின்று போன அவரது மூச்சை மீட்டெடுக்க அவர்களால் இயலவில்லை.

1960ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி பிறந்த மரடோனா மிக இளம் வயதிலேயே கால்ப்பந்தாட்ட விளையாட்டில் அபாரத்திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார். 



மரடோனா புகழ்பெறத்தொடங்கியது எப்படி?


தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனாஇ கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

 1986-ல் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கான மிக முக்கியக் காரணம் மரடோனா. அர்ஜென்டினா  அணியின் தலைவராக கேப்டனாக இருந்து மிகச்சிறப்பாக அணியை வழிநடத்த, அதுவரை கால்பந்து உலகம் பார்க்காதவகையில் கோல்கள் அடித்து அணியை சம்பியனாக்கினார் மரடோனா. இந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரானக் காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

உலகக்கிண்ணமொன்றை வென்றெடுப்பதில் தனியொரு வீரராக மரடோனாவைப் போன்று அதற்கு முன்போ பின்னரோ வேறெந்த வீரரும் அபரீமிதமான திறமையை வெளிப்படுத்தியதில்லை என்பது பல விற்பன்னர்களது கணிப்பாகவுள்ளது. 

1986ம் ஆண்டு போன்று 1990 ஆண்டிலும் அர்ஜன்டீனா அணியின் தலைவராக அணியை இறுதிப் போட்டிக்கு வழிநடத்தியிருந்தார் மரடோனா.



இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரராக அவரது ரசிகர்களால் புகழப்படும் மரடோனா சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரேசில் வீரர் பீலே உடன் மிகச்சிறந்த இரு கால்ப்பந்தாட்ட வீரர் என்ற விருதை வென்றெடுத்திருந்தார். 




No comments:

Post a Comment