Saturday, October 17, 2020

கொரோனா காலத்தில் பரப்பப்படும் ஐந்துவகையான போலிச் செய்திகளை அறிவீர்களா?

 




மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையை மையப்படுத்தி  2000ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில தினங்களில் உறுதிசெய்யப்பட்ட நிலையில்போலிச் செய்திகளும் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்துச்செல்வதை மீண்டும் அவதானிக்க முடிகின்றது. 

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் திவுலபிட்டியவைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்மணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரைப் பற்றிக்கூட  பல்வேறு போலிச் செய்திகள் பரப்பப்பட்டன. அவரது நடத்தையைச் கேவலப்படுத்தியே  போலிச்செய்திகள் கட்டமைக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்ட தனியார் ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்து சென்ற விடயத்திலும் போலிச்செய்திகள் உலாவின. ஆனாலும் மினுவங்கொடையிலுள்ள தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வரவில்லை என்பதை அறிக்கை மூலம் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியிருந்தது. 

கடந்த ஒரு வாரகாலப்பகுதிக்குள்ளாக இலங்கை அரசாங்கமே போலிச்செய்திகள் தொடர்பாக அறிக்கை விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டமை நினைவிருக்கும் . மினுவங்கொடை பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட உடன் நாடு முழுவதும் ஊடரங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்களை மறுதலித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினர் அறிக்கையொன்றை விடுத்திருந்தனர்.

இதனைத்தவிர பாடசாலைகள் கல்விநிலையங்கள் விளையாட்டு   நிறுவனங்கள் வைத்தியசாலைகள்  என பரந்துபட்ட ரீதியில் கொரோனா பரவலுடன் தொடர்புடைய போலிச்செய்திகள் உலவிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அதில் நாட்டின்  பாராளுமன்றத்தையே போலிச் செய்தி விட்டபாடில்லை  . கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா என்று போலிச் செய்தியை பரப்பிவிட்டார்கள்.உண்மையில் பணியாளரொருவரின் உறவினருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவினர் விளக்கி அறிக்கை விட்டிருந்தனர்.

இப்படியான போலித்தகவல்கள் அடுத்துவரும் காலப்பகுதியில் அதிகரித்துச்செல்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம்

கொரோனாவுடன் தொடர்புடைய போலிச் செய்திகள் என்பது ஐந்து வகையாக வரும் என்பதை போலிச்செய்திகள் தொடர்பாக ஆராயும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட  ஊடக அமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.





1. Content 'Recontextualised'
ஒரு உள்ளடக்கத்தை  வேறு காலகட்டத்திற்கு வேறு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரியாக வடிவமைக்கும் போலிச் செய்திகள் . இதற்கு உதாரணமாக கூறுவதெனில் பிரண்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவிலுள்ள அதன் தொழிலாளர்களை இலங்கைக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி விமானங்கள் மூலம் அழைத்துவந்த விடயத்தை வைத்துக்கொண்டு  அவர்களை கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ள மினுவங்கொடை தொழிற்சாலைக்குத் தான் கொண்டுவந்தார்கள் என மாற்றம் செய்து செய்தியாக பிரசுரிப்பது. முன்னர் நடைபெற்ற ஒன்றை இப்போது நடைபெற்றது மாதிரியாக காண்பிப்பதும் இதில் அடங்கும் . 

2. Narrative 'Hijacking'  
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றபோது  சீனாவும் உலக சுகாதார ஸ்தாபனம் தான் இதற்கு காரணம் என்ற வகையில் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்திவிடும் ட்ரம்ப் நிர்வாகத்தின்  நடவடிக்கையை இதற்கு உதாரணமாக சொல்லமுடியும். அதுபோன்று இலங்கையில் புதிய தொற்று அதிகரிப்பிற்கு ஒரு தரப்பை குற்றம் சாட்டும் போது வேறுதரப்பை நோக்கி கவனத்தை சிதறடிக்க போலிச்செய்திகள் வடிவமைக்கப்படலாம்.


3. Hate Engine Optimazation
கொரோனா பரவலுக்கு ஒரு சமூகம் ஒரு பிரதேசத்தினர் ஒரு இனக்குழுமத்தினரே காரணம் என்ற வகையில் பரப்பப்படும் போலிச்செய்திகள். 

இலங்கையில் கொரோனாவிற்கு காரணம்  இத்தாலியில் இருந்தவந்தவர்களே என்று ஒரு காலத்தில் வெறுப்பு பரப்பப்பட்டது. பின்னர் கடற்படையினரே காரணம் என்று பரப்பப்பட்டது. பின்னர்  முஸ்லிம்களே காரணம் என்று பரப்பப்பட்டது. தற்போது தனியார் ஆடைத்தொழிற்சாலையே காரணம் என்று பரப்பப்படும் போலிச்செய்திகளைக் குறிப்பிடலாம் . குறித்த தரப்பினர் மீது வெறுப்பை அதிகரிக்கும் வகையில் இவ்வாறான போலிச்செய்திகள் பரப்பப்படுகின்றன. 

4. Fake accounts 
போலி ஃபேஸ்புக்  டுவிட்டர் கணக்குகளை உருவாக்கி அதிலிருந்து போலியான தகவல்களை பரப்பும் வகையான போலிச் செய்திகள். ஒக்டோபர் 6ம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் கடிதத்தலைப்பை ஒத்த கடிதத்தலைப்பில்  பரப்பப்பட்ட போலித் தகவலை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்ததகவலைப்பரப்பியதற்காக 18வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டமை அறிந்ததே. ஒக்டோபர் 6ம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் கடிதத்தலைப்பை ஒத்த கடிதத்தலைப்பில்  பரப்பப்பட்ட போலித் தகவலை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்ததகவலைப்பரப்பியதற்காக 18வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டமை அறிந்ததே. 

5. Manipulated Media 
ஒரு உண்மையான விடயத்தில் சில திரிவுகளைச் செய்து இவ்வாறான போலித் தகவல்கள் உருவாக்கப்படுகின்றன.  பிரபல ஹொலிவுட் நடிகர் டொம் ஹாங்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகி அவுஸ்திரேலியாவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் கையிலே ஒரு கரடிப்பொம்மையை வைத்து விளையாடுவது போன்று செய்தியை பிரசுரித்திருந்தார்கள். இதில் அவர் வைத்தியசாலையில் இருந்தமை உண்மை ஆனால் கரடிப்பொம்மை திரிவு. இப்படி பல உதாரணங்கள் உள்ளன. 

எனவே இவ்வாறானதும் இதற்கும் மேலானதுமான போலிச்செய்திகள் தொடர்பாக விழிப்பாக இருப்பதன் மூலம்  நாமும் நிர்க்கதியாகி நம்மைச் சார்ந்தவர்களையும் நிர்க்கதியாவதிலிருந்து பாதுகாப்போடு இருப்போம். 








அருண் ஆரோக்கியநாதன் எழுதிய இந்தக்கட்டுரை 11.10.2020 ஞாயிறு வீரசேகரியில் பிரசுரமாகியது 


No comments:

Post a Comment