Thursday, October 29, 2020

10,000ஐ நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள்:பேராபத்தை நோக்கிப் பயணிக்கின்றதா இலங்கை?

 

படம் :  டுவிட்டர்


கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பேராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றதா? என்ற கேள்வி பாமர மக்கள் தொடக்கம் புத்திஜீவிகள் வரை பல்வேறு மட்டத்திலும் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

விசேட மருத்துவர்கள் பலரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தமது உயர்ந்த தொழிலின் தார்மீக கோட்பாட்டின் படியோ என்னவோ நேரடியாக இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிவிக்கவில்லை. ஒருவர் பாரதூரமான நோய்க்குள்ளாகி அவரது உயிர் பிழைக்க 99  வாய்ப்பில்லாத போதும் எஞ்சியுள்ள ஒரு வீதத்தை மனதிற்கொண்டு கடவுளிடம் பிரார்த்தியுங்கள் நாம் எம்மால் இயன்றமட்டும் முயற்சிக்கின்றோம் என்று கூறுபவர்களல்லவா வைத்தியர்கள். அந்தவகையில் தான் தற்போது இலங்கையில் கொரோனா தொற்றின் ஆபத்தின் உண்மையான தாற்பரியம் தொடர்பாகவும் நேரடியான பதில்களைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

ஆனால் அண்மையில் வெளியான புள்ளிவிபரங்கள் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உலகளாவிய உதாரணங்களைக் கருத்தில் கொண்டால் இலங்கையில் கொரோனாவின் உண்மை நிலைமை என்ன என்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ் பரவல் பற்றிய உத்தியோக பூர்வமுடிவுகள் வெளியிடும்  www.covid19.gov.lk இணையத்தள தரவுகளின் படி இதுகாலவரையில் இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை 9,701  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4,142 பேர் ஏற்கனவே குணமடைந்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றவர்களின் எண்ணிக்கை 5,630 ஆகவுள்ளது.

நேற்றையதினம் பலியான மூவர் உட்பட இதுவரை மொத்தமாக 19 பேர் கொரோனாவால் இலங்கையில் பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை கொரோனாவால் பலியான இலங்கையர்களின் எண்ணிக்கை வெளிநாடுகளில் இறந்தவர்களையும் சேர்த்து கணக்கெடுத்தால் இதனைவிட பலமடங்கு அதிகமாகும். இம்மாதம் 5ம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின் படி  இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் பணியாளர்கள் 64 பேர் கொரோனாவிற்கு பலியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இன்றைய தினம் வெளியான தரவுகளுக்கு அமைவாக தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  5,630 ஆகவுள்ளது. இந்தத் தொகையைப் பார்க்கின்றபோது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களைப் பராமரிப்பதற்காக ஏற்கனவே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த படுக்கைகளின் அளவைவிட இருமடங்கைத்தாண்டியுள்ளது .



கடந்த ஒக்டோபர் 17ம் திகதி கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைவாக இலங்கையில் காணப்படும்   கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட வைத்தியசாலை படுக்கைகளின் எண்ணிக்கை 2,075 ஆக இருந்தது. அப்படியிருக்கையில் தற்போது 5,630  பேர் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகையில் ஏற்கனவே சுகாதாரக் கட்டமைப்பின் எல்லையைத் தாண்டி விட்டமை புலனாகும். 

இத்தாலி போன்ற சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் கூட அவர்களது வைத்தியசாலை படுக்கைகளின் அளவை விட தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமைகாரணமாகவே அதிகளவில் பல்லாயிரக்கணக்கான மரணங்கள் சம்பவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதன் காரணமாகவோ என்னமோ எதிர்வரும் நாட்களில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகக்கூடும் என  தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.

கொரோனா பரிசோதனைகளை நடத்தும் பிசிஆர் இயந்திரம் பழுதடைந்துள்ளமையினால் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண  இன்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே 20,000 வரையான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இதனால் தேங்கிக்கிடக்கின்றன. அந்த முடிவுகளும் வந்திருந்தால் எண்ணிக்கை பல ஆயிரங்களால் அதிகரித்திருக்கும் சாத்தியத்தை நிராகரித்துவிடமுடியாது. அதுஒருபுறமிருக்க பிசிஆர் பரிசோதனைகளை அடுத்து வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்கப்பட்டவர்களது முடிவுகள் வெளியாவதில் தாமதம் காணப்படும் நிலையில் அவர்களது அயலில்  குறுக்குத்தொற்று ஏற்படவாய்ப்புக்கள் உண்டு என சுட்டிக்காட்டப்படுகின்றது



அதனைத்தவிர மேல்மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் இன்று நள்ளிரவுமுதல் ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் இம்மாகாணத்தில் பணியாற்றும் பலரும் தமது  ஊர்களுக்கு கிளம்பிச் சென்று கொண்டிருப்பதால் தத்தம் பகுதிகளுக்கும் கொரோனாவை எடுத்துச் செல்லும்  வாய்ப்புக்கள் உள்ளதாக எச்சரிக்கப்படுகின்றது. ஏற்கனவே மினுவங்கொடை கொத்தணியால் ஒரளவிற்கு நாட்டின் பலபகுதிகளிலும் பரவியிருந்த கொரோனா பேலியகொடை மீன் சந்தைக் கொத்தணியின் காரணமாக நாட்டின் 23 மாவட்டங்களுக்கும் பரவியுள்ளநிலையில் தற்போது மேல் மாகாணத்தில் இருந்துபெருந்தொகையானவர்கள் கிளம்பிச்சென்றுகொண்டிருப்பது நிலைமையை மோசமாக்கக்கூடும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை..



No comments:

Post a Comment