Sunday, August 16, 2020

COVID-19 க்கு முகம் கொடுக்க அவுஸ்திரேலிய - இலங்கை பாதுகாப்பு ஒன்றிணைப்பு

 


அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் தொகுதிகளை (PPE), இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மற்றும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கெப்டன் ஷோன் அன்வின் ஆகியோர், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்னவிடம் ஆகஸ்ட் 14 ஆம் திகதியன்று கையளித்துள்ளனர்.

இந்த வைபவத்தில் கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஹொலி, 'COVID-19' நோயை எதிர்த்துச் செயற்படும் நோக்கில், இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு பாதுகாப்பு உபகரணங்களையும், கருவிகளையும் பெற்றுக் கொடுப்பதில் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது' என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'இந்த உதவிகள் மூலம் இலங்கை கடற்படையினருடனான எமது இணைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படுவதோடு, எமது பிராந்தியத்தில் கடல் மார்க்க பாதுகாப்பு விடயங்களில் நாம் காட்டும் ஈடுபாட்டை இது மேலும் விஸ்தரித்துக் காண்பிக்கும்' என்றும் கூறினார்.


இந்த PPE தொகுதியில், உயர் தரமான 12,000 கவரோல் கருவிகளும், 200,000 கிளவுஸ்களும் அடங்கியுள்ளன. இவை 'அன்சல்' என்ற அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் மூலம் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட 130,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் தொகுதிகளாகும். COVID-19 பரவுதலைத் தடுப்பதற்கான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இவை அமைந்திருக்கும்.

இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தினால் இரண்டாவது முறையாக இந்த PPE தொகுதி வழங்கப்படுகிறது.

இலங்கையில் COVID-19 க்கு எதிராக செயற்படுவதற்கு அவுஸ்திரேலியா 4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இவற்றில் சுகாதார அமைச்சுக்கு தேசிய ஆய்வு கூடங்களை வலுப்படுத்த உதவுதல், நாட்டின் பொது மக்களுக்குத் தேவையான கட்டாய உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு மற்றும் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதல் என்பனவற்றுக்கும் இந்த நிதியுதவிகள் பெற்றுக்கொடுக்கப்படவிருக்கின்றன.


No comments:

Post a Comment