Wednesday, November 25, 2020

சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறினால் அதற்கான விளைவுகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும்- சுமந்திரன் எம்.பி.



 இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்  இன்று  பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார். 

யுத்தத்தின் பின்னர் நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கும், இந்தியாவிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் மீற  முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 கடந்த  11 ஆண்டுகளாக நாட்டு மக்களையும் சர்வதேச சமூசத்தையும் அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டுள்ளதாவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் நினைவுறுத்தினார்.

 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது என்பது குறித்து ஜனாதிபதிக்கோ எவருக்குமோ தெரியாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுவது உண்மையென்றால், எவ்வாறு 34/1, 41 ஆகிய பிரேரணைகளுக்கு அரசாங்கம்  இணை அனுசரணை வழங்கியது? என கேள்வி எழுப்பினார்.

வெகுஜன ஊடகத்துறை , வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே  அவர் இந்த விடயங்களை ஆணித்தரமாக வெளிப்படுத்தினார். 




சுமந்திரன் எம்.பி. இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது. 

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் முன்னைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது. இப்போது புதிய அரசாங்கம் பிரேரணையில் இருந்து நீங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடுகள் என்பது ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் இடையில் மாறுபட வேண்டிய விடயம் அல்ல. இது நிலையான அரசியல் கொள்கையாக இருக்க வேண்டும். சர்வதேச மட்டத்தில் இவை மோசமான விதத்திலேயே விளைவுகளை ஏற்படுத்தும். இந்த அரசாங்கம் பிரேரணையில் இருந்து விலகுவதாக கூறினாலும் அதற்கான அறிக்கையை வாசித்தாலும், அவ்வாறு பிரேரணையில் இருந்து விலக முடியாது என்பது எம் அனைவருக்குமே தெரியும்.

அதேபோல் 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது என்பது குறித்து ஜனாதிபதிக்கோ எவருக்குமோ தெரியாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுவது உண்மையென்றால், எவ்வாறு 34/1, 41 ஆகிய பிரேரணைகளுக்கு அரசாங்கம்  இணை அனுசரணை வழங்கியது? 2014 ஒக்டோபரில் முதல் பிரேரணை முன்வைக்கப்பட்டது, 41 என்ற பிரேரணை 2019 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் கொண்டுவரப்பட்டது. இடையில் மூன்று சந்தர்பங்களில் ஒரே மாதிரியான பிரேரணை முன்வைக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதிக்கு இந்த பிரேரணை குறித்தோ, இதன் உள்ளடக்கம் குறித்தோ எதுவுமே தெரியாது என எவ்வாறு கூற முடியும். இலங்கை என்ற நாடாக, அல்லது இராச்சியமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தெரியாது என ஜனாதிபதியால் எவ்வாறு கூற முடியும். எனவே இப்போது பிரேரணையில் இருந்து நீங்குவீர்கள் என்றால் அது பெரியளவில் பிரச்சினையை உருவாக்கும்.

1987 ஆம் ஆண்டு இந்தியாவுடன் சர்வதேச உடன்படிக்கை ஒன்றினை செய்துகொண்டோம். இந்து- ஸ்ரீலங்கா ஒப்பந்தம் என கூறப்படும். இது குறித்து ஒவ்வொருவர் ஒவ்வொரு கதையை கூறிவார்கள். ஆனால் நீங்கள் வெளிவிவகார அமைச்சர் இந்த உடன்படிக்கையில் இருந்து நீங்குவதாக கூறுவீர்களா? வலுக்கட்டாயமாக இது திணிக்கப்பட்டது என்றால் நீங்கள் நீங்கலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. இந்த உடன்படிக்கை தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளது. சகல மக்களையும் கலாசாரங்களை உள்ளடக்கிய விடயங்கள் உள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீக பூமி. இதுவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படை விடயங்கள். இந்த உடன்படிக்கையில் இருந்து நீங்கள் விளங்கிக்கொள்ள முடியாது. அதேபோன்று தான் ஜெனிவா விடயத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது. அதுமட்டும் அல்ல மஹிந்த சமரசிங்கவும் அங்கு பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அரசியல் தீர்வு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். அவரும் இன்று அரசாங்கத்துடன் உள்ளார்.

தமிழ் கட்சிகள், ஏனைய தரப்புகளை இணைந்துக்கொண்டு தீர்வுகளை வழங்குவதாகவும், நல்லிணக்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி அப்போது கூறினார். 13 ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதனையும் தாண்டிய அதிகார பகிர்வு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். இந்த வாக்குறுதிகள் கொடுத்து 11 ஆண்டுகள் ஆகின்றது. சர்வதேச சமூகத்திற்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எவ்வாறு உங்களால் மீற முடியும். முடிந்தால் இப்போது கடிதம் ஒன்றை எழுதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறிய விடயங்களை நாம் நிராகரிக்கிறோம், அவற்றில் இருந்து நீங்குகிறோம் என கூறிப்பாருங்கள். நீங்கள் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதற்கான விளைவுகளை  அரசாங்கம் சந்தித்தாக வேண்டும். வாக்குறுதிகளை ஒருபோதும் மீற முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 11 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டுளீர்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டது, அதில் இராணுவ தீர்வு இறுதியான தீர்வு அல்ல, அரசியல் தீர்வே முக்கியமானது என பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. 13 ஆம் திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார். எனவே சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்துள்ளார். அரசியல் தீர்வு, சமவுரிமை, சமத்துவம் என சகலதுமே கிடைக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார். அப்போதைய வெளிவிவகார அமைச்சர் புதுடில்லியில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும், 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் தீர்வுகளை வழங்குவோம் என 2012 ஆம் ஆண்டில் கொடுத்த வாக்குறுதியை நான் நினைவுபடுத்துகின்றேன். எனவே பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பது அரசாங்கம் கையாள வேண்டிய விடயமாகும்` என பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் பதிவுசெய்தார்.

No comments:

Post a Comment