பிரதமரின் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளதாக முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
அலரிமாளிகை கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இருந்த போதும் அலரிமாளிகையோ பிரதமரின் அலுவலகமோ முடக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் ரொஹான் வலிவிட்ட அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
அமைச்சுகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகள் தற்போது கடமைக்காக அழைக்க்பபடுவதாகவும் பஸில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியும் அலரி மாளிகையில் இருந்து இயங்கிவருவதாகவும் ரொஹான் வெலிவிட்ட அறிக்கை மேலும் தெரிவித்திருந்தார்.
எனினும் இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இந்த அறிக்கை தொடர்பாக பஸில் ராஜபக்ஸ கருத்துவெளியிட்டுள்ளார். வலிவிட்டவின் ஊடக அறிக்கை சரியானதான என சண்டே டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பஸில் ராஜபக்ஸ " அது முற்று முழுதான பொய். அலரிமாளிகை முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள எனது அலுவலகங்களை என்னால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை நீங்கள் கண்டறியவேண்டுமானால் நீங்கள் யாரையேனும் அனுப்பிவைக்க முடியும் அந்த இடம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. பணிக்கு சமூகமளிக்காதிருக்குமாறு பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்."
" ஊடகசெயலாளர் ( வெலிவிட்ட) தாம் என்ன செய்கின்றார் என்பது அவருக்கே தெரியாது. பொய்களைக்கூறுவதன் மூலம் அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அதிகமான சங்கடத்தையும் கெட்டபெயரையும் ஏற்படுத்துகின்றனர். என்னைப்பற்றி அவர்கள் கூறியதும் பொய்யானதாகும். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த விடயங்களை பிரதமர் மறைக்க முனைபவரல்ல .அவர் வெளிப்படையாக எவ்வேளையும் இருக்க நினைப்பவர். நாம் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதுடன் மக்களிடம் இருந்து உண்மையை மறைக்க முனையக்கூடாது. உண்மையைச் செல்வதில் தவறென்ன உள்ளது? முடக்கம் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் அலரிமாளிகையிலுள்ள தம்முடைய அலுவலகத்திற்கு செல்லவில்லை"என பஸில் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இல்லாவிட்டாலும் அவரது தரப்பினருடன் புரிந்துணர்வீன்மையையும் ஒருவித விரிசலையும் கொண்டிருப்பதை புலப்படுத்திநிற்கின்றது.
No comments:
Post a Comment