Sunday, August 23, 2020

டிக் டொக் மீதான தடையால் பயனாளர்கள் இழப்பது என்ன?



 தற்போதைய நிலையில் அமெரிக்காவிலுள்ள டிக்டொக் TikTok சமூக வலைத்தள பயனாளர்கள் கலகத்தில் உள்ளனர்.  செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தமது விருப்பத்திற்குரிய செயலி  தமது திறன்பேசிகளில் இருந்து இல்லாமல் போய்விடுமோ என்ற கலக்கமே அதுவாகும்.


மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கோ வேறு உள்ளூர் அமெரிக்க நிறுவனத்திற்கோ டிக்டொக் செயலியை விற்பதற்கு தவறுமிடத்து 45 நாட்களுக்குள் அது தடைசெய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாத முற்பகுதியில் அறிவித்திருந்தார்.


இந்தியாவின் டிக்டொக்  பயனாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமது விருப்பத்திற்குரிய செயலி இல்லாமல் வாடிக்கொண்டிருக்கின்றனர். 

கடந்த ஜுன் மாதம் 29ம் திகதி முதல் டிக்டொக் செயலியை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தடைவிதிக்க எடுத்த தீர்மானத்தை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டது. 

இந்தியாவில் டிக் டொக் மீது தடை விதிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முதன் முறை விதிக்கப்பட்ட தடை நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆறுநாட்களுக்குள் நீக்கப்பட்டது. ஆனால் இம்முறை அது ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்துக்கொண்டிருக்கின்றது பயனாளர்களுக்கு கவலைதரும் விடயமாகும்.

பல குறைபாடுகள் இருந்தாலும் டிக்டொக்கின் ஆதிக்கம் இந்தியர்கள் மத்தியில் வலுப்பெற்றதற்கு மத்திய வர்க்கத்தினர் மற்றும் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் அதனைப் பயன்படுத்தி படைப்பாற்றலைக் காண்பிக்க முடிந்ததுடன் மகிழ்ச்சியடைய முடிந்தமையும் காரணமாகும்.


இந்தியா போன்ற பல தரப்பு வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் டிக்டொக் என்பது சாதிகள் மதங்கள் மொழிகள் என்பன வேற்றுமைகளைக் கடந்து ஒருவரொருவரின் உதட்டசைவு காணொளிகளையும் குறுகிய நேர திறன் வெளிப்பாட்டு நகைச்சுவை சிதறல்களையும் கண்டுகளிக்கும் தளமாக செயற்பட்டது. 

இந்திய அரசாங்கம் அதனைத் தடைவிதித்தபோது அப்பிள் மற்றும் கூகுள் அப்ஸ்டோஸில் இருந்து டிக்டொக் நீக்கப்பட்டது. இதனால் டிக்டொக் வீடியோக்களை பயனாளர்கள் பதிவேற்றம் செய்ய முடியாது போனது மட்டுமன்றி பார்க்க முடியாது போனது. இதனால் அவர்களுக்கான பொழுது போக்குக்கான முக்கியமானதொரு அம்சம் கைவிட்டுப்போயுள்ளது. 

தொலைக்காட்சிகள் மற்றும் சினிமாக்களின் ஏறத்தாழ ஒரே வகையான பொழுதுபோக்கு ஏகபோகத்திமலிருந்து தமக்கு வேண்டிய பலவிதமான  ரசனைகளைக் கண்டுமகிழும் சந்தர்ப்பம் மட்டுமன்றி அதன் மூலம் சம்பாதிக்கும் சந்தர்ப்பம் பலருக்கு இல்லாமல் போயுள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக டிக் டொக் தடைசெய்யப்பட்டமைக்கு அதிலுள்ள சட்டபூர்வமற்றதும்  தீங்கு மிக்கதுமான உள்ளடக்கங்களை அதிகாரிகள் காரணமாகக் காண்பித்திருந்தனர். இதன் போது அவ்வாறான மில்லியன் கணக்கான காணொளிகளை தமது செயலியில் இருந்து நீக்கியும்  அடையாளப்படுத்தியும் டிக்டொக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.


ஆனால் கடந்த ஜுன் மாதத்தில் இந்திய-சீன எல்லைப்பகுதியில் இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் எதிரொலியாக இந்திய அரசாங்கம் எடுக்க நடவடிக்கைகளில் ஒன்றாக சீனாவை தளமாகக்கொண்ட  டிக் டொக்குடன் சேர்த்து 59  செயலிகளும் தடைசெய்யப்பட்டிருந்தன . அதனைத் தொடர்ந்து மேலும் 60 செயலிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது

இவ்வாறாக நூற்றுக்கு மேற்பட்ட செயலிகள் தடைசெய்யப்பட்டாலும் டிக்டொக்கின் தடை உணரப்படுவதற்கு காரணம் அது மக்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்திருப்பதனாலாகும்.தடைக்கு முன்னர் இந்தியாவைப் பொறுத்தவரை டிக் டொக்கின் பிரசன்னம் மிகப்பிரமாண்டமானதாகும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகாரணமாக ஒப்பீட்டளவில் அதனையொத்த சமூக வலைத்தளம் இன்றி மில்லியன்கணக்கானோரை வெறுமைக்குள் தள்ளிவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் டிக்டொக் செயலி 610 மில்லியன் தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் 600மில்லியன் பேர் அதனை அடிக்கடி பயன்படுத்துவோராக இருந்துள்ளனர்.உலகில் டிக்டொக்கை அடிக்கடி பயன்படுத்துவோர் எண்ணிக்கையில்  44 சதவீதமானவர்கள் இந்தியர்களாக இருந்தமை இந்தியாவில் அதன் தாக்கத்தின் பரிணாமத்தை எடுத்துணர்த்துகின்றது.

இந்தியர்கள் டிக் டொக் காணொளிகளை விரும்பி இரசித்து பொழுது போக்குவது மாத்திரமன்றி அண்மைக்காலமாக சமூக ஆர்ப்பாட்டங்களுக்கான அணிதிரட்டல் மற்றும் சமூக விழிப்புணர்வுக் கல்வி போன்ற வற்றிற்கான தளமாகவும் திகழ்ந்துள்ளது. 

கொரோனா காரணமாக வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருந்த காலப்பகுதயில் குறிப்பாக  இளைஞர்கள் தமது பொழுதைக் கழிப்பதற்கு மாத்திரமன்றி தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் வழிகோலிய விடயங்களில் டிக்டொக்கிற்கு முக்கிய பங்குள்ளது. 
டிக் டொக் தளத்தில் இலங்கையில் அதிகமான அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளவர்களில் ஒருவரான கலைஞர் காயத்ரி சான். அவருக்கு தற்போது 25 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இலங்கையில் டிக் டொக் தடைசெய்யப்படுவதற்கு அதுவும் இனிமேல் தடைசெய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் மிகமிகக் குறைவானதாகும். ஏனெனில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வலுவாக உள்ள நிலையிலும் சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் ராஜபக்ஸவினர் ஆட்சியில் உள்ளநிலையிலும் டிக்டொக் இங்கு இனிமேல் செழித்தோங்கவே வாய்ப்புக்கள் அதிகம்.

மறு முனையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போது கருத்துக்கணிப்புக்களில் பின்தங்கியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடனான மோதல் போக்கைக் காண்பித்து நாட்டுப்பற்றுமிக்க அமெரிக்க மக்களின் ஆதரவை பெறுவதற்கு வியூகம் வகுத்துச் செயற்படுவதனால் தற்போதைக்கு டிக்டொக் உட்பட சீனாவைத் தளமாக கொண்ட வர்த்தகங்களுக்கு நெருக்கடிகள் இருக்கவே வாய்ப்புண்டு. எதிர்வரும் நவம்பர்  மாத தேர்தலுக்கு பின்னர் இந்த  நிலையில் தெளிவுகிடைக்கும். 

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காது அதிகரித்துச் செல்வதால் அரசாங்கத்தின் மீது மக்களின் கடுமையான கோபமும் விமர்சனங்களும் பதிவாகிவருகின்றது. இந்தநிலையில் மடைமாற்றும் தந்திரமாக சீனாவிற்கு எதிரான  பிரசாரங்களை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது. அதில் ஒன்றாகக்கூட டிக்டொக் உட்பட சீன செயலிகளுக்கு எதிரான தடையையும் கருதமுடியும். ஆக கொரோனா கோரத்தாண்டவம்  ஆடும் வரையில் இந்தியாவில் டிக்டொக் மீண்டும் கோலோச்ச வாய்ப்பில்லை.  உலகின் க்தொகையில் இரண்டாவதாக அதிக மக்களைக் கொண்ட இந்தியாவில் அதிகமானவர்கள் இளைஞர்களாக இருக்கின்றனர். 

இப்படியான இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டிக்டொக் தடைசெய்யப்பட்டிருப்பது அவர்கள் மத்தியில்  அரசாங்கம் தொடர்பாக பாதகமான சிந்தனையை வளர்க்கவே வழிகோலும் என்று இந்தியாவில் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  பெரும் எதிரிகள் மோதிக்கொள்ளும் போது அங்கே பலிக்கடாவாவது அதோடு தொடர்பற்ற தரப்பினர் என்ற கருத்துள்ளது. அதுபோன்றே  ஆளுந்தரப்பினரின் அதிகார வேட்கைக்காக டிக்டொக் போன்ற பயன்மிகு செயலி பலிக்காடாவாக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. 

வீரசேகரி வாரமஞ்சரிக்காக அருண் ஆரோக்கியநாதர் எழுதிய கட்டுரை

இந்தக்கட்டுரையை மீளப்பிரசுரிப்பதாயின்  இது முதலில் www.globetamil.com ல் பதிவேற்றப்பட்டது எனக் குறிப்பிடுவது ஊடக நாகரிகத்திற்கு ஏற்புடையது.

==========================================================

ஃபேஸ்புக் ,டிக் டொக் ,டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் போலிச் செய்திகள் பற்றிய விழிப்புணர்வு காணொளிகளைக் காண https://www.youtube.com/c/GlobeTamil ஐ தயது செய்து  Subscribe பண்ணி ஊக்குவிக்கவும்
========


No comments:

Post a Comment