Monday, November 30, 2020

துறைமுக திட்டத்திற்கு அஜித் டோவலுக்கு பச்சைக் கொடி காண்பித்தாரா ஜனாதிபதி கோட்டாபய?

 



இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவமிக்கதாக கருதப்படும் கொழும்பு துறைமுக கிழக்கு முனைய உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் சம்மதத்தைப் பெற்றுள்ளதாக நியூஸ் இன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 



இலங்கையின் பொருளாதார தீர்மானங்களிலும் கேந்திர முக்கியத்துவமிக்க சிந்தனைவெளியிலும் சீனா செல்வாக்குச் செலுத்துகின்றதென்ற புதுடில்லியினதும் வாஷிங்டனதும் எண்ணப்பாடு காரணமாக அதிகரித்துவந்த பதற்ற நிலையை தனது இரண்டு நாள் விஜயத்தின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் தணிக்க முடிந்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக விபரமாக குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகவும் பயன்மிக்கதாக அமைந்துள்ளதாக கூறப்படுவது முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதை வெளிப்படுத்திநிற்கின்றது. 

தகவலறிந்த வட்டாரங்களின் அடிப்படையில் நீண்டகாலமாக தாமதமடைந்திருந்த இலங்கை ஜப்பான் மற்றும் இந்தியா இடையிலான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நடத்திச்செல்வதற்குமான முக்கூட்டு உடன்படிக்கை திட்டம்  முன்செல்வதற்கான பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் இன் ஏசியா இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

2019ம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும்  இயக்குவதற்குமான இந்தியா ஜப்பான் இலங்கையுடனான முக்கூட்டு ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டுமென்பதில் ஜனாதிபதி கோட்டபாய மிகவும் அக்கறையுடன் உள்ளதாக உயர் மட்டத்திலிருந்து அறியமுடிவதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தனது இருநாள் விஜயத்தை மேற்கொண்டு நாடுதிரும்ப முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி நேர சந்திப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.




புதுடில்லி திரும்புவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் விவகாரங்கள் குறித்தும் வடக்கு கிழக்கு நிலைமைகளையிட்டும் இருதரப்பினரும் கலந்துரையாடியதாக இந்து பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment