Monday, October 5, 2020

மூன்றாவது முறையாகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர்!

 


ஆனமடுவ தென்னன்குரிய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரொருவர் மூன்றாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக இனங்காணப்பட்டிருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைச் சேர்ந்த புலம்பெயர் பணியாளரான இந்த இளைஞர் ஓகஸ்ட் 18ம் திகதி ஐக்கிய அரப இராஜியத்தில் இருந்து நாடுதிரும்பியவர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இவர் நாடுதிரும்பியவுடன் வெலிக்கந்த வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டபோது முதன் முறையாக கொரோனா தொற்றுக்கு   இனங்காணப்பட்டிருந்தார்.

வெலிக்கந்த வைத்தியசாலையில் இருந்து  வெளியேற அனுமதியளிக்கப்பட்டபின்னர் தென்னன்குரியவிலுள்ள இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுமாறு அந்த இளைஞர் பணிக்கப்பட்டிருந்தார்.

தனது தாயாருடன் சுயதனிமைப்படுத்தலில் இருந்தபோது கொரோனா வைரஸ் குணங்குறிகள் இனங்காணப்பட்டதையடுத்து செப்டம்பர் 17ம்திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பிசிஆர் பரிசோதனையின் போது இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.

அதன்பின்னர் இரணவிலவிலுள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையத்திற்கு அந்த இளைஞர் மாற்றப்பட்டிருந்தார்.

சுயதனிமைப்படுத்தலில் இருந்தபோது மீண்டும் சுகவீனமடைந்த இளைஞர் மீண்டும் சிலாபத்திலுள்ள கொரோனா வைரஸ் சிசிச்சை நிலையத்தில் ஒக்டோபர் இரண்டாம் திகதி  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. 

ஒருவர் மூன்று தடவைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது சந்தர்ப்பமாக இதுவே இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 3402 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

திவுலுப்பிட்டிய பகுதியில் நேற்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பி.சிஆர் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகிய நிலையில், மேலும்  69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக  இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 258 ஆக காணப்படுகின்றது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment