அமெரிக்க உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து உலகின் பலபகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. கறுப்பினத்தவர்கள் தங்களில் ஒருவராக அவரைப் பார்த்து பெருமிதம் கொள்ளும் அதேவேளை பெண்கள் தம்மில் ஒருவராக பார்க்கின்றனர். அவரது தந்தை ஜமேய்க்காவைச் சேர்ந்தவர் என்பதால் ஜமேய்க்கர்கள் தம்மில் ஒருவரெனக் கொண்டாடுகின்றனர். அதேபோல் அவரது தாயார் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என ஒரு தரப்பினர் பாராட்டுகின்றனர். அவரது தாயார் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழர்கள் பெருமை கொள்கின்றனர். ஆனால் தற்போது கமலா ஹாரிஸுக்கு தமிழில் பேசத் தெரியுமா ? கேள்விக்கு அவரது தாய் மாமன் அண்மையில் பிபிசிக்கு வழங்கியுள்ள பதில் தெளிவான விடையைத் தருகின்றது.
கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரது தாய்வழி மாமாவும் இந்திய தலைநகர் டெல்லியில் வசிப்பவருமான கோ. பாலச்சந்திரனை பிபிசி நேர்காணல் செய்திருந்தது. பிபிசியின் கேள்விகளும் அதற்கு பாலச்சந்திரன் வழங்கிய பதில்களும் பின்வருமாறு :
ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிச் செய்தியை அறிந்ததும் உங்களுக்கு ஏற்பட்ட முதல் உணர்வு?
கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் எனத் தெரியும். காரணம், இறுதி முடிவு ஒவ்வொன்றாக எண்ணப்பட்டு வரும் வேளையில், முடிவு தொடர்பான பதற்றம் இருந்து கொண்டே இருந்தது. அந்த பதற்றம் இப்போது குறைந்து விட்டது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கமலா ஹாரிஸின் பதவியேற்பு நிகழ்வுக்கு நாங்கள் குடும்பத்தோடு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
கமலா ஹாரிஸுக்கு தமிழ் பேச தெரியுமா?
எனக்கே தமிழ் அவ்வளவாக பேசத் தெரியாது. நான் வட மாநிலத்துக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டன. சின்ன வயதில் வீட்டில் தமிழ் பேசுவோம். கமலாவின் தாய்க்கு தமிழ் தெரியும். தனது பிள்ளைகளுடன் சில வார்த்தைகளை அவர் தமிழில் பேசுவார். அதைத்தாண்டி கமலாவுக்கு தமிழ் எல்லாம் பேசவோ எழுதவோ தெரியாது.
கமலா ஹாரிஸ் கடைசியாக தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தார்?
கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் 18 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தேன். கடைசியாக கமலா ஹாரிஸ் அவரது தங்கை அவரது தாயின் அஸ்தியை இந்தியாவில் கரைப்பதற்காக வந்தார். அப்போது எனது தாயும் உயிரோடுதான் இருந்தார். அதற்கு முன்பும் வாய்ப்பு கிடைக்கும் போது கமலா இந்தியாவுக்கு வருவார். அது சுற்றுலாவுக்கான பயணமாக இருக்காது. சொந்தங்களை பார்த்து நேரத்தை செலவிடக்கூடியதாக இருக்கும்.
பிறருடன் ஒப்பிடும்போது குறுகிய காலத்தில் சட்டமா அதிபராக செனட்டராக இப்போது உப ஜனாதிபதியாகும் அளவுக்கு கமலா ஹாரிஸ் எப்படி உயர்ந்தார்?
அர்ப்பணிப்பு, நம்பிக்கை, புத்திசாலித்தனம், மக்களுடன் அணுகும் பண்பு ஆகியவைதான் அவரது வெற்றிக்கு உதவியது. அரசியலில் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற உழைக்க வேண்டும். அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார்.
அமெரிக்க உப ஜனாதிபதி பதவி வகிக்க கமலா ஹாரிஸுக்கு உதவக்கூடிய அவரது திறன்கள் என்ன?
அமெரிக்காவிலேயே மிகப்பெரிய மாநிலம் கலிஃபோர்னியா. அங்கு மாவட்ட தலைமை வழக்குத்தொடுநராக கமலா இருந்தார். பிறகு மாநில சட்டமா அதிபராக இருந்தார். அதன் பிறகு செனட்டர் ஆக நான்கு ஆண்டுகள் இருந்தார்.
இப்போது உப ஜனாதிபதி வேட்பாளராகி அந்த பதவிக்கும் தேர்வாகக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கிறார். அடிப்படையில் பைடனுக்கு வெளியுறவு அனுபவம் நிறைய உள்ளது. உள் விவகாரங்களில் அவ்வளவாக அவருக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் கமலாவுக்கு உள் விவகாரங்களில் அதிக அனுபவம் உள்ளதால் பைடனுக்கு அவர் பல வகைகளில் உதவியாக இருப்பார். இதுவரை இருந்த உப ஜனாதிபதிகளிலேயே அதிக பொறுப்பை சுமக்கக் கூடியவராக கமலா இருப்பார். காரணம், அவருக்கு என சில கோட்பாடு, மதிப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment