Saturday, August 22, 2020

13வது திருத்தம் :இந்தியாவின் சமிக்ஞையை விளங்கிக்கொள்ளுமா ராஜபக்ஸ அரசாங்கம்?



வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் அரசியல்யாப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை தமிழ்த்  தேசியக்கூட்டமைப்புடனான நேற்றைய சந்திப்பின் போது இலங்கைக்கான இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே மீள வலியுறுத்தியிருப்பது, அரசியல்யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ள . எதிர்பார்த்துள்ள இலங்கைக்கு சரியான நேரத்தில் தரப்பட்டுள்ள செய்தியாக அமைந்துள்ளது.

ஒகஸ்ட் 5ம் திகதி பொதுத்தேர்தலில் தமது நேச சக்திகளோடு இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள ராஜபக்ஸ தரப்பினர்  புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வின் போதே 19வது திருத்தத்தை இல்லாமல் ஒழிப்பதை தமது முதலாவது இலக்காக பகிரங்கமாக அறிவித்திருந்தபோதும் ஒட்டுமொத்த அரசியல்யாப்பையும் மாற்றியமைக்கும் நோக்கமும் வெளிப்பட்டது.

அரசியலில் சில விடயங்களை நேரடியாக கூறாவிட்டாலும்  செயற்பாடுகளுக்கிடையே இழையோடும் அர்த்தத்தைக் கொண்டு அதற்கு வியாக்கியானம் கொடுக்கும் நடைமுறை உண்டு. 

19வது திருத்தத்தை இல்லாதொழித்து 20வது திருத்தத்தைக் கொண்டுவரும் விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேரிலே அறிவித்ததைப் போன்று 13வது திருத்தம் தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளே அவ்வாறான கருத்தக்களை வெளியிட்டிருந்தனர்.

இருந்தபோதிலும் அதிகாரப்பகிர்விற்கு முற்றுமே எதிரானவரும் சிங்கள கடும்போளருமான சரத் வீரசேகரவை  மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராக நியமித்தமை தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் எவ்வித தயவுதாட்சண்யமும் காட்டப்படமாட்டாது என்ற செய்தியை மறைமுகமாக எடுத்துகூறுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.


இந்தியா தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிவிக்காவிடின் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தை விடவும் கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருக்கின்ற இந்தக்காலப்பகுதியில் அவரோடு கடும்போக்கான சிங்கள பௌத்த தரப்புக்கள் அணி திரண்டிருப்பதன் காரணமாக 13வது திருத்தத்திலும் கைவைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து சுட்டிக்காட்டியிருந்தார்.



பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நேற்றையதினம் முதன்முறையாக நடைபெற்ற சந்திப்பின் போதே  இலங்கையில் சமாதானம் நல்லிணக்கம் தொடர்பாக இந்தியா நீண்டகாலமாக கொண்டிருக்கும்  நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றதெனவும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தற்போதும் கொண்டிருக்கின்றது என்பதை மீள வலியுறுத்தியுள்ளமையும் முக்கியமானதாக அமைந்துள்ளது.


கோட்டபாய ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு இந்தியத் தரப்பின் செய்தி நேரிலே எடுத்துச் சொல்வதை இந்தியா உறுதிப்படுத்துவதன் மூலமே அவர்கள் 13வது திருத்தத்தில் கைவைப்பதனை நிறுத்த முடியும் என கூறப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் இராஜந்திரியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி . தயான் ஜயதிலக்க கருத்துவெளியிடுகையில்  இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தும்  பொறுப்பு இந்தியாவைச் சார்ந்தது. அதற்கு பல ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் உள்ளதாக தெரிவித்தார்.

 " தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  திரிவுபடுத்துவதாக அரசாங்கம் கூறக்கூடும் ஆகவே டில்லி அதன் நிலைப்பாட்டை தெளிவாகத் தெரியப்படுத்தவேண்டும். அடுத்ததாக இந்தியாவின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் இலங்கையின் புதிய அரசாங்கம் அது இந்தியாவின் அபிப்பிராயம் மாத்திரமே என எண்ணக்கூடும் . அத்தோடு இன்னமுமொரு விடயமும் இதில் உள்ளது. இந்தியா அதன்  நிலைப்பாட்டை தெளிவாக தெரியப்படுத்தாவிடின் இந்தியாவின் நிலைப்பாட்டை அதன் அபிப்பிராயம் மாத்திரமே என இலங்கையின் புதிய அரசாங்கம் நினைக்கக்கூடும். 13வது திருத்தத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவது கொழும்பு  அரசாங்கத்தின் இறையாண்மைக்குட்பட்ட விடயம் என எண்ணக்கூடும். இப்படி நினைப்பதற்காக அரசாங்கத்தையும் குறைகூறமுடியாது. 'என கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டார். 


1987ம் ஆண்டில் இலங்கை இந்திய நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் மாத்திரம் தனது இஷ்டத்திற்கேற்ப மாற்றியமைத்துவிடமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தியா தெரியப்படுத்துவது மிக அவசியம் என்பதை கலாநிதி தயான் ஜயதிலக்கவின் கருத்துக்கள் எடுத்துணர்த்துகின்றன. அப்படியின்றேல் தமது பௌத்த சிங்கள ஆதரவுத்தளத்தை திருப்திப்படுத்துவதற்காக அதில் கைவைக்க சாத்தியங்கள் உள்ளன. 






இந்தக்கட்டுரையை மீளப்பிரசுரிப்பதாயின்  இது முதலில் www.globetamil.com ல் பதிவேற்றப்பட்டது எனக் குறிப்பிடுவது ஊடக நாகரிகத்திற்கு ஏற்புடையது.


No comments:

Post a Comment