Sunday, November 29, 2020

நல்லிணக்கத்தை புறக்கணித்துவிட்டு எதை நோக்கி நகர்கின்றது இலங்கை அரசாங்கம்?

                             உயிர்நீத்த மகனை நினைவுகூரும் அன்னை


'நல்லிணக்கம் என்பது இலங்கையர்கள் விரும்பும் விடயங்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது' இப்படிச் சொன்னவர் வேறுயாருமல்ல இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே .

சிலநாட்களுக்கு முன்னர் இந்தியாவின் BWTVக்கு வழங்கிய மெய்நிகர் நேர்காணலின் போது ' சராசரி இலங்கையர்கள் வேண்டும் ஐந்து விடயங்களாக தொழில் ,வீடு, தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ,சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே தேவையாக உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். 

இது தான் தமிழர்களோ, முஸ்லிம்களோ ,சிங்களவர்களோ வேண்டுகின்ற விடயங்கள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 




நீங்கள் இதில் நல்லிணக்கம் என்பது எங்கே அடங்குகின்றது என்று வினவினால் நல்லிணக்கம் என்பது மிக மிக மிகவும் கீழானதாகவே உள்ளது  என்று குறிப்பிட்ட ஜயநாத் கொலம்பகே, நல்லிணக்கம் என்ற பதம் தேர்தல்களின் போது வாக்குகளை வென்றெடுக்க அரசியல்வாதிகள் பயன்படுத்துமொன்றாகும் என அர்த்தம் கற்பித்திருந்தார். 

நாம் அதிகாரத்தைப் பகிரப்போகின்றோமா என்றும் நீங்கள் வினவியிருந்தீர்கள் . இந்தியாவிலுள்ள மிகச்சிறிய மாநிலத்தைவிடவும் சிறியது.ஒருவேளை கேரளாவின் அளவைக் கொண்டிருக்கக்கூடும். பரப்பின் அடிப்படையில் நாம் மிகவும் சிறிய நாடாகும். அதிகாரங்களைப் பகிர்வது இங்கு மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக உள்ளது. 

1987ம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. 13வது திருத்தத்திலுள்ள பெரும்பாலான சரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் உள்ளார். மாகாண சபை உள்ளது. மாகாண அரசு உள்ளது. மாகாணங்களுக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு விடயங்கள் மாத்திரமே செய்யப்படாமல் உள்ளன. பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரமும் மாத்திரமே இன்னமும் வழங்கப்படாது உள்ளன. அவை மாகாணங்களுக்கு ஒருபோதுமே வழங்கப்படமாட்டாது. 13வது திருத்தம் இரண்டு முக்கியமான நோக்கங்களை நிறைவேற்றியதா என கேட்க விரும்புகின்றேன். 13வது திருத்தத்தினூடாக சமாதானத்தை நாட்டில் அடையமுடிந்ததா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதாகும்.

அபிவிருத்தியை அடையமுடிந்ததா என்றால் அதற்கும் பதில் இல்லை என்பதாகவே அமையும் எனவும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்திருந்தார். 

அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பிலுள்ள இவரது கருத்து நல்லிணக்கம் என்றவிடயத்திற்கு அரசாங்கம் எவ்வளவு குறைவான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது என்பதை புலப்படுத்தி நிற்கின்றது. 


கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும்  நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதாக ராஜபக்ஸ தரப்பினர்  வாக்குறுதிகளை அள்ளிவழங்கியிருந்தனர். ஆனால் ஏற்கனவே கடன்பொறிக்குள் சிக்கி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த அரசாங்கம் தற்போது கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தால் திக்கித் திணறி நிற்கின்றது.  

பொருளாதார சுபீட்சம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமில்லை . பொருளாதாரம் நலிவுடைந்துவரும் நிலையில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்கனவே வெளிப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கும் நிலையில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் மற்றும் பாரபட்ச செயற்பாடுகளைக் காண்பித்தே தமது செல்வாக்கை தற்போதைய அரசாங்கம் நிலைநிறுத்த முற்படுகின்றதா என்ற கேள்விகள் ஏற்படுகின்றன. 




இம்முறை நினைவேந்தல்கள் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்ட கடும் போக்கு நகர்வுகள் நல்லிணக்கத்தை நாட்டில் கட்டியெழுப்ப நிச்சயமாக உதவப்போவதில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கம் நினைவேந்தல்களை நடத்த அனுமதித்த போது மக்கள் தமது உணர்வுகளை அமைதியாக வெளிப்படுத்தினார்களே தவிர குழப்பங்களை ஏற்படுத்தவில்லை.


நேற்று பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவிற்கும் எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்ற பலத்த விவாதம் நல்லிணக்க விடயத்தில் அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை  இருக்கும் சூழலை கடினப்படுத்தப் போவதனை  உணர்த்திநிற்கின்றது.  

விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பண்டிதருக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நினைவஞ்சலி செலுத்த முடியும் என வீரசேகர சபையில் கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த சுமந்திரன், "'அமைச்சருக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் என் பெயர் பொது வெளியில் குறிப்பிடப்பட்டதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் நான் வயதான அம்மாவான சின்னத்துரை மகேஸ்வரி என்பருக்காக யாழ் மேல் நீதிமன்றில் நான் ஆஜரானேன். அவரது மகன் 1985 இல் பண்டிதர் என அழைக்கப்படும் அவரது மகனை வருடா வருடம் நவம்பர் மாதத்தில் நினைவு கூர்வது வழக்கம். தனது நினைவு கூரல் உரிமையைப் பாதுகாக்கவென அவர் அந்த வழக்கைப் பதிவு செய்திருந்தார்.

(வீரசேகர இடைமறிக்க) ஆம் அவர் விடுதலைப் புலிகள் தலைவர் தான். ஆனால் பண்டிதர் அந்த அம்மாவினது புதல்வன் கூட. அத்துனை தாய்மாருக்கும் தம் பிள்ளைகளை நினைவேந்தும் உரிமை இருக்கிறது.

அமைச்சர் ஒரு போதும் ஜே.வி.பி-யின் தலைவர் ரோகன விஜயவீரவை ஜே.வி.பி-யின் தலைவர்கள் முழுச் சீருடையில் கொழும்பெங்கும் கொண்டு திரிந்து நினைவேந்துவதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதில்லை. இதனால் தான் நான் இந்தச் சபையில் நினைவேந்தும் விடையத்தில் கூட தமிழருக்கெதிராகப் இனவாதம் பாய்ச்சப்படுவதைப் பற்றிப் பேசியிருந்தேன்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, மிகத் தெளிவாக அம்மா தன் மகனை வீட்டில் நினைவு கூருவதற்கு முழுமையான உரிமை இருப்பதாகச் சொல்லியிருந்தார். அம்மா தன் உரித்தை வீட்டில் செயற்படுத்தினார். வீடில்லை அதைக் கொட்டில் என்றே கூற வேண்டும். அம்மா தன் மகனைத் தன் கொட்டிலில் நினைவு கூர்ந்த போது நானும் அவரோடு இணைந்திருந்தேன். அவரருகில் நின்றேன். மகன் எந்தவொரு சீருடையைக் கூட அணிந்திருக்கவில்லை. இது தாயொருவர் தன் மகனை நினைவேந்திய செயற்பாடு. கூட்டாக எவரும் நினைவேந்தலில் முடியாத போதும் எல்லோரும் தனிப்பட்ட நினைவேந்தலில் ஈடுபடலாம் என்பதை என் மனுதாரருக்கு விளக்குமாறு நீதிமன்றம் என்னைப் பணித்திருந்தது.

சரத் வீரசேகரவின் இது வித இனவதாகக் கருத்துக்களால் முழு நாடும் தவறாக வழி நடத்தப்படுகிறது. அதை இச் சபை அனுமதிக்கிறது' என்றார்

இதன் போது ஜேவிபிக்கு நினைவேந்தலை நடத்த அனுமதிக்கும் அரசாங்கம் தமிழருக்கு அதனை மறுக்கின்றது. இறந்தவர்களை நினைவுகூருவதில் கூட தமிழர்கள் மீது பாரபட்சம் காண்பிக்கப்படுகின்றது என்ற கருத்தை சுமந்திரன் ஆணித்தரமாக பதிவுசெய்திருந்தார். 

 விடுதலைப்புலிகள் இயக்கத்தை வேரோடு அழித்துவிட்டோம் என தம்பட்டம் அடிக்கும் ராஜபக்ஸ தரப்பினர் விமானங்களோடும் நவீன படகுகளோடும் ஆட்லறிகளோடும் இருந்த விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் உயிர்நீத்தவர்களின் நினைவுகூரலைத்தடுப்பதன் ஊடாக அடைய நினைப்பதென்ன என்ற கேள்வி பலருக்கும் எழலாம். 

இந்தியா போன்ற பெரும் வல்லரசின் ஆதரவு இருந்தாலேயன்றி இந்த நாட்டில் மீண்டும் பலம் வாய்ந்த ஆயுதப்படையை எந்தவொரு சிறுபான்மை இனமும் கட்டியெழுப்பமுடியாது என்பதை விளங்கிக்கொள்ளும் அறிவு ராஜபக்ஸ தரப்பினருக்கு இல்லாமல் இருக்கப்போவதில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் கடும் அதிருப்தியைச் சமாளிப்பதற்கு  புலிப்பூச்சாண்டியை மீண்டும் கையிலெடுத்துள்ளது. 



தமது உறவுகளை நெருங்கியவர்களை நினைவுகூரத்தடைசெய்து உலகில் உள்ள நியதிக்கு முரணாக நடக்கும் செயற்பாடு எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளதோ அதேபோன்று ஜனாஸாக்களைப் புதைக்கும் விடயத்தில் உலகில் ஏறத்தாழ 200 நாடுகள் பின்பற்றும் நடைமுறைக்கு முரணாக அரசாங்கம் காண்பிக்கும் பிடிவாதம் முஸ்லிம்களின் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திவிட்டுள்ளது. 

பெரும்பான்மையினத்தவரிடையே பொருளாதாரம் தொடர்பாக அதிகரிக்கும் அதிருப்திநிலையை திசைதிருப்ப நினைவேந்தல் தடை ஜனாஸா எரிப்பு போன்ற விடயங்கள் இன்னமும் எவ்வளவு நாள் கைகொடுக்கும் என்பது கேள்விகுறியாகும். 





இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகள் குறிப்பாக நல்லிணக்கத்தை கையாளும் விடயத்தில் காண்பிக்கும் அசமந்தப்போக்கு சர்வதேசத்தரப்பையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பது இலங்கையிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளுடனான கலந்துரையாடல்களின் போது உணரமுடிந்தது. இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா  முன்னின்று செயற்பட்டுவரும் விடயம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த 24ம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது .இதில் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இருந்து விலகியுள்ள நிலையில் புதிய தீர்மானத்தைக்கொண்டுவர பிரித்தானியா செயற்படுகின்றதா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதை விபரித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல  இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மார்ச் அமர்வில் புதிய பிரேரணையைக் கொண்டுவர பிரித்தானியா செயற்பட்டுவருவதாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

தமிழர்கள் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் அன்றி தமது சொந்த புவிசார் நலன்களுக்காக இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையை ஜெனிவாவில் மேற்குலக நாடு கொண்டுவரப்போதற்கான சமிக்ஞைகள் பிரகாசமாக தெரிகின்றன.  தமிழர்களையோ முஸ்லிம்களையோ மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக பயன்படுத்துவதைத் தடுத்து இந்த நாட்டில் நிலையான அமைதியையும் பொருளாதார சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப  நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்பதை இந்த அரசாங்கம் உணரவேண்டும். இனங்களுக்கிடையே நல்லிணக்கம் இல்லையேல் நாட்டில் நிலையான சமாதானமோ பொருளாதார சுபீட்சமோ ஒருபோதும் சாத்தியமாகமாட்டாது என்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளதும் உதாரணங்கள் உணர்த்திநிற்கின்றன. எனவே இனியேனும் அரசாங்கம் யதார்த்தத்தை உணர்ந்து நல்லிணக்கத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து செயற்படவேண்டும். 


அருண் ஆரோக்கியநாதன் 

No comments:

Post a Comment