இலங்கைக்கு கடனன்றி முதலீடுகளே எமக்கு தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கான புதிய சீனத்தூதுவரிடம் தெரிவித்தார். சீனத்தூதுவர் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான புதிய சீனத்தூதுவர் க்குயி சென்ஹோன் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தனது நியமனக்கடிதத்தை கையளித்தார். பின்னர் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இலங்கையின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனாவின் உதவி கிடைத்து வருவதை ஜனாதிபதி நினைவுபடுத்தினார். கடந்த 2 தசாப்தங்களாக சீனா எட்டியுள்ளதைப் போன்ற கிராமிய அபிவிருத்தியை இலங்கையிலும் ஏற்படுத்தி எமது நாட்டு கிராமப் புற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே தமது இலக்கு என ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
இதற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி சீனத்தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதி சீ ஜிங் பின் யின் வாழ்த்துக்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கப்பட்டது. இலங்கை சுபிட்சமிகு தேசமாக மிளிர்வதையே சீனா எதிர்பார்ப்பதாகவும் சீனத்தூதுவர் அங்கு தெரிவித்தார். அமைச்சர் தினேஸ் குணவரட்ன உள்ளிட்ட பலர் அங்கு கலந்துகொண்டனர்.
கடன்கள் அல்ல முதலீடுகளே தேவையென ஜனாதிபதி வார்த்தைகளில் கூறினாலும் யதார்த்தம் வேறுபட்டதாக உள்ளதென பாராளுமன்றத்தில் ஜேவிபி இன்று சுட்டிக்காட்டியுள்ளது.
2021ம் ஆண்டு நிறைவில் இலங்கை 5000 பில்லியன் ரூபா வரையில் மேலதீக கடன்சுமைக்குள்ளாகும் நிலைக்கு இந்த அரசாங்கம் வழிவகுத்துள்ளது என ஜேவிபி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏற்கனவே ராஜபக்ஸ அரசாங்கம் 2,000 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெற்றுள்ளதாகவும் அடுத்தாண்டு இறுதிக்குள் மேலும் 3,000பில்லியன் ரூபாவை கடனாகப் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக ஜேவிவி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் எடுத்துவரும் கடன்கள் காரணமாக 2021ம் ஆண்டு இறுதியில் இலங்கையின் மொத்த கடன் தொகையானது 18000 பில்லியன் ரூபா அன்றேல் 18 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
No comments:
Post a Comment