அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் பற்றி இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் ட்ரம்பின் இரண்டாவது நிர்வாகத்திற்கான சுமூகமான மாற்றம் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளரும் குடியரசுக்கட்சியின் வேட்பாளரும் கடுமையாக தேர்தல்களத்தில் மோதிக்கொண்டாலும் தோல்வியை ஒப்புக்கொண்டு வெற்றிபெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்து வெற்றிபெற்ற அணியினர் அடுத்த நிர்வாகத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் அரசியல் நாகரீகம் இருந்துவந்தது.
அது இம்முறை இல்லாமல்போகும் என்பதற்கான சமிக்ஞைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்தும் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளது என்று தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுவருகின்றார். குடியரசுக்கட்சியில் இருந்து இதுவரை செனட்டர் மிட் ரோம்னி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யு. புஷ் ஆகியொரே ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு தேர்தலில் வெற்றிபெற்றமைக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
வேறு முக்கியஸ்தர்கள் இன்னமும் தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வாக்கு மோசடிகளுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் போன்று பாரிய பேரணிகளை நடத்த ட்ரம்ப் தரப்பு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவின் வாக்கு முடிவுகள் கிடைத்ததையடுத்து கடந்த 7ம் திகதி ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முக்கிய ஊடகங்கள் அறிவித்திருந்தன.
ஆனால் இதனை டொனால்ட் ட்ரம்போ அவரது நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ இன்னமும் ஏற்கவில்லை. ட்ரம்ப் நிர்வாகத்தில் மூன்றாவது உயர் பதவியில் இருக்கும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றைய தினம் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆட்சிமாற்றம் என்பது இன்னமும் பல சவால்களை எதிர்கொள்ளப்போகின்றதென்பதை உணர்த்திநிற்கின்றது.
தோல்வியை ஏற்க டிரம்ப் மறுக்கும் பட்சத்தில்?
தோல்வியை ஏற்க டிரம்ப் மறுக்கும் பட்சத்தில் என்ன நேரிடும் என்பதை வட அமெரிக்காவின் பிபிசி நிருபர் ஏந்தனி ஜர்ச்சர் விளக்குகிறார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். அவர் தனது முயற்சிகளில் வெற்றிபெறவில்லை என்றால், தோல்வியை ஏற்க அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் அவர் தோல்வியை ஏற்பது என்பது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது?
அமெரிக்க அரசியலில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரைத் தொலைபேசியில் வாழ்த்தி, தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு கட்டாயமில்லை.
2018 ஆம் ஆண்டில், ஜோர்ஜியா மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஸ்டேசி ஆப்ராம்ஸ் வாக்காளர் மோசடி மற்றும் மிரட்டல் குற்றம் சாட்டினார். குடியரசுக் கட்சி வேட்பாளர் பிரையன் கேம்ப் தோல்வியை ஏற்கவில்லை.
இருப்பினும் இத்தனை ஆண்டுகளில் ஜனாதிபதி பதவி வேட்பாளர்களுக்கிடையில் இது போல், ஒரு போதும் நடக்கவில்லை. தற்போது, ஜோர்ஜியாவில் தேர்தல் முடிவுகள் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். ஆனால் அதுவரை அரசாங்கப் பணிகள் தொடரவே செய்யும். அதில் டிரம்ப் எந்தத் தடையும் ஏற்படுத்த முடியாது.
ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்கவோ அல்லது பைடெனின் பதவியேற்பு விழாவில் புன்னகையுடன் பங்கேற்கவோ எந்தக் கட்டாயமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்குச் சில சட்டப் பொறுப்புகள் உள்ளன.
பைடெனின் குழு பொறுப்பை ஏற்கத் தொடங்க, அவர் தனது நிர்வாகத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். டிரம்ப் ஏற்கனவே இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார் என்று அவரது அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment