Friday, August 14, 2020

அமைச்சரவை நியமனங்கள் குறித்த வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சு இல்லை

 

இலங்கையில் புதிய அமைச்சரவை நியமனம் கடந்த12ம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்றது. இதன் போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொறுப்பேற்றிருந்தார்.  

இருந்தபோதிலும் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக ஒகஸ்ட் 13திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள 2188/42 இலக்க வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடப்படவில்லை

2015ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தத்திற்கு அமைவாக ஜனாதிபதியாக இருக்கின்றவர் அமைச்சுக்களைப் பொறுப்பேற்கக் கூடாது என்ற நிலையில் புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 




19வது திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்தே அமைச்சர் தெரிவுசெய்யப்படவேண்டும் .தற்போதைய ஜனாதிபதி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடையாது.அவர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அவர் அமைச்சரவையின் தலைவராக இருக்கின்றார்.அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமைதாங்குதல் நியமனங்களை வழங்குதல் ஆகியவற்றைச் செய்யமுடியும். பிரதமரின் இணக்கத்தின் அடிப்படையில் அமைச்சர்களை மாற்றுதல் நீக்குதல் போன்றவற்றை செய்யமுடியும் என்றிருப்பினும் பிரதமரின் இணக்கம் இல்லாத நிலையிலும் அதனை ஜனாதிபதியால் செய்யமுடியும்.

ஆனாலும் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்ற காரணத்தால் அவர் அமைச்சர் பொறுப்பை ஏற்க முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துவெளியிட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணிமான எம்.ஏ. சுமந்திரன் ,"ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தற்போதைய அரசியலமைப்பை மீறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பின் 43 (2) சரத்தின் பிரகாரம் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை நியமிக்கமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அப்படியாயின் எவ்வாறு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோதும் மேலும் இரண்டு அமைச்சுக்களுடன் பாதுகாப்பு அமைச்சையும் தம் வசம் வைத்திருந்தார் என வினவியதற்கு பதிலளித்துள்ள சுமந்திரன்,அந்த அமைச்சுக்களை மைத்திரிபால சிறிசேன வைத்திருந்தமை இடைமாற்றுக்கால ஏற்பாட்டிற்குரியது. அது அவருடைய ஜனாதிபதி காலத்திற்கு மாத்திரம் அதுவும் அந்தப்பாராளுமன்றக் காலத்திற்கு மாத்திரம் ஏற்புடையது.அது  தொடர்ந்துவரும் ஜனாதிபதிக்காலத்திற்கோ பாராளுமன்றத்திற்கோ பொருத்தமற்றது. இதனை யார் வேண்டுமானாலும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

எனினும் தற்போதைய நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி  சட்ட வல்லுநர்கள் சிலரும் பாதுகாப்பு அமைச்சை தற்போதுள்ள 19வது திருத்தத்திற்கு கீழ் பொறுப்பேற்பதில் எவ்வித சிக்கலும் இல்லை எனக் கூறியிருக்கின்றனர். இருந்தபோதிலும் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது திருத்த சட்ட வரைவில் தற்போதுள்ள 19வது திருத்தத்திலுள்ள இந்த சரத்து உட்பட பல விடயங்கள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments:

Post a Comment