பல தடைகளுக்கு மத்தியில் கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பாக இலங்கையின் இளம் கல்விமான்களில் ஒருவரான பேராசிரியர் அஸங்க அபேகுணசேகர தனது பேஸ்புக்கில் பாராட்டுப் பதிவொன்றை இட்டிருந்தார்.
இதற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் சிறி ஹெட்டிகே அவரது பதிவின் கீழ் இலங்கையில் இதுபோன்ற ஒன்றைக் கற்பனை செய்துபார்க்க முடியுமா ?
என்று அவரிடம் வினவியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள பேராசிரியர் அஸங்க அபேகுணசேகர "இல்லை. என்னால் கற்பனை செய்துபார்க்க முடியாது. அவர்கள் அனைவரும் மௌனிக்கப்பட்டனர் அன்றேல் துரோகிகள் என்று அழைக்கப்பட்டனர். பல தடைகளுக்கு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எமது மக்கள் அவர்களோடு பயணித்தனர். ஆனாலும் பெரும்பான்மையின அதிதீவிர தேசியவாத மனநிலையில் இருந்து முறித்துக்கொண்டுவருவதற்கு அது போதாது. " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இன்னுமொருவர் வழங்கியுள்ள பதிலில்' இலங்கையில் இது ஒருபோதும் நடைபெறமாட்டாது. இதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் விவகாரம் சிறந்த உதாரணமாகும். எவ்வாறு குறுகிய பார்வைகொண்ட சிங்கள அரசியல்வாதிகள் லக்ஸ்மன் கதிர்காமர் பிரதமராக வருவதைத் தடுத்தார்கள் என்பது தெரிந்த விடயம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் 49வது உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹரிஸ், அந்தப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் என்ற பெருமையையும் தந்தை ஜமேய்க்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதால் முதலாவது கறுப்பினப் பெண் உப ஜனாதிபதி என்ற பெருமையையும் தாயார் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்பதால் முதலாவது ஆசிய இனத்தைச் சேர்ந்த பெண் உப ஜனாதிபதி என்ற பெருமையையும் கூட்டாகப் பெறுகின்றார். இதனைவிடவும் முதலாவது தமிழ் வம்சாவளிப் பெண் உப ஜனாதிபதி என்ற பெருமையும் அவரைச் சார்ந்துள்ளது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவில் ' தெற்காசியாவைச் சேர்ந்தவன் என்ற வகையில் எம்முடைய ஒரு பெண் உலகின் மிகவும் சக்திமிக்க பெண்ணாக மாறியிருப்பதையிட்டு பெருமிதம் கொள்கின்றேன். எப்போது இலங்கை அதன் தலைவர்களை இனம் சாதி மதம் என்ற அடிப்படைகளில் அன்றி அவரது திறமைகளதும் தகைமைகளதும் அடிப்படையில் தெரிவு செய்யும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து உரையாற்றிய கமலா ஹரிஸ்" தாம் இந்தப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது பெண்ணாக இருக்கின்றபோதும் நிச்சயமாக கடைசிப்பெண்ணாக இருக்கப்போவதில்லை. " என்று தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment