Monday, November 23, 2020

இறுதிப் போரில் பொது மக்களை காப்பாற்ற கப்பல் வழங்க முன்வந்த இராஜதந்திரியிடம் பொய்யுரைத்தாரா மஹிந்த?

 



இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் ஆகிவிட்டபோதும் இறுதியுத்தத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பான தகவல் அவ்வப்போது ஏதோ வகையில்  வெளியாகிவருகின்றன.

வரவுசெலவுத்திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் வருகின்ற நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக இன்றையதினம் நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க இன்றைய தினம் சபையில் முன்னர் வெளிவராத விடயமொன்றை வெளிப்படுத்தியிருந்தார். 

இலங்கையில் போரில் வெற்றியை நிலைநாட்டிய மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் போருக்குப் பின்னரான ஐந்தாண்டு காலப்பகுதியில் நாட்டின் தேசியப் பாதுகாப்பை சரியான முறையில் கட்டியமைத்து வந்த போதும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேசியப்பாதுகாப்பு விடயத்தில் உரிய கவனம் செலுத்தத்தவறிவிட்டதாக குறிப்பிட்டார். இதன் போது போரின் போது எவ்வாறு தாம் திறமையாகவும் சிறந்த உத்திகளைக் கையாண்டமைக்கான உதாரணமாக ஒரு கருத்தையும் முன்வைத்திருந்தார்.



"இறுதிப் போரின் போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த பலம்வாய்ந்த நாடொன்றின் தூதுவர்  போரில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு கப்பலை வழங்குவதற்கு  விரும்பம் தெரிவித்திருந்தார். இதன்போது மஹிந்த ராஜபக்ஸ இன்னுமொரு பலம்வாய்ந்த நாடு கப்பலை அனுப்புவதாக கூறியுள்ளதாக அந்தத் தூதுவரிடம்  கூறியதுடன் அதுதொடர்பாக ஆராய்வதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ என்னைப்பார்த்து   நான் அப்படிக் கூறியது ஏனெனில் நாம் கப்பலைக் கொண்டுவர இடமளித்தால் அந்தக்கப்பலில் பொதுமக்கள் மட்டுமன்றி விடுதலைப்புலிகளின் தலைவர்களும் ஏறுவர். அப்படி விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஏறினால் பெருங்கடலில் என்ன நடக்கும் என எமக்குத் தெரியாது அதனால் தான் இப்படி ஒன்றைக் கூறி அந்த வேண்டுகோளை அப்போது தட்டிக்கழித்தேன் என்று கூறினார்.



இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னணி செய்தியாளர்களில் ஒருவரான ஈஸ்வரன்  ரட்ணம் "அப்படியெனில் இறுதிப் போரில் பொதுமக்களை வெளியேற்றுவதற்காக கப்பலொன்றை வழங்க முன்வந்த ராஜதந்திரியிடம் மஹிந்த ராஜபக்ஸ பொய்கூறினாரா "என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment