Sunday, October 11, 2020

அமெரிக்க இராஜாங்கச் செயலர் உண்மையில் இலங்கை வருகிறாரா? அமெரிக்க தூதரகம் கூறுவதென்ன?

 


இலங்கைக்கு உயர் மட்ட சீனத் தூதுக்குழு வந்துசென்ற சூட்டோடு சூடாக அமெரிக்க  இராஜாங்கச் செயலாளர்  மைக் பொம்பியோ  இம்மாத இறுதியில் இலங்கைக்கான அவரச விஜயமொன்றை முன்னெடுத்துவரவுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில வாரஇறுதிப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ' அவர் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது' எனக் கூறியுள்ளார்.

இதன் உண்மைத்தன்மை பற்றியறிவதற்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் உத்தியோக பேச்சாளர் நான்ஸி வன்கோர்னிடம் வினவியபோது 'இந்த வேளையில் இந்தப்பயணம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக  எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. எந்தவொரு உயர் மட்ட விஜயம் தொடர்பான தகவலும்  உறுதிசெய்யப்பட்ட பின்னர் இராஜாங்கத்திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

டுவிட்டர் மற்றும் வார இறுதி ஆங்கிலப்பத்திரிகை தரவுகளுக்கு அமைய எதிர்வரும் 28ஆம் திகதி அமெரிக்க  இராஜாங்கச் செயலாளர்  மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

நெருக்கடியை சந்தித்துள்ள MCC -மிலேனியம் சலஞ் உடன்பாடு மற்றும் SOFA சோபா எனப்படும் படைத்துறை உடன்பாடு போன்றவை தொடர்பில் பொம்பியோ பேச்சுக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைவந்து திரும்பியுள்ள நிலையிலேயே அமெரிக்காவும் பலம் பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment