இலங்கையில் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்தவாரம் அறிவித்திருந்தார். இதற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சமூக ஊடகங்களால் இனங்களுக்கிடையில் குழப்பத்தைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் இதன் போது தெரிவித்திருந்தார். இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதனை ஆராய்ந்து இங்கு புதிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந் தார்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்ட சிங்கப்பூர் சட்டம் என்ன ? அது தொடர்பாக இதுவரை வந்துள்ள விமர்சனங்கள் என்ன என்று தற்போது பார்ப்போம்.
சிங்கப்பூரில் பொய்த் தகவல் பரப்பப்படுவதற்கு எதிரான Protection from Online Falsehoods and Manipulation Act (POFMA ) பொஃப்மா சட்டம் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது
ஓராண்டுக்கு மேலாக பொதுமக்களிடமிருந்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த சட்டமூலம் கடந்த 2019 மே மாதம் சட்டமானது.
புதிய சட்டத்தின்கீழ், இணையத்தில் வலம் வரும் பொய்ச் செய்திக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சர்கள் முடிவெடுக்கலாம்.
அந்தப் பொய்ச் செய்திகளை உடனடியாக இணையத்திலிருந்து அகற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ அவர்கள் உத்தரவிடலாம்.
இந்த உத்தரவுகளுக்குப் பணியாத தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.
வேண்டுமென்றே பொய்ச் செய்திகளைப் பரப்புவோருக்குப் புதிய சட்டத்தின்கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரின் பத்திரிகைகளும் ஊடகங்களும் அந்நாட்டு அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்குபவை. பத்திரிகைகளுக்கான சுதந்திரமான சூழல் அந்நாட்டில் கிடையாது.
உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின்படி ((WPFI), ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படும் நாடுகளின் பட்டியலில் 180இல் 151ஆவது இடத்தில் இருக்கிறது சிங்கப்பூர். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் நடந்த கடும் விவாதத்திற்குப் பிறகு இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ' இந்தச் சட்டம், பொய்ச் செய்திகளையும், ட்ரோல்களையும், பொய்யான சமூக வலைத்தளக் கணக்குகளையும், கம்ப்யூட்டர் புரோகிராமிங் (BOT) செய்யப்பட்ட இணையதளப் பக்கங்களின் செயல்பாடுகளையும் தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும் அவர், இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிப்பதுடன், சிறைத் தண்டனையும் வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்களும், எதிர்கட்சிகளும், விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும், இந்தச் சட்டத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டம் அரசு அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குவதாகவும், தங்களுக்கு எதிரான எந்த செய்தியையும், கருத்தையும், இவர்கள் பொய்யான செய்தி எனக் கூறி பல உண்மைகளை வெளிவர விடாமல் செய்துவிடலாம் எனவும் அஞ்சுகிறார்கள். மேலும் இந்தச் சட்டம் எல்லாத் தளங்களிலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெ ரிக்கும் ஒரு முயற்சி என்று மிகக் கடுமையா ஆட்சேபித்துள்ளனர்.
இந்தச் சட்டத்தை எதிர்க்கும் கல்வியலாளர்கள்,அந்நாட்டின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சி இது என்றே கூறுகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் போன்ற டெக் ஜாம்பவன்களின் மூலமாகவும், செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் இணையதளப் பக்கங்களின் உதவியோடும், மக்களிடம் ஊடக அறிவை வளர்ப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர்.
இந்த பொஃப்மா சட்டம் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு உதாரணத்தை கடந்த ஜுன் மாதத்தில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா சுட்டிக்காட்டியிருந்தார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 சூழல் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பால் தம்பையா, பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பொஃப்மா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகச் சங்கம், சேனல் நியூஸ் ஏஷியா(சிஎன்ஏ) , த ஒன்லைன் சிட்டிசன் ஏஷியா, நியூ நராடிஃப் ஆகியவற்றுக்கு மொத்தம் ஐந்து திருத்த உத்தரவுகளை பொஃப்மா அலுவலகம் பிறப்பித்தது. இதனை ஏற்று சிஎன்ஏவும் என்யுஎஸ்எஸ்ஸும் திருத்தங்களை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய 55 வயது பால் தம்பையா திருத்த உத்தரவு கவனத்தை திசை திருப்பக்கூடியது என்றார்.
'மனிதவள அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையை பற்றி நான் பேசியிருந்தேன்' என்று முதலாளிகளுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை அவர் குறிப்பிட்டார்.
'மனிதவள அமைச்சே அதனை அனுப்பியிருந்தது. மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் கூட்டாக அக்கடிதத்தை அனுப்பவில்லை. அந்த ஆலோசனைக் குறிப்பில் மனிதவள அமைச்சின் அதிகாரி கையெழுத்திட்டிருந்தார்' என்று கூறி பால் தம்பையா, இதனால் பொஃப்மா சட்டம் ஏற்றுக் கொள்ளும் வகையில் பயன்படுத்தப்படவில்லை என்று தமக்குத் தோன்றுவதாகத் தெரிவித்தார். முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சு அனுப்பிய மின் அஞ்சல் குறிப்பில் வெளிநாட்டு ஊழியர்களிடையே மேற்கொள்ளப்படும் கொவிட்-19 சோதனைகள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையில்லாமலே மேற்கொள்ளப்படுகிறது என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா கூறியதாக பொஃப்மா அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.
வெளிநாட்டு ஊழியர்களை மொத்தமாக மருத்துவமனைகளுக்கு கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பினால் முதலாளிகள் தங்களுக்குள்ள 'வொர்க் பாஸ்' சலுகைகளை இழக்க வேண்டியிருக்கும் என்று ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக அவர் கூறியதாகவும் அது சொல்லியது. இவை இரண்டுமே தவறு என்று 'பொஃப்மா' தெரிவித்திருந்தது.
இணையவெளியில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் பொஃப்மா சட்டம் மக்களின் கருத்துரிமையில் அநாவசியமாக தலையிடுகின்றது என இதுபோன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் கண்டனங்களும் வெளியாகிவருகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் பொஃப்மா சட்டத்தை உதாரணமாக கொண்டு இலங்கையில் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை வரையவுள்ளதாக கூறியிருப்பது ஆழ்ந்த கரிசனைகளை ஏற்படுத்துகின்றது.
இன்று பிரசுரமான ஞாயிறு வீரசேகரிப்பத்திரிகைக்காக அருண் ஆரோக்கியநாதன் எழுதிய கட்டுரை
No comments:
Post a Comment