Wednesday, August 12, 2020

ஹரிணி அமரசூரியவின் தேசியப்பட்டியல் நியமனம் தமிழ் மக்களின்மனச்சாட்சியை தட்டியெழுப்புமா?



தேசிய மக்கள் சக்தி  தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளமை தற்போது பலராலும் போற்றி வரவேற்கப்படுவதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகின்றது.  தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் ஒரு கல்வியாளரை மனித உரிமைக் காப்பாளரை  தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் அனுப்புவதற்கு எடுத்த ஜேவிபியின் தீர்மானம் முன்னுதாரணமானது என்ற வகையில் பதிவுகளை இட்டுள்ளார்கள். 

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனுக்கு  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாய்ப்பு வழங்கியபோது அவர் தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் அரச முகவர் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும்  அசிங்கமான விமர்சனங்களையும் முன்வைத்தவர்களில் சிலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் நியமனத்தை வரவேற்றிருப்பது அவர்களின் கபடத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. 

பொறாமை மற்றும் சுயநலங்களுக்காக ஒருவர் பற்றி பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டு அசிங்கத்தனத்தை அரங்கேற்றும் தரப்பினரின் தீய நோக்கை அறிந்துகொள்ளும் அறிவின்றி சிந்தனையை தொலைத்துநிற்கும் எம்மவர்களும் அம்பிகா போன்ற அறிவும் ஆற்றலுமுள்ளவர்களின் பெறுமதியை உணராது கூட்டத்தோடு கோவிந்தா போடும் தரப்பினராக மாறிவருவது கவலைக்கிடமானது. 

இலங்கையின் சிறைச்சாலைகள் பற்றி முதலாவது முழுமையான ஆய்விற்கு தலைமைதாங்கி நடத்தியவர் என்ற பெருமைக்குரியவரான அம்பிகா சற்குணநாதன் பற்றி தமது சுயநலன்களுக்காக தீய கருத்துக்களை பரப்பியவர்களின் கதைகளைக் கேட்டு காவடியெடுத்த கூட்டத்தில் யாரேனும் அவர் ஆற்றிய உரைகளில் ஒன்றையேனும் அவர் தயாரித்த அறிக்கைகளில் ஒன்றையேனும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!

https://www.himalmag.com/prisoners-in-a-pandemic-2020/


இனிவரும் காலத்திலேனும் ஒருவரைப்பற்றி குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் சுமத்தும் போது நன்கு ஆராய்ந்து சுய புத்தியால் சிந்தித்து தீர்மானமெடுக்கும் பக்குவத்தை தமிழ் மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டார். அவரை தேசியப்பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவதாக உள்வாங்கியிருந்தது. 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு இந்த தேர்தலில் கிட்டிய பின்னடைவு குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனமும் கிட்டாத நிலையில் தேசியப்பட்டியல் ஆசனம் தவராசா கலையரனுக்கு வழங்கப்பட்டது. ஒரு வேளை பட்டியலில் முதலிடத்தில் இருந்த அம்பிகாவிற்கு வழங்கியிருந்தால் எவ்வளவிற்கு இழிவாக விமர்சனங்களை முன்வைத்து  அசிங்கப்படுத்தியிருப்பார்கள் என்பதை ஊகிக்க நீண்டநாட்கள் பின்னோக்கிப்பயணிக்க வேண்டியதில்லை.

 இனியேனும் பொய்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட  செய்திகளை நம்பி உணர்வுகளை கொட்டித்தீர்க்காமல் உண்மைத் தேடி தூரதரிசனப்பார்வையுடன் முடிவுகளை எடுக்க முற்படுவோம்.

No comments:

Post a Comment