Sunday, October 4, 2020

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலை மரணங்கள்: காரணம் என்ன?

 


இலங்கையில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. உளரீதியாக பாதிக்கப்படும் அவர்கள் வாழ்க்கை போராட்டத்திற்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்ப்பதற்கு தீர்மானிக்கின்றனர். இலங்கையில் இளைஞர்களே அதிகளவில் பொருளதாரம் மற்றும் வேலைவாய்பின்மை போன்ற பிரச்சினைக்கு முகம்கொடுக்கின்றனர். 'சுமித்ரயோ' என்ற அமைப்பு இது தொடர்பில் ஆய்வுகளை நடத்தியுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 779 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். அவர்களில் 635 இளைஞர்கள் என்பதுடன், 144 பேர் யுவதிகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற வேலை, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறுதல், கடன் பெறுதல் போன்ற காரணங்களினால் உளரீதியாக பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை உயர்மட்டத்தில் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்ப வன்முறைகளினால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

இதேவேளை தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும்பான்மையானோர் அனுராதபுரம், வவுனியா, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என 'சுமித்ரயோ' அமைப்பு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கைக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் காண்பிக்கும் அக்கறை, அவதானம், புரிந்துணர்வு குறைவடைந்து செல்வதாலும் இந்த துர்பாக்கிய நிலை சிலருக் ஏற்படுவதாக தேசிய மனநல சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment