ஜனாஸாக்களை புதைக்க அனுமதிமறுப்பது வரலாற்று அச்சங்களின் நீட்சியா?
மடமை என்ற இருளை நீக்கி அறிவு எனும் ஒளியை ஏற்றுகின்ற திருநாளாம் தீபாவளியை இன்று உலகெங்கும் வாழும் இந்துக்கள் கொண்டாடுகின்ற வேளையில் பிற்போக்குத்தனங்களாலும் மடமையிலும் இன்னமும் மூழ்கிக்கிடக்கின்றவர்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படவேண்டி சில கருத்துக்களைக்களைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
இலங்கையர்களாகிய நாம் எம் அயலவர்களைப் பற்றிய அச்சத்திலும் சமூகங்களைப் பற்றிய அச்சத்திலும் இனக்குழுமங்களைப்பற்றிய அச்சத்திலும் அண்டை நாடுகளைப்பற்றிய அச்சத்திலும் கட்டுண்டு கிடக்கின்றோம்.
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்கு இலங்கையில் அனுமதிவழங்கப்படாமை தொடர்பாக முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி புதைப்பதற்கான அனுமதி கோரி கடந்த மூன்றாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது அரசாங்கத்தரப்பில் பதிலுரையாற்றிய நீதி அமைச்சர் அலி ஷப்றி 'Fear of unknown' என்ன நடக்குமோ என்று தெரியாத அச்சம் காரணமாகவே புகைப்பதற்கான அனுமதியை வழங்க இதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழு மறுக்கின்றது என்ற கூறியிருந்தார்.
அண்மையில் ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழக பேராசிரியர் மெத்திகா விதானகே வழங்கியிருந்த நேர்காணல்களின்போது கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் சடலங்களை நிலத்தில் புதைத்தால் அடுத்த தொற்றுநோய் பூமியைப் பிளந்துகொண்டுவரும் என எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
இருப்பினும் அவர் பின்னர் வழங்கியிருந்த நேர்காணலொன்றில் தாம் சடலங்களைப் புதைப்பதால் வைரஸ் பரவுவது பற்றி இதுவரை ஆய்வு எதனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
முறைப்படியான ஆய்வுகளோ ஆதாரங்களோ இன்றி ஊகத்தின் அடிப்படையிலும் அச்சங்களின் அடிப்படையிலும் கருத்துக்களை கற்றறிருந்த பேராசரியரொருவரே வெளிப்படுத்தும் போது ஏனையவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.
சுதந்திரம் நிறைந்த அனைவருக்கும் சந்தர்ப்பத்தை வாரிவளங்கும் நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் கூட அரசியலில் மக்களின் அச்சங்களே டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களின் முதலீடுகளாக இருக்கும் போது இலங்கை போன்ற நாடுகளில் அது இருப்பது ஆச்சரியமல்ல.
'தீவு மனப்பான்மை' (சுருங்கியபார்வை) யினால் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற ஏனையோரின் பிழையான கருத்துக்களை விழுங்கிக் கொள்கின்ற எம் நாட்டு மக்களுக்கு இவ்வாறான கருத்துக்களை கொண்டுசெல்வது அவ்வளவு பெரிய விடயம் அல்ல.
வரலாற்றுரீதியாக பார்க்கும் போது இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் தொடர்பான அச்சம் தொடர்ச்சியாக இருந்துவருவதனைக் காணமுடியும் . தமிழர்கள் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்துவந்து தம் நிலங்களை ஆக்கிரமித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் பின்னணியில் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களும் உள்ளன.
அண்மையில் வாசித்த நமது மலையகம் இணைத்தள ஆசிரியர் சரவணன் எழுதிய ஆக்கமொன்றில் மகாவம்சத்தில் இருந்து அவர் கோடிட்டுக்காட்டியிருந்த விடயம் அச்சங்களால் எவ்வாறு சிங்களவர்கள் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கு உதாரணமாகக் கொள்ளமுடியும் .
"மகாவம்சத்தில் ஏராளமான கட்டுக்கதைகளும், புனைவுகளும் இருந்தபோதும் அது மட்டுமே எழுத்தில் உள்ள தவிர்க்கமுடியாத வரலாற்று ஆவணமாக சிங்களவர்கள் அல்லாதவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை நிலவவே செய்கிறது. அது சொல்லும் காலம், அது பதிவு செய்துள்ள ஆட்சியாளர்கள், நிகழ்வுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே மேலதிகமான விரிவுபடுத்தல்களும், வியாக்கியானங்களும், தேடல்களும், உறுதிபடுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரும்பியோ விரும்பாமலோ இலங்கை பற்றி ஆய்வு செய்கிற சகல வரலாற்றாசியர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தவிர்க்க முடியாத மூல ஆவணமாக மகாவம்சம் இருக்கிறது. அவரவர் அவரவர்களுக்கு ஏற்றாற் போல அர்த்தப்படுத்தல்களை மேற்கொள்ள அதன் நம்பகத்தன்மையற்ற தகவல்கள் வழிகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.
'பெமினிதியா'
அந்த வகையில் இலங்கையில் ஏற்பட்ட கொடிய பட்டினிச்சாவு பற்றி மகாவம்சம் தரும் தகவல் மன்னன் வலகம்பா காலத்துக்குரியது. கி.மு 103-89 காலப்பகுதியில் இது உருவானதாக கூறப்படுகிறது. இதனை சிங்களத்தில் 'பெமினிதியா' (බැමිණිතියා) என்று அழைக்கிறார்கள். அதாவது பெரும்பஞ்சம் எனலாம். கிட்டத்ததட்ட 12 ஆண்டுகள் நீடித்த பஞ்சம் இது. மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்து மலைநாட்டுப் பகுதிகளுக்குச் சென்று இலைகுழைகளைச் சாப்பிட்டு பசி போக்கினார்கள். பஞ்சம் நீங்கியதும் மீண்டும் பாழடைந்த தமது ஊர்களுக்குதித் திரும்பி தமது வாழ்க்கயைப் புதிதாகத் தொடங்கினர்.
மகாவிகாரையைச் சேர்ந்த இருபத்தி நான்காயிரம் பிக்குமார் பட்டினியாலேயே காடுகளில் சமாதியடைந்தார்களாம். பட்டினியால் பலர் மனித மாமிசத்தை உண்டார்களாம்.
இந்தக் காலப்பகுதி இலங்கையின் இருண்ட காலங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக குறுகிய காலத்துக்குள் ஏற்பட்ட பல தென்னிந்திய ஆக்கிரமிப்புப் போர்களால் விவசாயமும்இ உற்பத்தியும் பாரிய அளவில் பாதிப்படைந்தது. கடுமையான வறட்சியின் விளைவாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட போது; தென்னிந்திய படையெடுப்பாளர்கள் தாங்கள் ஆக்கிரமித்து ஆண்ட பகுதிகளில் தொட்டிகளையும் நீர்த்தேக்கங்களையும் பழுதுபார்த்து பராமரிக்க தவறியிருந்தனர் என்கிறது இலங்கையின் புராதன வரலாற்று நூல்களில் ஒன்றான 'சீஹலவத்துப்பகரணய' (සීහළවත්ථුප්පකරණය) என்கிற இதிகாசம். தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த ஐந்து தமிழ் மன்னர்களை வலகம்பா மன்னன் முறியடித்து விரட்டியதான் பின்னர் தான் இந்தப் பஞ்சம் கலைந்ததாம்."என தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார் சரவணன்.
அந்தக் கட்டுரையில் ஒரு திரைப்படம் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
'ஆலோகோ உதபாதி' திரைப்படம்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் 'ஆலோகோ உதபாதி' என்கிற ஒரு சிங்களத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட் படம் அதுதான். இந்தத் திரைப்படம் பல விருதுகளை பெற்றுக்கொண்டது. இதன் முதல் திரையிடலின் போது அதைப் பார்த்துவிட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த 'சகல சிங்களவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது' என்றார்.
2100ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு 89இல் மன்னர் வலகம்பா அரசாட்சி செய்த சமயத்தில் தென்னிந்தியாவிலிருந்து 'தமிழ் – சைவ' சோழர்கள் படையெடுத்து வந்து நாட்டின் சொத்துக்களையும், ஆட்சியையும் கைப்பற்ற போர் நடத்தியதுடன்இ பௌத்தத்தை அழித்து தமது சமயத்தை நிறுவுவதற்கும் முயற்சித்தார்கள் என்றும்இ அப்போது ஏராளமான பிக்குகளை தமிழர்கள் கொன்றார்கள் என்றும், பிக்குமார் பலர் காடுகளிலும், குகைகளிலும் மறைந்து வாழ்ந்ததாகவும், 14 ஆண்டு காலம் சோழர்களை எதிர்த்து போராடிய அரசர் வலகம்பா பிக்குமாரை பாதுகாப்பாக இந்த அலுவிகாரைப் பகுதியில் தலைமறைவாக இருத்தச் செய்து திபிடகவை எழுதச் செய்தார் என்பது தான் கதை. இந்தத் திரைப்படத்தில் மக்கள் பஞ்சத்தால் பட்ட வேதனைகளும், வலகம்பா அரசனின் போர் வீரம் போர் ஞானம் பற்றி மட்டுமல்லாது வென்றதன் பின்னர் செய்த அபிவிருத்திகளும் சொல்லப்பட்டிருக்கிறது.
சிங்கள வரலாற்று நூல்களை அதிகமாக வாசித்தவரான சரவணன் ' வரலாற்று நூல்கள் எல்லாமே இந்தப் பஞ்சத்தைக் குறிப்பிட்டு இந்தப் பட்டினிச் சாவுக்கு தமிழர்களே காரணம் என்று நிறுவுகிற போக்கைக் காண முடியும். தமிழர்களுக்கு எதிரான கட்டுக்கதை வரிசையில் இந்தச் சம்பவமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுகிறது.' என்று முடிவுரை எழுதுகின்றார்.
இவற்றை கோர்த்துப்பார்க்கின்றபோது வரலாற்று ரீதியாக மக்கள் மனங்களில் விதைக்கப்பட்ட அச்சங்களை மூலதனமாக்கியே இன்று இலங்கையின் அதிகார வர்க்கம் ஆட்சி செய்கின்றதாகக் கூட கருத முடியும். விடுதலைப்புலிகளை 2009ம் ஆண்டில் வேரோடு சாய்த்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்த ராஜபக்ஸ தரப்பினர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அரசியல் கைதிகள் விடுதலை காணி விடுவிப்பு போன்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்றுவிடுவார்கள் உயிர்பெற்றுவருகின்றன்ர் என்ற அடிப்படையற்ற அச்சங்களை முன்வைத்து நியாயமான கோரிக்கைகளை நசுக்க முற்படுவதைக் கண்ணுற்றுள்ளோம்.
முஸ்லிம்களிற்கு மட்டுமன்றி இலங்கை வாழ் கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமான பூதவுடல்களைப் புதைக்கும் விடயத்தில் அரசாங்கத்தரப்பில் குறிப்பிடும் அச்சங்கள் விஞ்ஞானத்தை முன்னிறுத்தியதல்ல என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் மட்டுமன்றி இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ஹானா சிங்கர் கூட சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் உணர்த்தியிருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச செய்திச் சேவையொன்றில் பணியாற்றிய நண்பன் ஒருவிடயத்தைக் குறிப்பிட்டிருந்தார் . இலங்கை சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் உயரதிகாரியொருவரை நேர்காணல் செய்த போது இன்னமும் சில தசாப்தங்களில் இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர்களை முந்திக்கொண்டு முஸ்லிம்கள் வந்துவிடுவர் என்ற அடிப்படையற்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை நிலத்தில் புதைத்தால் அடுத்த தொற்றுநோய் நிலத்தில் இருந்து பீறிட்டு மேலெழும் என்ற அச்சமும் அவ்வாறான அடிப்படையற்ற அச்சமே .
அண்மையில் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் பொகவந்தலாவே ராகுல தேரர் சுட்டிக்காட்டிய விடயத்தை நினைவுபடுத்துவது முக்கியம் என்று கருதுகின்றேன். ' கொரோனாவால் உயிரிழந்தவர்களை நிலத்தில் புதைப்பதால் அதிலிருந்து வைரஸ் நிலத்தடி நீர்கட்டமைப்புடன் சேர்ந்து தொற்றுநோயைப் பரப்பும் என்று கூறுகின்றார்கள். அப்படியானால் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களது மனிதக் கழிவுகள் சிறுநீராகியனவற்றால் தொற்றுநோய் பரவாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று தெரியாத அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு தீர்மானங்களை எடுக்காமல் எந்தச்சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனத்திடத்துடன் மதங்கள் சொல்லும் உயரிய பண்புகளை மதித்து மனித கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் தீர்மானங்களை எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment